சரஸ்வதி தியானம் - 02
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நவராத்ரியென்றாலே பள்ளி நாட்களில் சரஸ்வதி பூசை தொடங்குகிறது என்றுதானே சொல்லப்படுகிறது.
பாடசாலை ஞாபகத்தில் இருப்பது சகலகலாவல்லி மாலை! இதைப் படித்திருப்போம், பொருளுணர்ந்து சிந்திக்க ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு!
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
பதம் பிரித்தால்,
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ என்றால் வெள்ளைத் தாமரையில் பாதங்களை வைத்திருப்பவளே உனது பாதங்களை எனது வெள்ளை உள்ளத்தில் இருத்தினால் அதன் ஆற்றலால் எனது உள்ளம் குளிர்ச்சியுள்ள தண் தாமரையாக மாற அருள் புரியமாட்டாயா? என்பதே பொருள்.
தாமரை என்பது யோகத்தில் எமது உடலில் உள்ள சக்கரங்களைக் குறிப்பது. இந்த சக்கரங்களில் எமது உடலிற்கு பிரபஞ்ச சக்தி இறங்கும் சக்கரம் சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் சக்கரம், ஸ்தூலத்தில் இது மூளையைக் குறிக்கும். இங்கு வெண்தாமரை என்பது தூய எண்ணங்கள் நிறைந்த மூளை என்று பொருள் கொள்ளலாம். எப்படி மூளை தூய எண்ணங்களால் நிறையும்? உனது பாதம் அந்த வெண்தாமரையாகிய எனது மூளையில் அருட்கிரணங்களைப் பாய்ச்சினால் எனது மூளையில் எழும் எண்ணங்கள் தூய்மையாகி, வெள்ளை உள்ளம் வாய்க்கும். இப்படி உன் பாதங்கள் எனது மூளையில் அருள் கிரணங்களைப் பாய்ச்சினால் அந்த வெண்தாமரை தண் தாமரையாகும்.
தண் என்றால் குளிர்ச்சியாகும், மூளை குளிர்ச்சியடைந்தால் சிந்திக்கும் திறன் பெருகும். மனம் ஒருமையடையும், எல்லாக்கலைகளையும் கற்றும் ஆற்றல் இலகுவாகப் பெருகும். மூளையில் எண்ணங்கள் ஒழுங்கில்லாமல் கொதித்துக்கொண்டிருந்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆகவே மூளை குளிர்ச்சியடைதல் என்பது மூளையின் சம நிலை குலையாத சிந்தனை செய்யும் ஆற்றல், இந்த ஆற்றலே சரஸ்வதி.
ஆக எமது சஹஸ்ராரத்தில் தேவியை குருவாக அவள் பாதத்தை அந்த வெண்தாமரையில் வைத்து தியானிக்க எமது மூளை குளிர்ந்து தண்தாமரையாகும்.
அடுத்து சக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் என்ற வரியில் சகம் ஏழையு அளித்தவன் பிரம்மா, அதை உண்டு ஆலிழைமேல் உறங்கிக் காப்பவன் விஷ்ணு
பித்தாக அழிப்பவன் சிவன்!
ஏழு உலகையும் படைப்பதற்கு நுண்மையான அறிவு தேவை, அந்த அறிவு நீ!
காப்பவன் ஓய்வாக அமைதியாக இருக்கவேண்டும்! அப்படி அமைதியாக இருப்பவனால் மட்டுமே அனைத்தையும் பொறுமையாகக் காக்க முடியும். அதனால்தான் விஷ்ணு யோக நித்திரையில் இருக்கிறார் என்று சுட்டினார்கள். அமைதியாக நடப்பதைப் பார்த்துக்கொண்டு குளிர்மையாக, பொறுமையாக இருப்பவனால் மட்டுமே மற்றவர்களைக் காக்க முடியும். அதனால் உண்டான் உறங்க என்று விஷ்ணுவைக் குறிப்பிட்டார். இப்படி விஷ்ணு சலனப்படாமல் அமைதியாக பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்து செயல்கொள்ள மூலமாக இருக்கின்ற அறிவு நீ! இந்த அறிவு சக்தி இருப்பதால் தான் விஷ்ணு எந்த சலனமும் இன்றி அமைதியாக யோக நித்திரையில் இருந்து தனது காத்தல் தொழிலைச் செய்கிறார்.
ஒழித்தான் பித்தாக என்றால் அழித்தலைச் செய்யும் ருத்திரன் அழிப்பதற்கு ஆக்ரோஷமாக பித்தாக இருக்க வேண்டும். இந்த அழித்தலை செய்வதற்கும் தகுந்த அறிவு வேண்டும். அழித்தலும் ஒரு ஒழுங்கில் சம நிலை கெடாமல் இருக்க வேண்டும். இப்படி ருத்திரன் பித்தாக அழிக்கும் போதும் அதை சரியான ஒழுங்கில் செய்வதற்குரிய அறிவினைத் தருபவளும் நீயே!
பிரம்மா, விஷ்ணு ருத்திரன் மூவருக்கும் அவர்கள் தொழிலைச் செய்ய அறிவுசக்தியாக இருக்கும் உன்னை கண்டு கொண்டவன் பிரம்மா! அவனுக்கு நீ சுவை கொள்ளும் கரும்பாக, இனிமையாக இருக்கிறாய் சகல கலைகளிலும் வல்லமையுள்ள சகலகலா வல்லியே!
இதன் யோக நுட்ப பொருள்: சரஸ்வதி என்பது மனதின் எண்ணங்களை ஒழுங்குபடுத்து சக்தி, ஒழுங்கு! Order and perfection is Saraswathi! இதை ஒருவன் தன்னில் இருத்த அவன் மனம் ஒழுங்காக செயற்பட்டு அவனது மூளையை குளிமைப்படுத்தி மனதினைத் தூய்மைப்படுத்தி வெள்ளை உள்ளத்தினைத் தரும். இந்த அறிவு சக்தியே படைத்தல் காத்தல் அழித்தல் என்பவற்றிற்குரிய ஒழுங்கினை ஏற்படுத்துகிறது. இதை ஒருவன் மனதில் பெறுவதன் மூலம் எல்லாக்கலைகளிலும் வல்லவனாகிறான். இதுவே சரஸ்வதி உபாசனையின் அடிப்படை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.