அறிவு விதைக்கப்பட வேண்டும்! ஒரு துறையில் அறிவைப் பெற்றவன் தன்னைப் போல் பலரை எப்படி உருவாக்கலாம் என்ற சிந்தனை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் பெற்ற அறிவினைப் புரிந்துக் கொள்ள முடியாத சமூகத்துடன் முரண்படும் ஒரு விரக்தனாகத் தான் இருப்பான்!
ஒரு பட்டதாரி ஒரு துறையில் உருவாகினால் அவன் தன்னைப் போன்று பல பட்டதாரிகளை அவன் சமூகத்திற்குள் உருவாக்கினால் தான் அவனைப் புரிந்துக் கொள்ளும் சமூகம் உருவாகும்.
ஒரு எழுத்தாளன் தன்னைப் போல் பலரை உருவாக்கினால் தான் அவன் எழுத்து வளரும்!
ஒரு உயர்ந்த நோக்கம் உள்ள அரசியல்வாதி தன்னைப் போல் கொள்கைப் பிடிப்புள்ள, சமூகத்தை முன்னேற்ற அதிகாரம் வேண்டும் எண்ணம் கொண்ட பலரை அவன் கட்சியிலும், சமூகத்திலும் உருவாக்கினால் தான் அவன் அரசியல் செய்ய முடியும்!
இங்கு பலர் அறிஞர்களாகவும், கலாநிதிகளாகவும் இருந்தும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தமது நேரத்தை தம்மைப்போன்ற கொள்கையுடையவர்களை உருவாக்கச் செலவழிக்கவில்லை!
தாம் வாழும் சமூகம் எம்மைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் முதலில் அந்தச் சமூகத்தின் அறிவு மட்டத்தை, சிந்தனை மட்டத்தை உயர்த்த ஆரம்பத்தில் தாம் பாடுபட வேண்டும், பின்னர் அதனால் உருவாகும் சூழலில் முழுச் சமூகத்தையும் படிப்படியாக முன்னேற்ற பொறுமையும், எறும்பூர கல்லும் கரையும் என்ற தொடர் முயற்சியும் அவசியம் என்பதைப் புரிய வேண்டும்! அப்படி இல்லாமல் எனது அறிவு உங்களை எல்லாரையும் விட அதிகமாக இருக்கிறது; நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போக்கில் செயற்படும் புத்திஜீவிகள் சமூகத்திற்கு குறைகூறுவதையும், விரக்தியடைவதையும் தவிர எதையும் தரமுடியாது.
மேலும் தான் இதைச் சாதித்து புகழடையவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுபவர்களும் எந்த நன்மையையும் சமூகத்திற்கு செய்துவிட முடியாது.
அதிகாரத்தில் இருப்பது பெரும் பொறுப்பு என்பதை உணராமல் அதிகாரம் ஒரு பெரும் பெருமை என்பது முட்டாள் தனம்! எமக்கு அதிகாரமும், அறிவும், பொறுப்புகளும் தரப்படுவது மற்றவர்களுக்கு உதவவே அன்றி நாம் மாத்திரம் வாழ அல்ல என்ற மனப்பாங்கு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.