முதல் பாடலில் தேவியின் பாதங்களை தியானிக்கும் வழியைக் கூறியவர் அடுத்த பாடலில் சரஸ்வதி தேவியின் உருவை எப்படி தியானிக்க என்ன பலன் என்று கூறுகிறார்.
கற்றறிந்த அறிஞர்கள் வேண்டுவதெல்லாம் அறிஞர்களுடனும், மக்களுடனும் உரையாடும் போது தமது சொற்கள் இனிமையாக கேட்பவர்களுக்கு இதமாக சொற்சுவையுடனும், மற்றவர் மனதை ஈர்க்கும் வண்ணம் அர்த்தமுள்ளதாக பொருளுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதே!
இப்படி சொற்கள் சுவையுடையதாகவும், பொருளுடையதாகவும் இனிமையாக இருக்க தமிழ் வகுத்த இலக்கணம் தான் கவிதையின்பம் என்பது!
இப்படி மனதிற்கு இன்பம் தரும் கவிதைகளை நான்கு வகையாக பகுத்துள்ளனர், ஆசுகவி, மதுர கவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பவை இவை. இந்த நான்கு வகைக்கவியும் பாடும் வல்லமை உள்ள ஒருவனது வார்த்தைகளும், சொற்களும் மற்றவர்கள் மனதிற்கு இன்பம் தரும், இரசிக்கக்கூடிய சுவையுடையதாக இருக்கும். இப்படியான சொற்களையுடைய கவி பாடவே எல்லாப் புலவர்களும் விரும்புகிறார்கள். இவற்றைப் பாட என்னைப்பணித்தருள்வாய் என்று முதல் இரண்டு வரிகளில் பாடி அதன் பின்னர் சரஸ்வதி தேவியின் அழகை வர்ணிக்கிறார்.
பங்கையாசனத்தில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். முதல் பாடலில் உனது பாதங்களை எனது சஹஸ்ராரத்தில் வைத்து எனது மூளையை தண்தாமரையாக குளிர்ச்சியாக்கு என வேண்டியவர் இப்போது அந்த தாமரையில் நிரந்தரமாக சரஸ்வதி அமர்ந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இதை யோக மொழியில் கூறுவதானால் ஒருவனது எண்ணங்கள் சீராகி, மூளை குளிர்மையாகி சம நிலையுடைய மனதை அடைந்துவிட்ட நிலை, சரஸ்வதியின் ஆற்றல் அவனில் நிலைகொண்டுவிட்ட நிலையைக் குறிக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்றால் தேவியை கீழ்வருமாறு தியானிப்பதன் மூலம் என்று அடுத்த வரியில் தியானிப்பதற்குரிய வழிமுறையைக் கூறுகிறார்.
வெள்ளைத் தாமரையில் அமர்ந்த அழகிய பொன்னிற உருவம், உடலோ மெல்லிய பொற்கொடி, அழகிய குன்றுகள் போன்ற மார்பு, ஐந்து வகையாகவும் தலையை அலங்கரித்துக்கொள்ளக்கூடிய காடு போன்று அடர்ந்த கூந்தல் இந்த அழகிய உருவைச் சுமந்த கரும்பின் இனிய சகலகலாவல்லியே என்று தேவியை கீழ்வரும் பாடலில் தியானிக்க வேண்டும்.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கையாசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகலகலாவல்லியே!
இப்படி தியானிக்கும் சாதகன்/மாணவன் சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டு மொழியைப் பிரயோகிக்கும் ஆற்றலைப் பெறுவான் என்பது இந்தப் பாடலின் தியான விளக்கம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.