சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.
தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் குதம்பைச் சித்தரின் ஒரு பாடலில் உள்ள யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;
அட்டாங்கயோகம் அறிந்த மெய்ஞ்ஞானிக்கு
முட்டாங்க மேதுக்கடி குதம்பாய்
முட்டாங்க மேதுக்கடி.
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று அஷ்டாங்க யோகத்தினை பயிற்சித்து தனது சித்த விருத்திகளை அடக்கிய யோகிக்கு முட்டாள்தனமான நம்பிக்கைகள் ஏதுக்கடி குதம்பாய் ஏதுக்கடி.
ஒரு யோகி தனது சாதனையால் தனது சித்தமாகிய ஆழ்மனதை பரிபூரணமாக சுத்தி செய்து இறைவனுடன் ஒன்றக்கூடிய தியான, சமாதி நிலையை அடையப் பயிற்சி செய்பவன் கிரகங்களுக்கு பயந்து, கர்மங்களை விரட்ட வீணான சடங்குகளைச் செய்வது முட்டாங்கம் என்ற முட்டாள்தனம்.
ஸ்ரீ சர்வ ஞானோத்திர ஆகமத்தின் யோக பாதத்தில் சிவபெருமான் முருகப்பெருமானுக்கு யோகத்தினை உபதேசிக்கும் போது கீழ்வரும் உபதேசத்தினைச் செய்கிறார்;
பிராணாயாமத்தினால் தோஷங்களை நீக்குக
பிரத்தியாகாரத்தால் தேவையற்ற தொடர்புகளிலிருந்து மனதை நீக்குக
தாரணையால் பாபத்தினை நீக்குக
தியானத்தினால் அநீச்சுவரமான குணங்களை எரிக்குக
என்று கூறுகிறார்.
அட்டாங்க யோகப்பயிற்சி ஒரு சாதகன் தனது உடலிலுள்ள தோஷங்களை நீக்கி, மனதை தேவையற்ற தொடர்புகளில் இருந்து விடுவித்து, சித்தத்தில் ஏற்கனவே சேர்த்த பாபங்களை எரித்து, தீயகுணங்களை எரிக்கும் என்பது பெறப்படுகிறது.
ஆகவே அட்டாங்க யோகத்தில் நிலைபெற்ற யோகி முட்டாங்கமான முட்டாள்தனமானவற்றைச் செய்யத்தேவையில்லை என்கிறார் குதம்பைச் சித்தர்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.