தற்போதைய தேர்தல் சூழலில் கட்சிகளையும், அவர்கள் நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு யார் நல்ல தலைவர் என்பதற்கும், எது நல்ல கட்சி என்பதை அறிந்துகொள்ள வள்ளுவரும், சாணக்கியரும் நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( 381)
படை, குடி, செல்வம், அமைச்சர், ஆலோசனை பெற நல்ல நட்பு, கோட்டை என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்கம் எனப்படுவான் என்கிறார் வள்ளுவர்.
சுவாமி அமாத்யா ஜன்பதா துர்க் கோஷா தண்ட மித்ரா இதி ப்ரக்ரிதய (6.1.1 அர்த்த சாஸ்த்ரம்)
தலைவர், மந்திரி, குடி, அடிப்படை வசதிகள், செல்வம், படை, நல்ல நட்பு ஆகிய ஏழும் உரியது அரசு என்கிறார் சாணக்கியர்.
வள்ளுவர் அரசனின் இலக்கணம் வகுக்கிறார்.
சாணக்கியர் அரசினை வரைவிலக்கணம் வகுக்கிறார்.
வள்ளுவர் தலைவன் என்ற தனியொருவனைப் பற்றிப் பேசுகிறார்!
சாணக்கியர் அரசு என்ற கட்டமைப்பின் இயல்பு பற்றிப் பேசுகிறார்
ஆக ஒரு நல்ல கொள்கையுடைய தலைவருக்கும் வழிகாட்டும் அறிவு சொல்லும் ஆலோசகர் குழு முதல் நிபந்தனை!
அரசன் வகுக்கும் கொள்கை குடிமக்களுக்கானதாக இருக்க வேண்டும். அந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்த செல்வமும், அதைப் பாதுகாக்கும் அரணாக கொள்கையைக் காப்பாற்றும் படையும் இருக்க வேண்டும்!
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் ஒரு சிற்றரசாக எடுத்துக்கொண்டு மேற்கூறிய அமைப்பை ஆராயலாம்.
கட்சித்தலைவர் - சிற்றரசர்
அமாத்யர் - அமைச்சு - கட்சியின் ஆலோசகர்கள்
செல்வம் - கட்சி நிதி
அரண் - கட்சியின் தேர்த்தல் தொகுதி, வாக்குகளைக் காப்பாற்றும் பொறிமுறை, தேர்தல் பிரச்சாரம்
குடி - தமது தேர்தல் தொகுதி மக்கள்
படை - கட்சிக்காரர்
நட்பு - கட்சிக்கு வெளியே அவர்களுக்கு உதவக்கூடிய வெளியாட்கள், கூட்டுக் கட்சி!
கட்சித் தலைவர் தேர்தலில் வெல்ல எது மக்களின் மனதை வெல்லும் தந்திரோபாயம் என்பதை தனது மதியுரைஞர்களின் அறிவுரை கேட்டு, தனது மக்களின் மனமறிந்து உபாயம் வகுக்க வேண்டும். மக்களின் மனதை அறியாமல் தேர்தலிற்கு நிதி அவசியம் என்ற மயக்கத்துடன் தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்தாலோ, மக்களால் நன்கு மதிக்கப்படும், மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளரை ஒதுக்கினாலோ மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிவரும்.
அதுபோல் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மனதையும் வெல்லாமல், இன்பமான, அமைதியான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் யதார்த்தத் தேவைகளுக்கு எதையும் அரசோ, கட்சியோ செய்யாமல் அரசியல் இலக்கினை நோக்கி தலைவன் முயற்சிக்கும் போது அவனிற்கு மக்களும், படைகளும் ஒத்துழைக்காது! ஆகவே மன்னன் - கட்சித்தலைவன் தனது குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் புரிந்துகொண்டு அவற்றை திறம்பட நிறைவேற்றி அதன்மூலம் அவர்கள் மனதை வெல்ல வேண்டும். அதன் பின்னரே அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.