பத்தியால் யானுனைப்
பலகாலும்
பற்றியே மாதிருப்
புகழ்பாடி
முத்தனா மாறெனைப்
பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்
கருள்வாயே
உத்தமா தானசற்
குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்
கிரிவாசா
வித்தகா “ஞானசத்திநிபாதா”
வெற்றிவே லாயுதப்
பெருமாளே.
பக்தியால் நான் உன்னைப் பலகாலம்
இந்த திருப்புகழால் துதித்து, சீவன் முத்தனாக பெருவாழ்வு வாழ்ந்து முக்தி
அடைவதற்கு அருள்வாயே!
உத்தமமான குணங்களைக் கொண்ட சற்குண
நேயா, இதில் சற்குணம் என்பது ஷட்குணம்; அன்பு, பரிவு, பாசம், கருணை என்ற ஆறுவகை
நற்குணங்கள். ரத்னகிரியில் உறைந்த முருகனை அறுகுணத்தை நல்கும் சொரூபமாக
அருணகிரிணாதர் பாடுகிறார்.
அடுத்த வரியில் வரும் வித்தகா ஞான
சக்தி நிபாதா என்ற வரிகள் முக்கியமானவை! இன்று பலரும் தமக்கு யோக ஞான சித்தி தமது
முயற்சியால் வருகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஜடயோகம்
செய்பவர்கள் உடலை வளைக்கத்தெரிந்தாலே தாம் யோகிகள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒருவன்
யோகத்தில், ஞானத்தில் சித்தியடைவது அவனில் சக்தி நிபாதம் நடைபெறுவதால். சக்தி
நிபாதம் என்றால் சக்தி நன்றாகப் பதிதல் என்று அர்த்தம்! ஒரு சாதகன் தனது
முயற்சியால், பயிற்சியால் உடல், மனம் ஆகிய கருவிகளைத் தினமும் சுத்தி செய்துகொள்ள
இந்த சுத்தித்த உடல், மனக்கருவிகளில் பரம்பொருளின் சக்தி இறங்கிப் பதிதல் சக்தி
நிபாதம் எனப்படும்.
இந்த சக்தி நிபாதம் ஒரு சாதகன்
எவ்வளவு சுத்தியாக தனது அந்தகரணங்களை வைத்திருக்கிறானோ அதற்கு ஏற்ற அளவிலேயே
நிகழும்.
இதற்கு தேவி காலோத்தர ஆகம உரையில்
விளக்கம் தரப்படுகிறது. ஒருவன் சரியையில் நின்று பெறும் சுத்தியால் கால் பங்கும்,
கிரியையில் நின்று பெறும் சுத்தியால் அரைப்பங்கும், யோகத்தில் நின்று பெறும்
சுத்தியால் முக்கால்பங்கும், ஞானத்தால் முழுமை சக்தி நிபாதமும் நிகழும்!
இங்கு முருகனை ஞான சக்தி நிபாதா
என்று முருகன் அருளக்கூடிய நிலையைப் பற்றி விளக்குகிறார். முருகன் ஞானம் எனும்
முழுமை சக்தி நிபாதத்தினைத் தரக்கூடிய வல்லமை உடையவர் என்பது இதன் பொருள்! இது
பெண்பித்தராக அலைந்த அருணகிரிநாதர் எப்படி யோகியாக, ஞானியாக கணத்தில் மாறினார்
என்பதற்கான விளக்கம் முருகனின் ஞான சக்தி நிபாதம் என்பதை விளக்கியுள்ளார்.
முருகனின் அருள் யோகத்திலும்,
ஞானத்திலும் பரிபூரண சக்தி நிபாதத்தினை அருளும்!
ௐ சரஹணபவ ௐ
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.