Man of Tai Chi என்ற திரைப்படம் பிராண ஆற்றலினைப் பெறும் ஒருவன்
தனது அரைகுறைப் புரிதலால், அவனது தவறான பிரயோகம் வாழ்க்கையை எப்படி மாற்றும்
என்பதற்கான விவரணப்படமாக அமைகிறது.
ஆற்றலினை, அதிகாரத்தினைப்
பெறுவதில் இருக்கும் ஆர்வம் மனச்சுத்தியுடன், சமநிலையில் இல்லாவிட்டால் எப்படி
தவறான அழிவுப்பாதையில் செல்லும் என்பதை கீழைத்தேய தத்துவ ஞானத்தின் அடிப்படையில்
புரிந்துகொள்வதற்கான ஒரு அறிமுகமாக இதை எழுத்துக்கொள்ளலாம்.
இதை இனவிடுதலை, போராட்டம்,
அதிகாரம் பெறவேண்டும் என்ற சிந்தனையுள்ள சமூகம் அகப்பக்குவம் இன்மையால் அந்த நோக்கத்தை
அடையாமல் ஏன் அழிவுப்பாதையில் செல்கிறது என்பது போன்ற விடயங்களை ஆராய்வதற்குரிய
தத்துவ அடிப்படையாகவும் நோக்கலாம்!
Tai Chi என்பது பிரபஞ்ச இருமைகள்
(சீன தத்துவத்தில் யிங் யங்) சரியான அளவில் சமநிலையில் இருப்பதைக் குறிக்கும்!
இந்தியதத்துவ ஞானத்தில் யோகம் என்பது "யோக சம முச்சயதே" என்று கிருஷ்ணன்
கூறுவான்.
யோகம் என்பது சமநிலையில்
இருப்பது.
வாசி யோகம் என்பது
இடகலை, பிங்கலை ஆகிய இரண்டையும் சமமாக வைத்திருத்தல்.
வள்ளுவர் நோய் என்பது
வளிமுதலான மூன்றும் (வாத பித்த கபம்) மிகாமலும், குறையாமலும் இருத்தல் என்று கூறுவார்.
"மிகினும்
குறையினும் நோய்செய்யும் நூலோர், வளிமுதலா எண்ணிய மூன்று"
இந்தச் சமநிலையை தந்திர
சாஸ்திரம் சிவஸக்தி சாமரஸ்யம் என்று கூறும்
இந்திய - சீன
தத்துவங்கள் சமநிலையைப் பற்றியே பேசுகிறது.
ஆரோக்கியம் என்பது
முத்தோஷங்களின் சமநிலை
செல்வம் என்பது
வரவினதும் செலவினதும் சமநிலை
சண்டை என்பது
எதிரெதிரான இரு துருவங்களின் சமநிலை
யோகம் என்பது மனம்,
பிராணன், உடல் என்பவற்றின் சமநிலை
தாய் சீ என்ற கலை எதிரியை அவனது
பலத்தை உடைத்து வெற்றி காண்பது என்பதை தவிர்க்கிறது. எதிரியிடம் மிகுந்திருக்கும்
பிராணனால் - சீ - chi இனால் அவர் ஆக்கிரோசம் கொள்கிறார். ஆகவே அந்தப்பிராணனை
சமநிலைக்கு கொண்டுவருவதே தாய் சீயில் சண்டையாக இருக்கிறது. இதன்படி ஒருவன்
பயிற்சியால் பிராண வலிமையைப் பெற்று அதிகமாக்கிக்கொண்ட பின்னர் அவற்றை சமநிலைக்குக்
கொண்டுவர வேண்டும். அப்படிச் சமநிலைக்கு கொண்டுவரும்போது அந்தப்பிராணன் எந்த தீய
அழிவுக்காரணங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய பக்குவம் இல்லாமல் இந்த பிராண
அடிப்படை போர்க்கலைகளைப் பயில்பவர்கள் கொலைகாரர்களாகக் கூட மாறிவிடுவார்கள்
என்பதுதான் இந்த சீனத்திரைப்படத்தின் அடிப்படை.
