மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே
வெள்ளைக் குடை தர்மத்தின் சின்னம், தூய மனதுடன் வெண்குடைக்கு கீழமர்ந்து மண்ணை ஆளும் மன்னன் எனது பண் கண்ட அளவில் எனக்கு பணியவேண்டும் என்ற ராஜவசிய வேண்டுதல் வைக்கிறார்! ஏனென்றால் இது பாடப்பட்ட சந்தர்ப்பம் அத்தகையது.
இந்தக் காலத்தைப் போலவே அந்தக் காலத்திலும் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்திருக்கும் போல! டில்லி சுல்தானுக்கு தமிழ் தெரியாது, குருமரகுருபரரிற்கோ இந்தி தெரியாது! ஆனால் எப்படியாவது மூடிக்கிடக்கும் காசி விசுவநாதர் கோயிலை திறக்க வேண்டும். அதற்காக சுல்தானை மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொண்டு வேண்டுகோள் விடுக்க சுல்தான் "என்னுடன் பேசுவதற்குரிய மொழி தெரியாத உனக்கு உதவி செய்யமுடியாது என்று" அவமதித்து அனுப்பிவிட்டான். மனம் வெதும்பிய குமரகுருபரர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எதையும் செய்யாமல் எல்லா ஞானத்தையும் தரக் கூடிய சரஸ்வதியை உபாசித்து இந்த சகலகலாவல்லி மாலையைப் பாடி இந்தியும், உருதும் பேசும் ஆற்றலைப் பெற்று சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சுல்தானிடம் பேசி காசி விசுவ நாதர் கோயிலை வழிபாட்டிற்காக மீளவும் திறந்து பெற்றார் என்பது கதை!
ஆக குருமரகுருபரர் தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை தெளிவுறக் கற்று அதனால் பெற்ற செம்மையான தெளிந்த மனத்தினால் விரைவாக அயல் மொழியான இந்தியை துரிதமாகப் படித்துக்கொண்டார் என்பது புலனாகிறது. இன்றைய நவீன ஆய்வுகளும் தாய்மொழியை சிறப்பாக கற்பவர்களுக்கு இரண்டாவது மொழி கற்கும் ஆற்றல் இலகுவாக வரும் என்பது நிருபணமாகியுள்ளது.
மொழியைக் கற்றால் வரும் கூர்மையான மனமும் மூளையும் ஆற்றல் மிக்க மன்னனைப் பணிய வைக்கும் ஆற்றலைத் தரும்.
சகலகலாவல்லி என்பதை சகல கலைகளிலும் வல்லமை உடையவள் என்றே பலரும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திற்குரிய சூடாமணி நிகண்டு வல்லி என்றால் விரைந்து என்று பொருள் தருகிறது. ஆக சகல கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தருபவள் என்று பொருள். குமரகுருபரரிற்கும் விரைந்து இந்தி கற்கும் ஆற்றலைத்தந்தால் இந்தப் பொருளே பொருந்தி வருகிறது.
எல்லாக்கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தரும் அன்னையே பிரம்மன் முதல் பல்கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னைப்போன்ற கண்கண்ட தெய்வம் இருக்கிறார்களா என்று வியந்து போற்றுகிறார்.
இந்தப் பாடல் தொகுப்பிற்குரிய கதைப்படி டில்லி சுல்தானை தான் வசப்படுத்த வேண்டும் என்ற இச்சா சக்தியினை (will power) இந்தக் கடைசிப் பாடலின் முதல்வரியில் வைத்திருக்கிறார்.
இந்தப் பாடல் கற்கும் கல்வியால், சரஸ்வதியின் அருளால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை மாணவர்களுக்குத் தரும் ஒரு அரிய பாடல்!
இத்துடன் சரஸ்வதி தியானம் என்ற தலைப்பில் கடந்த நவராத்ரியின் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் அவளது ஆற்றல்கள் பற்றிய சிந்தனையும் முற்றிற்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.