தினகரன் சைவமஞ்சரியில்
ஹம்ஸ யோகம் என்ற கட்டுரைத் தொடர் வருகிறது! இதைப் பார்த்த தம்பி விமலாதித்தன்,
அண்ணா அருணகிரி நாதர் திருப்புகழில் /சோதியுணர்கின்ற வாழ்வு சிவமென்ற ஸோகமது தந்து
...... எனையாள்வாய்// என்ற வரிகளில் ஸோகம் என்ற ஹம்ஸ யோகத்தைப் பற்றிக்
குறிப்பிடுகிறார் என்ற குறிப்பினைத் தந்தார்!
அந்த வரிகளை வைத்துக்கொண்டு
கூகுளின் துணைகொண்டு பாடலை வலைவிரித்து தேடியாயிற்று!
பாடல் வருமாறு:
வாதினை யடர்ந்த
வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ......
தெளியேனே
மாமலர்கள் கொண்டு
மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ......
பணியேனே
ஆதியொடு மந்த மாகிய
நலங்கள்
ஆறுமுக மென்று ......
தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை
கொண்ட
தாடுமயி லென்ப ......
தறியேனே
நாதமொடு விந்து
வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ......
திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை
கண்டு
நாடியதில் நின்று
...... தொழுகேனே
சோதியுணர் கின்ற
வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ......
எனையாள்வாய்
சூரர்குலம் வென்று
வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ......
பெருமாளே.
இந்தப்பாடல் அருமையான பாடல்! ஒரு
பெண்ணின் இன்ப பித்துக் கொண்ட போகி எப்படி யோகியாவான் என்ற process இனைச் சொல்லும்
பாடல்!
யோகம் செய்ய எந்தத் தகுதியும்
இல்லை என்று அகத்தில் நம்பிக்கையே இல்லாத ஒருவன் முருகன் அருளால் யோகியாக முடியும்
என்று உரைக்கும் பாடல்!
முதல் ஆறுவரிகளிலும்
தன்னிடமிருக்கும் பலவீனங்களைக் குறிப்பிடுகிறார், அதற்குப்பிறகு முருகனின் அருளால்
வாசி யோகசித்தி, குண்டலினி யோகசித்தி, சிவயோக சித்தி, ஹம்ஸ யோகசித்தி ஆகியவற்றை
தான் அடைந்த நிலையை மறைப்பாகப் பாடி வைத்திருக்கிறார்.
1. வம்பு செய்வது
போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின் கவர்ச்சியில் இருந்து
இன்னும் நான் விடுபடவில்லை.
2. நல்ல மலர்கள் கொண்டு
மாலையாக்கி பணிந்து பக்தி செய்யும் சரியை நிலையை இதுவரை கடைப்பிடித்ததில்லை.
3. இந்தப்
பிரபஞ்சத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இயக்கும் ஆறுமுகத்தின் தத்துவம்
என்னவென்றும் புரிந்தவன் நான் இல்லை.
4. உனது ஆடும் மயில்
என்பது மந்திர ரூபம் கலந்த வாசியின் இரகசியம் என்பதும் எனக்குப் புரியவில்லை
5. நாதமும், விந்துவும்
இந்த உடலிற்குள் இருக்க அதை (வாசியால்) சேர்த்துக் கட்டி உயர்நிலை பெறத்தெரியாமல்
அலைந்துகொண்டு இருக்கிறேன்.
6. நாகம் என்ற
குண்டலினி எழுந்து சகஸ்ராரத்தைத் தாக்கி அதன் மணியாகிய அம்ருதத்தைப் பெற்று அந்த
நிலையில் நின்றல்லவா உன்னைத் தொழவேண்டும், அதையும் நான் விருப்புடன் செய்யவில்லை!
7. சிவ வாழ்வு என்பது
நாகம் என்ற குண்டலியை எழுப்பி சோதியை உணர்ந்து அதுவே நான் என்ற "ஸோகம்"
என்ற அனுபவம் வாய்த்த நிலையை எனக்குத் தா
சூரபத்மனை வென்ற பழமுதிர்ச்சோலையில் உறையும் பெருமாளே!
இந்தப்பாடல் முருகனின் மயில் என்ற வாசியோகமும், அதனால் வாய்க்கும் நாதமணிகின்ற நாத நிலை எனப்படும் குண்டலினி யோகமும், சோதியை உணர்கின்ற சிவயோகமும், தானே அதுவென்று உணர்கிற ஸோகம் சாதனை எனப்படும் ஹம்ஸ யோகம் பற்றிப் பேசுகிறது!
ஓம் சரஹணபவ ௐ
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.