ஒரு அப்பாவி, திறமையான மாணவன் 600
ஆண்டுகள் பாரம்பரியமுடைய ஆலயத்தில் இந்தக்கலையைப் பயில்கிறான். குருவானவர் தனது
பாரம்பரியத்தை, திறமையை எக்காரணம் கொண்டும் பணம் சம்பாதிப்பதோ, தீயகாரியம்
செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துகொண்டு தனது ஒரேயொரு மாணவனுக்கு பயிற்றுவிக்கிறார்.
பயிற்சியின்போது மாணவன் தனது பிராணனை
ஒத்திசைவாக தாய்ச் சீயின் சமநிலை விதிகளின்படி சமநிலைக்கு வராமல்,
உணர்ச்சிவசப்பட்டு தனது பிராணனை, ஈட்டியை உடைத்து விடுகிறான்.
அந்த சந்தர்ப்பத்தில் குரு
அவனிடம் கேட்கிறார்; எப்படி உணர்கிறாய் என்று?
அதற்கு அவன் எனது மேலதிக பிராணன்
வெளியேறிவிட்டதால் நான் நன்றாக உணர்கிறேன் என்று கூறுகிறான்;
அதற்கு குரு சொல்கிறார்; மாணவனே,
இன்றைய இந்தத் தெரிவு பற்றி நீ கவனமாக இருக்க வேண்டும்? உனது ஆற்றலைப் பயன்படுத்தி
ஈட்டியை உடைத்திருப்பதையே வெற்றியாகக் கருதுகிறாய்; ஆனால் நீ உனது மேலதிக பிராணனை,
ஈட்டியை உடைக்காமல் வெளியேற்றுவதே ஆக்க பூர்வமானது, அதை நீ செய்யவில்லை, தாய் சீ
என்பது யிங் யங் இரண்டினதும் சமநிலை என்கிறார்.
அதற்கு அவன் இல்லை ஆற்றலே
பிரச்சனைகளைத் தீர்க்கும், நான் இப்போது ஆற்றலுடையவனாக இருக்கிறேன் என்று
எதிர்வாதம் புரிய, குரு சிரித்துக்கொண்டு, இன்று நீ எடுத்திருக்கும் முடிவு உனது
போர்க்கலையின் வினைத்திறனை முடிவு செய்யப்போகிறது, இது நீ என்னவாக வரப்போகிறாய்
என்பதைக் காட்டுகிறது, தவறான முடிவு, விழிப்புணர்வுடன் இரு, இந்த முடிவு உன்னை
வேறு ஒரு பாதையில் அழைத்துச் செல்லப்போகிறது, எமது குருபரம்பரையின் ஒரேயொரு மாணவன்
என்ற வகையில் இந்த சிந்தனைக்குள் போகாதே, உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள
தியானம் செய்து உனது மனதை சுத்தி செய்துகொள் என்று கூறுகிறார்.
மாணவன் அதை உள்வாங்கிக்கொள்ளாமல்
மனச்சுத்தியினைப் பெற முயற்சி செய்யாமல் ஆற்றலை அடைவதில் மட்டுமே தனது கவனத்தைச்
செலுத்துகிறான். இறுதியில் நல்லவனாக இருந்த ஒருவன் எப்படி கொலைகாரன் ஆகிறான்
என்பதைப் பற்றிய தத்துவமே இந்தப்படம்!
நல்ல நோக்கத்திற்காக
போராடத்தொடங்கியவர்கள் ஏன் தீவிரவாதிகள் ஆகிறார்கள்,
யோகம் செய்கிறோம் என்று
தொடங்கியவர்கள் ஏன் பணம், பெண், அதிகாரம் என்று அலைகிறார்கள்,
மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம்
என்று அரசியல்வாதியானவர்கள் ஏன் ஊழல்வாதியாகிறார்கள் என்பதை பிராண தத்துவ
அடிப்படையில் விளக்கும் ஒரு அருமையான படம்!