பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே!
இந்தப் பாடல் நாம் எப்படி கற்கவேண்டும் என்று தெளிவைத் தருகிறது. பள்ளிக்கூடத்தில் நவராத்ரியிற்கு சகலகலாவல்லி மாலை படிக்கிறோம், அதன் பொருள் என்ன என்று ஒருபோதும் எண்ணிப் பார்ப்பதில்லை. பொருள் தெரியாமல் படிக்கும் எதுவும் வாழ்க்கைக்கு உதவுவதில்லை. மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் கடைசியில் இதைப்போல் ஒரு வரியை எழுதி வைத்தார், சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து" என்று, ஆகவே எமது முன்னோர்கள் மனிதனது மனம், மூளை எப்படிச் செயல் புரிகிறது என்பதை நன்கு ஆய்ந்து தெளிந்துதான் கலைகளை வகுத்திருக்கிறார்கள். பொருள் தெரியாமல் உருப்போடுபவர்களது ஞாபகம் நீண்டகாலம் இருப்பதில்லை என்பதை தற்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது. ஒரு விஷயத்தின் தொடர்பினை ஆராய்ந்து தெளிந்தவனது மனதில் அந்த குறித்த விஷயம் ஆழமாகப் பதிந்து பின்பு தேவைப்படும் நேரத்தில் ஞாபகசக்தியினூடாக எண்ணமாக எழுந்து உபயோகப்படும். ஆகவே சகலகலாவல்லி மாலையோ, சிவபுராணமோ, தேவாரமோ, அபிராமி அந்தாதியோ பொருள் தெரியாமல் படித்தால் பலனில்லை. பொருள் தெரிந்தால் அதனால் கிடைக்கும் பலனும் தெரியும்.
இதுவரை ஆறு பாடல்களுக்கு பொருள் புரிந்ததால் சரஸ்வதி தேவியின் தத்துவம், அவளை எமது எண்ணத்தில் இருத்தி தியானிப்பதாலும் கிடைக்கும் பலன் பற்றி தெரிந்து கொண்டோமல்லவா? ஆகவே எந்தப்பாட்டையும் பொருளுடன் தெரியவேண்டும், பொருள் தெரிந்தால் அதைப் படிப்பதால் பலன் என்னவென்று தெரியும்.
இப்படி பாட்டிற்கு பொருளும் அதன் பயனும் தெரியவேண்டும் என்றால் அவனிற்கு தேவியின் கடைக்கண் பார்வை கிட்ட வேண்டும் (ஆஹா.. இந்தப்பாட்டிற்கெல்லாம் பொருள் சொல்கிறேன் அல்லவா, எனக்கு அவள் கடைக்கண் பார்வை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டார் குமரகுருபரர் )
இப்படி தேவியின் கடைக்கண் பார்வை கொண்டு பெறும் ஆற்றலால் முத்தமிழ் என்ற இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றிலும் அமுதம் தெளித்தால் கிடைக்கும் அழியாத காவியங்கள் உருவாக வெள்ளை அன்னத்தில் வீற்றிருக்கும் பெண்ணே, சகலகலாவல்லியே உனதருளல்லாவா என்கிறார்.
இந்தப் பாடலுக்குரிய தியானம் வெள்ளை அன்னத்தில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியின் கடைக்கண் பார்வை ஒருவன் தன் மேல் படுவதாக பாவிக்க வேண்டும். இந்த பாவனை சரிவந்தால் அவன் பாட்டும் அதன் பொருளும், பொருளால் பொருந்தும் பயனும் அறிந்து சுவையான அமுதம் தெளித்த படைப்புகளை ஆக்கும் வல்லமை உள்ள கலைஞன் ஆவான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.