=================================================================================
இந்த பதிவு நேற்றைய பதிவின் தொடர்ச்சியாதலால் அதனைப் படித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். அதற்கான சுட்டி;
சித்தர்கள் கூறும் சுழுமுனை நாடி பற்றிய குறிப்புகளும் காயகற்பத்தின் யோக இரகசியமும்
=================================================================================
நேற்றைய பதிவில் சுழுமுனை பற்றி பார்த்தோம், இன்று சுழுமுனைக்கும் சித்தர்கள் கூறிய காயகற்ப இரகசியத்திற்குமுள்ள தொடர்பினைப் பார்ப்போம்.
சுழுமுனையின் சித்திர நாடியினுடாக குண்டலினியான மகா பிராண சக்தியினை செலுத்துவதையே வேண்சாரை கற்பம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
சுழுமுனையினுள் உள்ள சித்திர நாடியினுள் பிராணணை நிலை நிறுத்தி ஒருவரது சூஷ்ம உடலின் பிராண அதிர்வை பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு இந்த பூவுலகில் நிலை நிறுத்தி மனிதர்களுக்கு உதவுவதே சித்தர்கள் கூறும் காயகற்பம். இப்படிச் செய்தவர்கள் தான் அகத்தியர் முதலான சித்தர்கள் கிரியா பாபாஜி போன்ற யோகிகள். ஸ்தூல உடலை வைத்திருப்பதல்ல, ஸ்தூல உடலிற்கான கற்பமுறைகள் சாதாரண ஆயுளை விட சிறிது அதிகரிக்க உதவும். அது பற்றி வேறொரு பதிவில் ஆராய்வோம்.
இந்த பதிவில் சூஷ்ம உடலினை பலப்படுத்தி காயகற்பமடைய வைக்கும் யோக இரகசியத்தினைப் பற்றி மிக சுருக்கமாக பார்ப்போம்.
இந்த பதிவின் நோக்கம் கருதி அகத்தியர் கற்ப தீட்சையில் இருந்து பாடல்கள் எடுத்தாளப்படுகிறது. இது பற்றி பல்வேறு சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் கற்ப தீட்சையிலே (பாடல் 81, 82 ) இதனையே பரிபாஷையில் இவ்வாறு கூறுகிறார்;
பாதையென்ற அட்டாங்க யோகியானால்
பார்மகனே கற்பமொன்று சொல்லுவேன்கேளு,
பேதையென்று மலையாதே பொதிகைக்காப்பால்
பிரபலமாய் கோடி யோசனைதான் மேரு,
கோதையென்ற அரவதிலே யிடப்பாகத்தில் கொடுவிடமாம்
வெண்சாரை வலப்பாகத்தில்,
வேதையென்ற மேருகிரிதனிலே பின்னி விளையாடு
மிரண்டுமொன்றாய் விஷமதாமே
இதன் பொதுப் பொருள்: இயம, நியம, ஆசன, பிரணாயாமம் எனும் அட்டாங்க யோகம் கைக்கொள்ளும் சாதகனானால் மகனே உனக்கு உன் உடலை அழியாது வைத்திருக்க ஒரு கற்ப முறை கூறுகிறேன் கேள்! பொதிகை மலைக்கு அப்பால் கோடி யோச(ஜ)னை தூரத்தில் மேரு மலையுள்ளது, அதிலே தோல் நிறைந்த (கோதையின் அகராதி பொருள் தோற்கட்டு, உடும்பு, கோதை ஆறு) இடம் ஒன்று உள்ளது, அதன் இடப்பாகத்தில் விடம் நிறைந்த பாம்பும் அதன் வலப்புறத்தில் வெள்ளை நிற சாரைப் பாம்பும் உள்ளது. அது மேருகிரியில் குலாவி விளையாடும் போது விஷமாகும்.
அடுத்த பாடலில்
விஷமான அரவு ரண்டும் பிணைந்து நிற்கும்
வேதான்த காமமெனும் பீடந்தனை,
குசமான யோகியவவ்விடத்திற் சென்றால் கொடுவுடந்தான்
முழுங்கிவிடு மலமாய்ப்போவர்,
நிசமான குளிகைகொண்ட சித்தரானால் நிமிசத்தில்
காமபீடத்தை நீக்கி, திசமான தீட்சையினால் போனாலுந்தான் ....
