இதுவும் கடந்து போகும்!
தவறுகளை அளவுக்கு மீறி பெரிதாக்கி எமது உணர்ச்சிகளைக் காட்டும் போது அந்தத் தவறு செய்பவன் சிந்தித்து திருந்தும் ஆற்றலையும் இழக்க வைத்து, சுட்டிக் காட்டுபவனின் சரியும் பிழையாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது.
ஒரு உணவு விடுதி தமிழ் மொழியில் உரையாடக் கூடாது என்று அறிவுறுத்தல் செய்த விஷயத்தை சுட்டிக்காட்டி சரியான புரிந்துணர்வு வந்தவுடன் ஒரு சம நிலைக்கு கொண்டு வந்து ஒத்திசைவை ஏற்படுத்தி விட்டு நாம் எமது வேலையைப் பார்க்க வேண்டும்.
உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு அதிகமாக தாக்கி அதளபாதாளத்திற்கு உன்னைத் தள்ளுவோம் என்று புத்தியில்லாமல் கூவிக் கொண்டு குழிவெட்டினால் தவறு செய்தவனுக்கு பாதிக்கப்படுகிறான், அவன் நம்மாள், அவனுக்கு உதவுகிறோம் என்று பெரிய கூட்டம் கிளம்பி தவறையே சரி என்று நிறுவி எம்மைக் குழிக்குள் வீழ்த்தும். அதன் பிறகு அவனை வீழ்த்துகிறோம் நாம் என்று இந்த சுழற்சி தொடரும். பிணைத்த மாடுகள் இரண்டு செக்கைச் சுற்றும் நிலைதான் இறுதியில். முன்னேற மாட்டோம்.
மக்களை உசுப்பேத்தி உணர்ச்சிக்குள் வைத்திருந்தால் தான் காரியம் சாதிக்கலாம் என்ற நுண்மை தெரிந்தவர்கள் இப்படி புத்தித் தெளிவிற்குள் மக்கள் வருவதை விரும்புவதில்லை!
தவறு, தவறைச் சுட்டிக் காட்டுதல், தவறைத் திருத்துதல், அனைவருமாக ஒன்றிணைந்து முன்னேறுதல் என்று இருக்கும் சிந்தனைப் பண்பு சமூகத்திற்கு ஆரோக்கியம்.
தவறு, தவறைச் சுட்டிக்காட்டுகிறோம், மன்னிப்புக் கேட்கிறான், மன்னிப்பை நாம் ஏற்கமாட்டோம், அவனைப் பழி வாங்குவோம், அழிப்போம் என்று நாம், சரி நீ அழிக்க முனைந்தால் அதை நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனும் சவால், அதற்கு ஆதரவாக சில முட்டாள் கூட்டங்கள், கருத்து மோதல்கள், நேர விரயம், இறுதியில் இதன் பெருவடிவம் கலவரம், வன்முறை, இன முரண்பாடு!
மனிதனுக்குள் இருக்கும் பரிணாமத்தின் பிந்திய வளர்ச்சியடையாத உணர்ச்சிவசப்பட்ட மூளையின் செயற்பாட்டில் இருந்து வெளி வந்து மேல் மூளையின் மூலம் புத்துருவாக்க சிந்தனையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி மனிதன் பழக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.