சரஸ்வதி தியானம் - 05 {சகலகலாவல்லி மாலை பாடல் - 04}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய்
வாகும் பெருகப் பணித்தருள்வாய்
வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழுச் செல்வமும்
தொண்டர் செந் நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே!
இந்தப் பாடலில் தனக்கு என்ன வேண்டும் என்பதை உறுதியாகக் கூறிவிடுகிறார்.
முதல் வரியில் தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வி வேண்டும் என் கிறார். இதன் பொருள் என்ன? கற்கும் நூற்களை சீர்தூக்கி இது சரியான அறிவா என்று ஆராய்ந்து, அகத்தையும் புறத்தையும் ஒழுங்குபடுத்தும் கல்வி இருக்க வேண்டும்.
இந்த வரியில் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வரையறுக்கிறார்.
1) சீர்த்தூக்கி சரி பிழை என்ற அறிவைத்தரவேண்டும்.
2) அகம் புறம் இரண்டினையும் சீர்படுத்த வேண்டும்.
இது இரண்டும் நிறைந்த - தோய்ந்த கல்வி வேண்டும் என்கிறார்.
இன்று கல்வி என்பது பட்டங்கள் பெறுவது என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் முற்காலத்தில் வாழ்க்கை அகம், புறம் என்ற இரு பகுப்புகளாக ஏற்படுத்தி இந்த இரண்டையும் இன்பமாக வாழ்வதற்குரிய அறிவையே கல்வி என்று கூறினார்கள்.
அகம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இன்பமாக வாழ்வதற்குரிய, மன உணர்ச்சிகள் பற்றியது. இதைப் புறத்தில் உள்ளவர்கள் அறியமுடியாது. அதனால் இதனை அகம் என்றார்கள். இது வாழும் நிலத்தின் தன்மையுடன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வரக்கூடிய மன உணர்ச்சிகளைப் பற்றிய அறிவே அகத்துறை எனப்படும். இன்றைய காலத்தில் அகத்துறை அறிவில்லா இளைஞர்கள் தமது குடும்ப வாழ்க்கையை சீரழித்துக்கொள்வதைப் பார்கிறோம். பழங்காலத்தில் அகத்துறை அறிவு என்பது மிக முக்கியமான கல்வியாக கருதப்பட்டது.
புறத்துறை என்பது புறத்தே உள்ள மற்றவர்களோடு உறவு கொள்ளும் வாழ்க்கை பற்றியது. கல்வி, ஆட்சி, வணிகம், உழவு முதலான தொழில்கள் ஆகியவை அனைத்தும் புறப்பொருள்.
இந்த இரண்டு துறையிலும் தோய்ந்த அறிவு உள்ளவனே வாழ்வை இன்பமாக வாழ்வான். இன்றைய வழக்கில் கூறுவதானால் Personal life & Professional life என்று சொல்லலாம்.
ஆக குமரகுருபரர் Personal & Professional ஆகிய இரண்டு வாழ்க்கையும் சிறப்பாக இருப்பதற்குரிய அறிவினைத் தரவேண்டும் என்று இந்த வரிகளில் கூறுகிறார்.