பொதுப் பொருள்:
இப்படி விஷமான பாம்பு இரண்டும் பிணைந்து நிற்கும் போது காமம் மிகுந்து காணப்படும், அந்த நேரத்தில் யோகம் பழகும் யோகி அங்கு சென்றால் அந்த கொடுமையான விடம் அவனை விழுங்கி மலமாக்கி விடும், குளிகையுடைய சித்தர் ஒருவர் செல்வாரானால் நிமிடத்தில் காமத்தினை நீக்கி தீட்சையெனு சக்தி பாய்ச்சலால் கட்டுப்படுத்தி வசப்படுத்துவார்,
இதனை மேலோட்டமாக இப்படி விளங்கிகொண்ட ஒருவர் எப்படி எடுத்துக்கொள்வார், ஆகா! மேருமலையில் ஒரு இடத்தில் இரண்டு பாம்புகள் கொடிய விஷத்துடன் காம சல்லாபம் செய்து கொண்டிருக்கும், அதனை குளிகை உள்ள சித்தர் ஒருவரது உதவியுடன் பிரித்தெடுத்து கறியாக்கி உண்டால் கற்ப காலம் வாழலாம் என்று,
இனி இவற்றின் குறிவிலக்கப் பொருள் என்னவென்று பார்க்கலாம்;
அகத்தியர் கற்ப தீட்சை பாடல்களது யோக விளக்கம்;
பாதையென்ற அட்டாங்க யோகியானால் பார்மகனே கற்பமொன்று சொல்லுவேன்கேள : இந்த வரியில் இந்த பாடலின் பொருளை அறியக்கூடியவன் யார் என்பதனைக் குறிப்பிட்டுவிட்டார், அட்டாங்க யோகம் தெரிந்து , யோக நாடிகள் பற்றிய அறிவு உள்ளவராக இருந்தால் மட்டும் இதன் உண்மை விளங்கும் என்று.
பேதையென்று மலையாதே: சொல்லப்போவதைக் கேட்டு மலைத்து ஆச்சரியப்பட்டு தவறாக விளங்கிக்கொள்ளாதே என எச்சரிக்கிறார்.
பொதிகைக்காப்பால் : சித்தர்கள் பொதிகையில் வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிவர், அவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டிற்கு எப்படி தென்றல் வருகிறது, தென்மேற்கு காற்றிலிருந்து பொதிகை தென்றலாக்கி கொடுக்கிறது, அதுவே பொதிகையின் தனிச்சிறப்பு, அந்தக்காற்றிலிருந்து வரும் நீரை அங்கு ஒடுக்கி தாமிரபரணியாக நதியாக தென்னாடு செழிக்க செய்கிறது. இதே செயல் சூட்சும உடலில் பிராணனனது சுற்றோட்டத்தில் நடைபெறுகிறது, இது பொதிகை சூட்சும உடலில் எங்கே உள்ளது? பிரபஞ்ச பிராணன் பெரும் வேகத்துடன் வரும் பொழுது அதனிக்கட்டுப்படுத்தி நதிகளாக்கி உடல் முழுவதும் பரவச்செய்யும் இடம் எங்கு உள்ளது? அதுதான் காண்டம் எனப்படும் யோக நாடிகள் உருவாகும் இடமாகும். சித்தர்களது பரிபாசையில் பொதிகை என்பது பிராணசக்தியை பரவ வைக்கும் யோக நாடிகளின் ஆரம்ப ஸ்தானமான காண்டம் எனும் பகுதியாகும்.
பிரபலமாய் கோடி யோசனைதான் மேரு: கோடி யோசனை என்பது எண்ணற்ற என்று பொருள்படும், அதாவது காணடத்திலிருந்து உருவாகும் எண்ணற்ற யோக நாடிகள் (இது 72000 என்பது சித்தர்களின் பொதுவான கணக்கு)மேருவுடன் இணைகிறது, மேரு என்பது முள்ளந்தண்டினை குறிக்கும், அதாவது சுழுமுனையின் அமைவிடம்.
