சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 04
**************************************சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.
தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களில் உள்ள குண்டலினி யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;
இந்தப்பாடலில் சிவன், திருமால், பார்வதி ஆகிய தெய்வங்களில் நாகாபரணமாக குண்டலினி இருக்கும் இடங்களும் அது சாதகனுக்கு சொல்லும் குறியீட்டு விளக்கமும் விளங்கப்படுத்தப்படுகிறது.
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே.
சிவபெருமானிற்கு நாகாபரணம் என்பதும், திருமாலிற்கு ஆதிசேஷன் குடை என்பதும், பார்வதியின் கைவளையல் எல்லாம் நாகாபரணமாக காட்டப்படுவதன் இரகசிய அர்த்தம் குண்டலினி சக்தி எப்படி பிரபஞ்சத்தில் இயங்குகிறது என்பதன் இரகசியமே! ஒவ்வொரு இறைசக்தியை உபாசிப்பதன் மூலம் எம்முள் உறையும் பிராண மகாசக்தியான குண்டலினியை வசப்படுத்தும் ஆற்றலில் குறியீட்டு வடிவம் அந்த தெய்வ சக்திகளின் ஆபரணம் இருக்கும் நிலையைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்!
சிவபெருமானின் கழுத்தில் இருப்பது வாசுகி என்ற பாம்பு! இதுவே தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடைய உதவியது. ஆகவே சிவபெருமானின் அருள் இல்லாமல் எவரும் இடகலை பிங்கலை நாடிகளைக் கடைந்து வாசியை உருவாக்க முடியாது! அப்படி சாதனையினால் உடலில் உருவாகும் விஷத்தைப் போக்க நீலகண்டனாகிய சிவபரம்பொருளின் அருட்பார்வை வேண்டும்!ஆகவே வாசியோகம் – குண்டலினி யோகம் பயில விரும்பும் சாதகன் முதலில் சிவனின் அருள் பெறவேண்டும்.
குண்டலினி விழிப்பால் கிடைக்கும் அம்ருதத்தை சரியாக உடலில் சேர்க்க திருமாலில் அருள் வேண்டும். திருமாலிற்கு ஆதிசேஷன் குடைபிடிக்கிறான் என்பது குண்டலினியால் விளையும் அம்ருதத்தினை காப்பவர் திருமால் என்பதாலாகும்!
குண்டலினி பராசக்தியின் கங்கணமாக இருக்கிறாள். கை மனிதனின் முழுத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய கர்மேந்திரியம். குண்டலியினை முழுமையாக கட்டுப்படுத்த பார்வதியாகிய பராசக்தியின் அருள் முழுமையாக வேண்டும்.
ஆக குண்டலினி சாதனை செய்ய விளையும் சாதகனுக்கு சிவபரம்பொருளன் அருட்பார்வை இன்றி சாதனை செய்யும் தூண்டலே வராது! சாதனையில் வரும் விஷத்தினை நீலகண்டன் அருளினால் வென்று அம்ருதத்தினைப் பெறவேண்டும். இந்த அம்ருதத்தினை உடலில் முறையாகச் சேர்க்க திருமாலின் அருள் வேண்டும். முழுமையாகக் கட்டுப்படுத்த பராசக்தி அருள் வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.