அடுத்த வரிகள் "சொற்சுவை தோய் வாக்கும் பெருகப்பணித்தருள்வாய்" என்கிறார். அகவாழ்க்கையில் கணவன் மனைவியிடையே வார்த்தைகள் இனிமையாக இல்லாமல் கடுஞ்சொல் பேசி வாழ்வைக் கெடுத்துக்கொள்பவர்களையும், புறவாழ்க்கையில் தமது சொற்களை சரிவர பாவிக்காமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்பவர்களையும் பார்க்கிறோம். இரண்டு வாழ்க்கையிலும் சிக்கல் வராமல் சொற்கள் சுவை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
அடுத்த வரியில் "வட நூல் கடலும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந் நாவில் நின்று காக்கும் கருணைக்கடலே சகல கலாவல்லியே"
இன்று வடமொழியாகிய சமஸ்க்ருதத்தை தூற்றுபவர்களையே தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்கிறார். எழுபது எண்பது வருடங்களுக்கு முன்னர் பாரதத்திலும், இலங்கையிலும் பண்டிதர்கள் என்று சொல்லப்படும் மொழியறிஞர்கள் தமது தாய்மொழியிலும் சமஸ்க்ருதத்திலும் பாண்டித்தியம் பெற்றாலே அறிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார்கள். தமிழும் சமஸ்க்ருதமும், தெலுங்கும் சமஸ்க்ருதமும் என அவரவர் தாய்மொழிக்கு தகுந்த மாதிரி புலமை பெற்றிருந்தார்கள். இதற்கு தகுந்த காரணமும் இருந்திருக்கிறது. இன்று ஆங்கிலம் கல்விக்கு உகந்த academic language ஆக இருந்திருக்கிறதோ அக்காலத்தில் பல நூற்களும், அறிவியலும் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே அறிவைத் தேடும் அறிஞர்கள் சமஸ்க்ருதத்தையும் ஆர்வத்துடன் கற்றார்கள். குமரகுருபரர் வட நூல் கடல் என் கிறார், வடமொழியில் நூற்கள் நிறைந்திருக்கின்றன, அந்த அறிவை பெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது ஆகவே வட நூல் அறிவினைத்தா! என்றும் தனது தாய் மொழியாம் தமிழை செழுந்தமிழ் என்று கூறுகிறார்.
தனது மொழியின் பெருமையை விடாத அதேவேளை அறிவு நிறைந்த வடமொழியையும் கற்கும் ஆற்றல் தா என்ற இந்த அறிவைத் தேடும் மனப்பண்பில் தெளிவாக நிற்கிறார்!
அடுத்த வரி மொழியின் பலனைக் கூறுகிறார், பல மொழி தெரிந்தவன் உலகில் எங்கும் சென்று பிழைத்துக்கொள்வான். அந்த மொழியாற்றல் அவனை வாழவைக்கும். அப்படி மொழியாற்றலாக வாக்கில் சரஸ்வதி இருந்து எம்மை சரஸ்வதி கருணைக் கடலாக காக்கிறாள்.
இந்தபாடலில் ஒருவன் கற்கவேண்டிய கல்வி அகமும் புறமும் ஆகிய இரண்டினையும் செம்மைப் படுத்தும் அறிவு, அந்த அறிவு எது சரி எது பிழை என்று சீர்தூக்கிப்பார்க்கும் அறிவு, பின்னர் அந்த அறிவினை மற்றவர்களுடன் சுவையாக உரையாடி பகிர்ந்து இன்பமான வாழ்க்கையை அமைத்தல், தனது மொழியை மட்டும் அல்லாமல் அறிவினைப் பெறக்கூடிய மற்றைய மொழிகளையும் கற்றும் ஆற்றல் ஒருவனுக்கு இருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.
தற்போதைய காலப்பகுதிக்கு ஏற்ற வகையில் கூறுவதாக இருந்தால் ஒருவன் அகப்புற வாழ்க்கையைப் பற்றிப் படிக்க தமிழும், வேதங்கள் உப நிஷதங்களைப் படிக்க சமஸ்க்ருத அறிவும், அறிவியல் உலக நடப்புகளைப் படிக்க ஆங்கிலமும் வேண்டும் என்று கொள்ளலாம்.
ஆக ஒருவன் தேவையை தனது அகமும் புறமு செம்ம்மையாகும் அறிவும், மற்றவர்களுடன் சுவையாக உரையாடி நட்பு பாராட்டும் மொழியாற்றலும், அறிவு எங்கெல்லாம் நிறைந்திருக்கிறதோ அந்த மொழிகளை செம்மையாக கற்கும் ஆற்றலும் பெற தேவியை தியானிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.