சொல்விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை
கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு
காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே
சகல கலாவல்லியே
சொல்விற்பனம் என்பது மொழியையும் சொல்லியும் எப்படி திறமையாக உபயோகிப்பது என்று திறமை. இன்றைய காலத்தில் communication skill என்றும் சொல்லலாம். பலர் தமது அறிவை வெளிக்காட்டுகிறோம் என்று வார்த்தைகளைக் கொட்டுவதால் மற்றவர்கள் அவரை அறிவுடையவர்கள் என்று எண்ணிவிடமாட்டார்கள்.
சிலர் தமக்கும் முன் இருப்பவர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சிலும் சொல்விற்பனம் இருப்பதில்லை.
யார் சூழலுக்குத்தகுந்த சொற்களை மற்றவர்கள் கேட்கக்கூடிய வகையில் இனிமையாக திறமையாக, ஆழமாக, தெளிவாக கூறக்கூடிய வல்லமை இருக்கிறதோ அவனுக்கு சொல்விற்பனம் இருக்கிறது எனலாம். இப்படியான சொல்விற்பனம் சரஸ்வதியின் அருளால் வருவது.
அடுத்தது அவதானம், தற்கால நவீன மூளையியல் ஆய்வுகள் சாதாரணமாக ஒரு மனிதன் தனது முன் மூளையின் ஆற்றலில் நான்கு விஷயங்களை மாத்திரமே அவதானித்து கிரகிக்ககூடிய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்று கண்டறிந்துள்ளார்கள். முற்காலத்திலும், தற்காலத்திலும் சரஸ்வதி உபாசனையின் வல்லமையால் நாற்கவனகம் என்று நான்கு விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கக் கூடியவர்களும், எண்கவனகம் என்ற எட்டு விஷயங்களை கவனிக்கக்கூடியவர்களும், பத்து விஷயங்களைக் கவனிக்கக்கூடிய பத்துக் கவனகர்களும், பதினாறு விஷயங்களை கவனிக்கக்கூடிய பதினாறு கவனகர்களும், முப்பத்திரெண்டு கவனகம், நூறுகவனகம் என்றெல்லாம் மன ஆற்றல் உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கவன ஆற்றல் ஒருவன் தனது மூளையையும் மனதையும் சரியாக ஒழுங்குபடுத்துவதால் கிடைக்கக் கூடியது. இதற்குரிய வழிதான் சரஸ்வதி உபாசனை.
கவி சொல்லும் வல்லமைக்கு யாப்பிலக்கணம் தெரிய வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தாலும் நல்ல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி கவி சொல்ல முடியாது. இதற்கு மனம் மிக நுண்மையாக சீராக சந்தமாக இயங்க வேண்டும். இப்படி இயங்க சரஸ்வதியின் அருள் இருக்க வேண்டும்.
ஆக முதல் வரியில் சொல்விற்பனமும், அவதான சக்தியும், கவி சொல்ல வல்ல ஆற்றலும் இவற்றிற்குரிய அறிவையும் தந்து தன்னை அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். இவற்றைத் தரும் தேவி அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகலகலாவல்லியான உனக்கு அறிவாற்றலால் சிதையாத புகழ் கிடைக்கவல்ல கல்வி என்ற பெரும் செல்வப்பேற்றை எனக்குத் தருவது முடியாத விஷயம் அல்ல.
இன்று பலரும் கல்வி என்று மனதை நெருக்கும், அழுத்தம் தரும் விஷயங்களையே கற்கிறார்கள். அவதானக்கலை எனும் கவனகம், கவி சொல்லும் யாப்பிலக்கணம் எல்லாம் நுண்மையாக மனதின் ஆற்றலை வளர்க்கும் கலைகள். இவற்றையும் மாணவர்கள் கற்க வேண்டும். இப்படி மனதின் ஆற்றலை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எந்தத் தொழிலும், கல்வியும் எளிதாக செய்யும் ஆற்றல் வாய்க்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.