ஒருமுறை திருமூலருடன் ஸோமநாதர் என்ற அகத்தியரின் சீடரும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு பெரிய மதம் பிடித்த யானை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. மரத்தைத் தாண்டிச் சென்றவுடன் இப்போது யானைக்குப் பின்னால் மரம் மறைந்து கொண்டிருந்தது. உடனே திருமூலர் அந்த சந்தர்ப்பத்தை வைத்து அவனுக்கு ஞானம் புகட்ட விரும்பினார்!
ஸோமா! இதிலிருந்து நீ உயர்ந்த இரகசியத்தை அறிந்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு நான்கடியில் பாடலைக் கூறினார்;
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே
இதைக்கூறிவிட்டு சரி உனது புரிதலைக் கூறுவாய் ஸோமா என்றார்;
மரத்திற்கு முன்னால் நிற்கும் போது மரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த மாமத யானை நாம் மரத்திலிருந்து நீங்கி மறுபக்கம் சென்றவுடன் மரம் யானையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது போல புலப்படுகிறது. நாம் மரத்திற்கு முன்னால் நின்று பார்த்தால் மரத்தில் யானை மறைந்து கொண்டிருக்கும்; யானைக்கு முன்னால் நின்று பார்த்தால் யானையில் மரம் மறைந்து கொண்டிருக்கும்.
இதுபோல நாம் ஐந்து பூதங்களாலான ஐந்து புலன்கள் மூலம் இந்த உலகத்தைப் பார்க்கும் வரை ஐந்து பூதங்களும் மரம் யானையை மறைத்தது போன்று அந்த பரமாகிய சிவத்தை மறைத்துக் கொண்டிருக்கும்!
எப்போது குருவின் அருள் சொரிய பரமாகிய சிவத்தை அறியும் தெளிவும், விழிப்பு கிடைத்து, புலன்களைத் தாண்டி அகவுணர்வினால் காணும் நிலை தியானத்தால் வாய்க்கும் போது நாம் மரத்தைத் தாண்டி இந்தப்பக்கம் வந்து மாமத யானையைக் கண்டாற்போல் பார்முதலாகிய ஐம்பூதங்களையும் தாண்டி பரமாகிய சிவத்தில் கலந்து போய் அனுபவமாகும்!
மரத்தில் யானை மறையும் நிலை ஐம்புலனால் ஐம்பூத உலகில் மனம் புறவழி அலையும் நிலை! யானையில் மரம் கரையும் நிலை ஐம்பூத புறவழி செல்லாது மனம் அகத்தில் அடங்கி பரமாகிய சிவத்தை உணரும் நிலை!
திருமூலர் சிறு புன்னகையை உதிர்த்தார்!
எனது புரிதல் சரியானதானதா குருவே என்றான் ஸோமன்!
சரி எது? பிழை எது? உனது நிலைக்கு விளங்கியதை நீ கூறுகிறாய்! புலன்களைத் தாண்டி, சலனமற்று அகத்தில் உனது சாதனையை தொடர்ந்து செய்துவா! அனுபவத்தில் அறிவாய்! அனுபவம் ஒன்றே உண்மையானது என்று ஆசி கூறினார்!
Post inspired by Dr. Lambotharan Ramanathan
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.