இன்று உலக சுற்றுச் சூழல் தினம்! மனிதன் தான் சுற்றுச் சூழலிற்கு செய்யும் அநியாயங்களுக்கு ஒர் நாளாவது பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்தவைதான் இந்த "தினங்கள்".
அதாவது 364 நாட்கள் சூழலை அழிக்கும் வேலை பார்த்துவிட்டு இன்று ஒரு நாள் ஆளுக்கொரு மரத்தை நட்டுவிட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு வருடமாவது பராமரித்தால்தான் அது வளரும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் சகட்டு மேனிக்கு இத்தனை ஆயிரம் மரங்கள் நட்டோம் என்று அறிக்கை வருடா வருடம் வருகிறது. இவற்றை எல்லாம் எடுத்துக் கணக்குப் பார்த்தால் இன்று உலகம் காடுகளால் மாத்திரம் தான் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் ஆய்வுத் தகவல்கள் காட்டு நிலங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது.
மரம் நடுகிறோம் என்று பெரிய பணத்தை வீணாக்கி பிரயோசனம் இல்லாத செயல் செய்யாமல் விதைப்பந்துகளை ஏற்கனவே இருக்கும் காட்டுச் சூழல் தொகுதிக்கு வீசுதல் சிறப்பான செயல்! தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது விதைகள் உறை நிலையில் இருந்து விழித்து வளரும்.
மனிதன் தற்குறித்தனமான மரநடுகை விழாக்களிலிருந்து வெளிவந்து சூழல் தொகுதி உருவாக்கத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எமது வீட்டைச் சுற்றி இருக்கும் சிறு நிலத்தில் மரங்களும், புற்களும், செடிகளும் நிறைந்த சூழல் தொகுதியை உருவாக்க வேண்டும். எங்கோ இருக்கும் நிலத்திலிருந்து எமக்கு உணவு வருகிறது, பணமிருந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று சிந்திக்காமல் சமூகத்தில் சிறு சிறு குழுக்களாக உணவுக் காடுகள் அமைக்க வேண்டும்.
விவசாயம் இரசாயனத்தை நம்பினால் சூழலிற்கு எதிரி! ஆனால் இயற்கை விவசாயம் என்பது காட்டுச் சூழல் தொகுதியை உருவாக்கும் இன்னுமொரு வழி!
இப்படி இயற்கை விவசாயத்தினைப் பாவித்து உருவாக்கப்படும் உணவுக்காடுகள் இரண்டு வழியில் பயனுள்ளவையாக இருக்கும். மனிதனிற்கு தேவையான உணவினைத் தரும் அதேவேளை ஒரு சூழல் தொகுதியாக இயங்கி காடு தரும் சூழலியல் நன்மைகளைத் தரும்.
தனி மரத்தை நடுவதால் பெரிதாக எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனால் அது ஒரு காட்டுச் சூழல் தொகுதியாக இருக்கும் பட்சத்தில் அது ஏழு அல்லது ஐந்து அடுக்குகளுடன் உச்சபட்ச உற்பத்தித் திறனுடன் இயங்கும் சூழல் தொகுதியாக இருக்கும். பெறப்படும் மழையில் அதிக பட்சம் நிலத்தடி நீராக சேமிக்கப்படும். மண்களில் நன்மை தரும் நுண்ணுயிரியும், மண்புழுவும் நிறைந்து நல்ல வளம் பெறும். மனிதன் தனக்குத் தேவையான உணவினைப் பெறும் அதேவேளை சூழல் தன்னைத்தானே முகாமைத்துவம் செய்துகொள்ளும்.
ஆகவே இயற்கை ஆர்வலர்கள் இயற்கையைப் புரிந்து அர்த்தமுள்ள சூழல்தொகுதி ஆக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.