{முற்பகுதி நேற்றுப் பதிவிடப்பட்டுள்ளது; கட்டாயம் படித்துவிட்டு இந்தப்பகுதியைப் படிக்கவும்}
பலமணி நேரம் தியானத்தில் கழிந்து விட ஸோமன் எழுந்துவிட்டான்; மூலநாதர் இன்னும் தியானம் கலையவில்லை. அன்றைய தியானம் அவன் தனது குருவாகிய அகத்தியரின் யோகம் பற்றிய உண்மையை அறிந்ததால் மனம் மிகவும் குதூகலமாக இருந்தது! எழுந்து சென்று நீராடி தனது காலைக் கடன்களை முடித்து கொண்டு தனது தினசரி தேவி பூஜைக்குத் தயாராகி வர மூலநாதர் தியானத்திலிருந்து விழிப்படைந்திருந்தார்.
என்ன ஸோமா பூசைக்கு தயாராகி விட்டாயா, அகத்தியரைப் பற்றி நாம் கூறிய இரண்டாவது பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் பூசைக்கு அமர்வாயாக; அது உன் அக அனுபவத்தை இன்னும் இனிமையாக்கும் என்று அன்புக் கட்டளையிட்டார்.
தங்கள் ஆணை என்று கூறிவிட்டு, கண்களை மூடி மூலநாதர் கூறிய பாடலை மனனிக்கத் தொடங்கினான்.
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.
கண்களை மெல்லியதாகத் திறந்து,
உடலில் காமாக்னி சுவாதிஷ்டானத்திலிருந்து ஒருவனின் பிராணனைப் போக்கிக் கொண்டிருக்கிறது; இதை ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும், அது போல் ஜடராக்னி மணிப் பூரகத்திலிருந்து மேலிருந்து கொட்டும் அம்ருதத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அக்னிகளையும் ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும். இந்த முறையைச் சொல்லித் தருவார் அகத்தியன் என்பதே அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன், அக்கினியை பிறப்பிக்கும் இடத்திலிருந்து வீணாகாமல் வளர்க்கும் உபாயம் அறிந்து மேல் நோக்கி வளரச்செய்யும் ஆற்றலும், அறிவும் உடையவர் அகத்தியர்.
கீழே இருக்கும் காமாக்னியும், ஜடராக்னியும் தோற்றம் பெறுவது மேலே ஆக்ஞாவில் இருக்கும் சிவாக்னியிலிருந்து, அதுவே அனைத்தினதும் தோற்றம், கீழிருந்து எம்மை பரிணாமத்தில் சுழற்றும் காமாக்னியும், ஜடராக்னியும் மேல் சென்று (பாலவன் - சிவன்) கலந்து சிவாக்னியில் மங்கவேண்டும்; இப்படி காமாக்னியையும், ஜடராக்னியையும் மேலெழுப்பி வடபுலமாகிய புருவமத்தியில் உள்ள சிவாக்னியில் கலப்பிக்கும் தவமுறை அறிந்த முனிவன் அவர்! இப்படி சிவாக்னியில் தன்னைப் பூரணமாக கலப்பித்ததாலே அவர் இந்தப்பிரபஞ்சத்தில் எங்கும் அறியப்படக்கூடிய ஆற்றலுடன் பேரொளியாக இருக்கிறார்.
சிவயோகத்தில் பூரணத்துவம் பெற்றதால் அவரை நினைக்கும் சாதகர்களுக்கு யோகத்தில் பூரணத்துவம் அருளும் பேரொளி என்று பொருள் ஐயனே!
என்று முடித்தான் ஸோமானந்தன்!
திருமூலநாதரின் முகம் சூரியப்பிரகாசமாக ஒளிர்ந்தது! ஸோம நாதா குருவின் திருவடியைத் தியானிப்பவர்களுக்கு குரு தனது யோகத்தில் சென்ற பாதைகள் எல்லாம் விளங்கும்! அத்தகைய சிறந்த பக்தியைக் கொண்டிருக்கிறாய்! எனது பரிபூரண ஆசிகள்! தற்போது உனது தேவி பூஜைக்குச் செல்! காலம் வரும் போது தேவி பூஜையின் இரகசியங்களையும் சொல்லித்தருகிறோம் என்று ஆசி கூறினார்!
திருமூல தேவரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கி ஸோமன் தனது பூஜைக்குத் தயாராகினான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.