கோதையென்ற அரவதிலே யிடப்பாகத்தில் கொடுவிடமாம் வெண்சாரை வலப்பாகத்தில்: அரவு என்பது அசைவு என்றும் பொருள் கொள்ளலாம், அதாவது நாடி என்பதனை மறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுவிடம் என்பது ராஜச குணத்தினை குறிக்கும், ஆக இந்த விவரணம் சுழுமுனையின் உள்ளே காணப்படும் வஜ்ர நாடியினை குறிப்பதாகும். வெண்சாரை என்பது வெண்ணிறமான சித்திர நாடி, இவையிரண்டும்,
வேதையென்ற மேருகிரிதனிலே பின்னி விளையாடு மிரண்டுமொன்றாய் விஷமதாமே: இவை இரண்டும் சுழுமுனையில் சாதாரண உலகவாழ்க்கையினால் பிராண ஓட்டம் சிக்கலாகி பின்னி பிணைந்து விஷமாகி விடுகின்றது.
விஷமான அரவு ரண்டும் பிணைந்து நிற்கும் வேதான்த காமமெனும் பீடந்தனை குசமான யோகியவவ்விடத்திற் சென்றால் கொடுவுடந்தான் முழுங்கிவிடு மலமாய்ப்போவர்: இப்படி பிராண ஓட்டம் சிக்கலாகி விஷமாக நிற்கும் நாடிகள் இரண்டினூடாக வேதாந்தம் எனும் அறிவுடைய ஆனால் காம வாசனை அழியாத யோகம் பழகுபவர் பிராண ஓட்டத்தினை செலுத்தப் போனால் அது விஷமாகி அவரை அழித்து விடும். (இதையே புராணத்தில் திருப்பாற்கடலை கடைந்த கதையாக கூறியுள்ளார்கள்). இதில் அகத்தியர் பெருமான அழகாகச் சொல்கிறார், இந்த ரகசியத்தை அறிவால் அறிந்து கொண்டால் மட்டும் போதாது, சித்தியாவதற்கு சித்தத்திலுள்ள வாசனைகளும் அழியவேண்டும் என்று!
நிசமான குளிகைகொண்ட சித்தரானால் நிமிசத்தில் காமபீடத்தை நீக்கி, திசமான தீட்சையினால் போனாலுந்தான்: உண்மையாக இரகசியத்தை (குளிகை) அறிந்து தனது ஆழ்மனமாகிய சித்தத்தினை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை உள்ள ஒருவரானால் (சித்தர் என்பதன் பொருள்) (ஏனனெனில் சித்தமே மனதில் எண்ண விருத்திகளை உருவாக்குவது, சுழுமுனையில் பிராணன் செல்லும் போது சித்த விருத்தி இருக்குமானால் அது விஷமாகி சூஷ்ம உடலையும் கெடுத்து ஸ்தூல உடலையும் அழித்து விடும், அதனாலேயே பதஞ்சலியார் சித்த விருத்தி நிரோதமே யோகம் என்றார் )காமம் எனும் ஆசைகளை சித்தத்தில் நீக்கி புதிய தெய்வ சம்ஸ்காரங்களை (தீட்சை என்பது சூட்சும உடலில் தெய்வ சம்ஸ்காரங்களை பதிப்பித்தல் என்பதே உண்மையான பொருள்) பதிப்பித்து இந்த நாடிகளூடாக பிராணனை செலுத்துவார் என்பதே இதன் பொருள்.
இவற்றின் மேலதிக விபரம் அகத்தியர் கற்ப திட்சையில் விரிவாக ஆனால் பரிபாசையில் கூறப்பட்டுள்ளது. வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபற்றிப் பார்ப்போம்!
இதுவே சித்தர்களின் யோக கற்ப முறை பற்றிய சுருக்கமான விளக்கம், சித்தர் பாடலிகளில் சரியான புரிதல் ஏற்பட இவை உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
அடுத்த பதிவில் வேறொரு சித்தர் நூலில் இருந்து இந்த வேண்சாரையைப் பற்றிய குறிப்புகளை பகிர்வோம்.
அன்பு சகோ
ReplyDeleteஅருமை, அருமை
பாடலை விவரித்த விதம்
ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
பதிவுகள் அனைத்தும் மனதுக்கு இதம்
நன்றியுடன்
ஷரீப்
விளக்கமும் பதிவும் - அருமை ! அருமை ! எவர் ஒருவருக்கும் வாய்க்கப்பட்டிருக்கிறதோ அவரால் மட்டுமே எழுத முடியும் பதிவு இது. உங்களுக்கு பதினென் சித்தர்களும் ஆசீர்வாதங்களை அளிப்பார்கள். இதை எழுதும் போது மனது சில்லிடுகிறது.
ReplyDelete