பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகலகலா வல்லியே!
ஆறாவது பாடல் இன்னும் என்ன கலைகளில் தான் தேர்ச்சி பெறவேண்டும் என்ற வேண்டுதலும், சரஸ்வதியின் அறிவாற்றல் ஐம்பூதங்களிலும் நிறைந்து நிற்கிறது என்ற பாவத்தை உணர்ந்து பாடுகிறார்.
இசை என்பது மனதினை ஒருமைப்படுத்தி ஒலிகளை மனதிற்கு இதமாக வரும் வகையில் கோர்த்து எழுப்பப்படும் ஒரு நுண்ணிய கலை. இந்த இசையில் பண் என்பது தமிழர்கள் வகுத்த ஒழுங்கு. தற்காலத்தில் இராகம் என்று வழங்கப்படுவதற்கு ஒத்ததே பண் எனப்படும். பாடலின் இனிமையைப் பண் தரும். பண் இருப்பதால் மனம் லயமடையும். மனம் லயமடைந்தால் இன்ப உண்ரச்சி தோன்றும். இதுவே இசை மனிதனில் உண்டாக்கும் தாக்கம். ஆகவே மற்றவர்கள் மனதிலும், தனது மனதிலும் இன்ப உணர்ச்சி உருவாக்க அவசியமான கலை இசை, அந்த இசை இயங்குவது பண் எனப்படும் இராகத்தில் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஒலியமைப்பின் அடிப்படையில்.
மனதிற்கு இசை என்றால் உடலுக்கு பரதம். பாவத்தையும் {உணர்ச்சியையும்} ராகத்தையும் தாளத்தையும் உடலில் வெளிப்படுத்தும் கலை பரதம். ஒருவருடன் உரையாடாமல் உடல் மொழியில் கருத்தை தெரிவிக்கும் ஆற்றலைத் தரும் கலை பரதம். பரதம் பயில்வது மனதையும் உடலையும் இணைக்கும் ஆற்றலைத்தரும். மனதும் உடலும் இணைந்து செயல்புரியும் ஆற்றலைப் பெற்றால் அவர்கள் மிகுந்த சக்தியுடைய மனிதர்களாக இருப்பார்கள். யோகமும் இதையே சாதிக்கிறது. ஆனால் யோகத்தின் நோக்கம் இறைவனை அடைதல், ஆனால் பரதத்தின் நோக்கம் மனதையும் உடலையும் சம நிலைப்படுத்தி இன்ப உணர்ச்சி பெறல். இப்படி ஒருமை பெற்ற மனத்தினதும், உடலினதும் ஆற்றலால் தெய்வ நிலை பெறவேண்டும் என்பதாலேயே எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவம் ஆடவல்லானாகவும் நடராஜனாகவும் குறிக்கப்பட்டிருக்கிறார்.
மனதையும், உடலையும் இணைத்து ஒழுங்கமைக்கும் பண்ணும் பரதமும் அறிந்து தன்னை வலுப்படுத்திய ஒருவன் தனது அறிவினை வலுப்படுத்த கல்வியும் நல்ல நூற்களையும் கற்க வேண்டும்.
ஒருவனுக்கு மனதையும் உடலையும் ஒழுங்குபடுத்தும் பண்ணும், பரதமும், அறிவை வளர்க்கும் கல்வியும் நல்ல நூற்களது கற்கையும், இனிமையான மொழியாற்றலும் வருமானால் உலகில் பெருமதிப்பு உள்ளவனாக இருப்பானல்லவா?
ஆகவே இவை நான்கும் எண்ணும் போது எளிதாக ஒருவனுக்கு வாய்த்தால் அவன் இந்த சமூகத்தில் இன்பமாக வாழும் நிலை பெறுவான். இப்படி ஒருவன் தனது உலக வாழ்க்கையை சரிசெய்து இன்பமுடையதாக்கினாலும் பிரபஞ்சத்தின் பேரறிவினைப் பெறாமல் அறிவின் எல்லை பூர்த்தியடையாது. ஆகவே அவன் எழுதா மறை எனும் வேதங்களின் உட்பொருளை அறியும் ஆற்றலுள்ளவனாகவும் இருக்கவேண்டும். பிரபஞ்சத்தின் மூல அறிவு சக்தியான சரஸ்வதியின் அருள் இல்லாமல் ஒருவனால் வேதங்களின் உட்பொருளை அறிந்துகொள்ள முடியாது. ஆகவே எழுதாமறையின் அறிவும் நல்காய் எய்த வேண்டும் என்றார்.
அடுத்த வரிகள் ஸ்தூலப்பிரபஞ்சம் ஆக்கப்பட்டிருக்கும் பஞ்சபூதங்களிலும் அறிவு சக்தியாக சரஸ்வதி நிறைந்திருக்கிறாள் என்பதை உணர விண்ணும் புவியும், புனலும், கனலும் வெங்காலும் என்று ஐம்பூதங்களிலும் நிறைந்த அறிவு சக்தியே அன்பர்களின் கண்களிலும், மனதில் கருத்தாகவும் நிறைந்திருக்கிறாய் என்று பாடுகிறார்.
கண்களில் வழியே செல்லும் அனைத்துமே ஒருவன் மனதில் பதிந்து கருத்தாகிறது. இப்படி கண்கள் வழி ஏற்கும் கருத்துக்களை சீர்துக்கும் அறிவு சக்தி சரஸ்வதி. ஆக கண்களில் சரஸ்வதியின் ஆற்றல் இல்லாமல் கருத்து மனதிற்கு மூளைக்குப் பதிவதில்லை.
இந்தப் பாடல் சரஸ்வதியிடம் உலக வாழ்க்கைக்குத் தேவையான இசை, நடனம், பல நூற்கல்வியில் சிறந்து விளங்கும் அறிவும், ஆன்ம முன்னேற்றம் பெற வேத நூல் அறிவும் பெற வேண்டுகிறது. இதற்கு அன்னையை ஐம்பூதங்களில் கலந்து நிறைந்த அறிவு சக்தியாகவும், எமது கண்களிலும் நிறைந்திருக்கும் சக்தியாகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.