சட்டைமுனிச் சித்தரின் வாசியோக உபதேசம்
***********************************************************
சட்டைமுனிச் சித்தர் பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் போக நாத மகரிஷியின் சீடர்! இவர் வரலாற்றைக் கூறும் போது சிங்களதேசத்து பெண்ணிற்கு பிறந்தவர் என்று போகர் 7000 இல் கூறுகிறார்.
இவரது சட்டை முனி ஞானம் இன்று பலரும் சிலாகித்து பயிற்சி செய்ய ஆர்வமுடன் இருக்கும் வாசியோகத்தினைத் தொடங்குவதற்குரிய ஆரம்ப நிலைகள், பக்குவம், கிரமம் பற்றி உரைக்கிறார்.
இந்தக் கிரமம் புரியாமல், தகுந்த மனம், உடல் சுத்தி இல்லாமலும், இறை நம்பிக்கை இல்லாமலும் வாசி பயிற்சிப்பவர்கள் வாசியோகத்தில் பூரண சித்தி பெறமுடியாது என்று தெளிவாக் கூறுகிறார்.
இன்று யார் வந்தாலும் வாசி கற்பிக்கிறோம் என்று தமக்கு தெரிந்த அரைகுறை வித்தையை எப்படியாவது சீடன் தலையில் இறக்கி அவன் பரிணாமத்தைக் குழப்பி தாம் குருவாகிவிட வேண்டும் என்று அர்த்தம் புரியாமல் சித்தர்களின் வாசி யோகம் கற்பிப்பவர்களுக்கு இது நல்லதொரு வழிகாட்டல்.
மேலும் குருமுகமாய் தீட்சை பெறாமல் ஸ்ரீ வித்தை செய்கிறோம் என்பவர்களை “சிறு பிள்ளைகள் தீண்டலாகாது” என்றும், குருவின் வாய் துறந்து ஆணை பெறாமல் சொந்த விருப்பத்தில் செய்வது சித்திக்கு வழி கோலாது என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
வாசியோகம் பயில அவர் கூறும் படிகள் – கிரமம்
பாடல் - 01
1. பூசை செய்தல் முதல் படி; இந்தப் பூசையில் அவரவர் குருபரம்பரைப்படி பல முறைகளில் பூசை செய்வார்கள். சிலர் சுவடிகளை வைத்து பூசை செய்வார்கள், சிலர் தீபத்தினை வைத்து பூசை செய்வார்கள், சிலர் பெண்களை தேவியாக ஆவாகனப்படுத்தி பூசை செய்வார்கள். பல பல யந்திரங்களை வைத்து பூசை செய்வார்கள்.
2. சித்தர் கணங்களாகிய நாமோ மேரு எனப்படும் நாற்பத்து முக்கோணங்களுடைய ஸ்ரீ யந்திரத்தை பூசை செய்வோம்.
பாடல் – 02
1. மேருவைப் பூசை செய்தால் அத்தகையவன் சாபமிட்டால் அண்டங்கள் தீயாகப் போகும்.
2. மேருவைப் பூசை செய்ய தீட்சை அவசியம்; குருபரம்பரையில் தீட்சை பெறாமல் நூல்களை தாமாகக் கற்று மேருவிற்கு பூசை செய்ய முடியாது.
3. தீட்சை இல்லாமல் சுயமாக பூசை செய்யப் போகக்கூடாது.
4. குரு வாய்திறந்து உபதேசம் சொல்லி செய் என்றால் மாத்திரமே மேரு பூஜை செய்ய வேண்டும். எமக்கு பிடித்திருக்கிறது என்று எவரும் மேரு பூஜை செய்ய முற்படக்கூடாது.
5. அப்படி குரு ஆணையில் பூஜிப்பவனே அனைத்து சித்திகளையும் பெறுவான்.
உபதேசம் இல்லாமல் ஸ்ரீ வித்தை பேசுபவர்களுக்குரிய அறிவுரை இந்தப்பாடல்.
பாடல் – 03
1. மேரு பூஜையில் வாலை மூன்றெழுத்து முதல் உபதேசம்
2. திரிபுரையில் எட்டெழுத்து இரண்டாவது உபதேசம்
3. புவனேஸ்வரி மகாவித்யா மூன்றாவது உபதேசம்
4. சியாமளை நான்காவது உபதேசம்
5. மேலேயுள்ள நான்கு வித்தைகளையும் முறையாக ஒன்றின் பின் ஒன்றாக குருவின் உபதேசம் பெற்று முடித்த பின்னரே வாசி யோகத்திற்குள் சாதகன் புக வேண்டும்.
பாடல் – 04
1. தகுந்த மனப்பண்புடன் இந்த ஐந்து தீட்சைகளும் முடிக்க வேண்டும்.
2. சியாமளை முடித்த பின்னர் பிரணாயாமம் குருமுகமாய் பயில வேண்டும்.
3. பிரணாயாமம் முடித்த பின்னர் வாசி யோக தீட்சை செய்ய வேண்டும்.
4. இப்படி கண்ணியமாக ஒவ்வொன்றாக முடித்து வாசியோகத்தில் ஏறுபவர்கள் உடல் நலக் குறைவோ, சாதனையில் தடங்கலோ ஏற்படாமல் முன்னேறுவார்கள்.
5. இப்படிச் சாதனை செய்பவர்கள் மாத்திரமே சித்தர் என்ற நிலை அடைவார்கள்.
6. இப்படி கிரம தீட்சை எடுத்து சாதனையில் முன்னேற, விட்ட குறை தொட்ட குறை வேண்டும்.
*********************************************************
பாடல்கள்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.
2. தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்;
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா;
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.
3. கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்;
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்; மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்;
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்;
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு;
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்;
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.
4. பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்;
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்;
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற்
காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.