சென்ற இரு பாடல்களிலும் சரஸ்வதி தேவியை தியானிக்க வழி சொன்னவர் அந்த தியானத்தால் தான் அடையும் இன்பத்தையும், தியானிப்பவரும் தியானிக்கப்படும் இறையும் வேறு இல்லை என்ற நிலையில் அடுத்த பாடலைப் பாடுகிறார்.
இந்தப் பாடலை குமரகுருபரரின் சரஸ்வதி தரிசனம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
உன்னை மனதில் இருத்தி எண்ணங்களைச் சீர்படுத்தி நால்வகைக் கவிகளும் பாட இந்த கடல் போன்ற, அமிழ்தம் போன்ற செழுந்தமிழில் மூழ்கிவிட்டேன்!
செழுந்ததமிழில் மூழ்குவதும் உன் அருட்கடலில் மூழ்குவதும் வேறு அல்லவே, ஆனாலும் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது, உனது அருளில் பரிபூரணமாக மூழ்கிவிட்டேனா என்று?
ஆனால் தோகையுடைய மயில் மழையைக் கண்டு ஆடுவதுபோல், நீ உள்ளம் தெளிந்து, நல்ல நூற்கள் எழுதும் புலமையுடையோர் கவி மழையைக் கண்டு மகிழ்வதைக் கண்டவுடன் நான் செழுந்தமிழில் மூழ்கியது உனது அருட்கடலில் மூழ்கியதுதான் என்று உணர்ந்து விட்டேன் என்று பொருள் பட கீழ்வருமாறு பாடுகிறார்;
அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே!
சகலகலா வல்லியே!
மொழியை ஆழ்ந்து கற்பவர்களது மூளை நரம்புப்பின்னல்கள் வலுவடைகிறது, மூளையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தற்போதைய மூளை ஆய்வுகள் நிருபிக்கின்றன. தமிழ் போன்ற செம்மையான மொழி மூளைக்கு இன்னும் ஆற்றலைத்தரும்! இப்படி செழுந்தமிழை ஆழ்ந்து கற்பதால் வரும் இன்பமே சரஸ்வதியின் பேரருளில் மூழ்கும் வழி!
கற்றலில் பெறும் இன்பமே சரஸ்வதியின் பூரண அருளைப் பெறும் வழி!
ஆகவே ஒரு சாதகன்/மாணவன் தினசரி புதுப்புது விஷயங்களைக் கற்று தனது மூளையினை இளமையாக வைத்திருப்பவன் சரஸ்வதி கடாக்ஷத்திற்கு உரியவன் என்பதில் ஐயமில்லை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.