நவக்கிரகங்களிலே ஈஸ்வர பட்டமுடைய சனீஸ்வர பகவான் கன்னிராசியிலிருந்து தனது உச்ச ராசியான துலா ராசியிற்கு இடம் பெயருகின்றார். மற்றைய கிரகங்களை விட சனி பகவானின் பெயர்ச்சி அனைவரது மத்தியிலும் அதிக பயத்துடன் எதிர் நோக்கப்படுகின்ற ஒன்று. சனி பெயர்ச்சிப்பலன்களே அதிகம் வாசிக்கப்படும். கன்னி, துலா,விருட்சிகத்திற்கு ஏழரைச் சனி ஆட்படுகையும் மீன ராசிக்கு அட்டமத்து சனியும் ஆகிறது. சனி பலமில்லாதவர்கள், ஏழரைச்சனி, அட்டமத்து சனி உள்ளவர்கள் எல்லாம் சில நூறுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து பரிகாரம், சாந்தி என்பன செய்துவரும் இந்தக் காலத்தில் மிக இலகுவாக சனியின் தாக்கத்தில் இருந்து மீளும் வழி ஒன்று பாரம்பரியமாக உள்ளது என்பதை மறந்துவிட்டோம். அது என்ன?
இன்றைய நிலையில் சனிபெயர்ச்சியும் கர்பரேட் மார்க்கட்டிங்கில் ஒன்றாகிவிட்டதால் சனிபெயர்ச்சி பலன்களை படித்தல், கோயிலிற்கு சென்று சனிபகவானிற்கு எள்ளெண்ணெய் எரித்தல், அர்ச்சனை செய்தல், யாகம் செய்தல் என்பன வியாபாரமாகியே விட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்துதான் சனிபகவானின் அருள் பெறவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு நாம் சொல்லப்போகும் இந்த சனி பரிகாரமுறை வியப்பை அளிக்கும் என்பதில் ஐயமில்லை!
சரி அதிக பீடிகை போடாமல் விடயத்திற்கு வருவோம்! முதலில் அந்த எளிய பரிகாரம் என்ன என்பதனை தெரிவதற்கு முன்னர் அதற்கான சில அடிப்படைகளை அறிதல் அவசியமானது.
ஏன் எமது பாரம்பரியத்தில் புராணங்கள், இதிகாசங்கள், என பல்லாயிரக்கணக்கான கதைகள் தலைமுறை தலைமுறையாக பாட்டிகதைகளாக சொல்லப்பட்டுவந்துள்ளது? குரு உபதேசங்கள் கதைகளாக கூறப்படுகின்றன! அவற்றின் தாத்பரியம் என்ன? நோக்கங்கள் இன்றி வெறும் நேரப்போக்கிற்காக சொல்லப்பட்டனவா?
பதஞ்சலி யோகம் என்ற அதி உன்னத மனவியல் நூலையும், மனதின் செம்மைபற்றி உற்றறிந்த சித்தர்களது உபதேசங்களினையும், அறிவின் அதிஉச்ச நிலையினையும் அடைந்த ஒரு கலாச்சாரத்தில் மூடத்தனமான அறிவுக்கொவ்வாத கதை சொல்லும் பாரம்பரியம் இருந்திருக்குமா?
நிச்சயமாக இல்லை!
இதே போல் ஜப்பானிய ஜென் கலாச்சாரத்திலும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.
அப்படியானால் கதைகளது தாத்பரியம் என்ன?
அது எமது முன்னோர்கள் கையாண்ட ஒரு உளவியல் சிகிச்சை முறை,
ஒவ்வொரு கதைகளும் நீதி ஒன்றினை போதிக்கும் கதைகளாகவே காணப்படும். கதைகள் ஒருகாலத்தில் எமது முன்னோர்கள் பெற்ற வாழ்க்கை ஞானம், அந்த வாழ்க்கை ஞானம், ஒருவருடைய வாழ்க்கை அனுபவ ஞானம் கதைகளாகும் போது அது நேரம் அற்ற ஒரு பகுதியில் (Domine) இல் சேகரிக்கப்படுகின்றது, அந்த சேகரிப்பு அதன் பின் நேரத்தினால் மாற்றமடைவதில்லை, இதனை விளங்குவதற்கு தற்கால திரைப்படக்காட்சியினை உதாரணமாக கொள்ளலாம், ஒரு நிமிடத்தில் நடிகரது அனுபவமாக பெறப்பட்டது பின் காலம்பூராகவும் பதியப்பட்டு பின்பு அந்த படம் போடும் நேரத்தில் அந்த நடிகர் பெற்ற அனுபவத்தினை பார்ப்பவர்களது அகச் சூழலில் உருவாக்குகின்றது. அதனால் பார்ப்பவரது அகச்சூழல் மாற்றமடைகிறது.
இந்த இடத்தில் ஏன் எம்மவர்கள் சினிமா, நாடக சீரியலில் அதிகம் அழுந்தியுள்ளார்கள் என்பதற்கு காரணம் பாரம்பரியமாக எம்மில் கதை கேட்க்கும் ஜீன்கள் தான் என்பதனை உணரலாம். கதை கேட்க்கும் ஜீன்களை மாற்றமுடியாது, ஆனால் கேட்க்கும் கதைகளை மாற்றலாம் அல்லவா?
கதை கேட்க்கும் போது அகச்சூழல் மாற்ற மடைகிறது எனப்பார்த்தோம், அது எவ்வாறு எனப்பார்ப்போம், பொதுவாக அனைவரது வெளிப்பார்வைக்கும் மாம்பழம் என்பது அதன் தோற்றம், அளவு, நிறம் என்பன ஒரேமாதிரித்தான் தெரியும், ஆனால் அதன் சுவை, உண்பதற்கான விருப்பம், அதுபற்றிய மனவுணர்வு ஆகிய அகச்சூழல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவை. அவை சூஷ்ம உலகமாகிய அக உலகத்துடன் தொடர்பு பட்டவை. எமது முன்னோர்கள் இந்த உண்மையினை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் இரண்டு வகையான உலகங்கள் காணப்படுகின்றன. புறப்பிரபஞ்சம் இது அனேகமாக புலனறிவு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியானது. அகப்பிரபஞ்சம் இது ஒவ்வொரு மனிதனிற்க்கு தனியானது, அவனது எண்ணங்கள், சிந்தனை, கற்பனை என்பவற்றால் ஆனது. புறப்பிரபன்ஞமும் அகப்பிரஞ்சமும் ஒன்றாக சந்திக்கும் புள்ளிகள் அகப்பிரபஞ்சத்தில் உணர்ச்சிகளாக, எண்ணங்களாக, மன நிலைகளாக அகப்பிரபஞ்சத்தில் எண்ண சலனத்தினை உருவாக்குகின்றன. உருவாக்கப்படும் சலனங்கள் வலுப்பெறும் போது, அந்த எண்ணங்கள் செயல் பெறுவதற்கு உரிய புறச்சூழலை உருவாக்குகின்றது. புறப் பிரபஞ்சத்தினை விட அகப் பிரபஞ்சத்தில் பதியப்படுபவை புறப்பிரபஞ்சத்தில் இருப்பவற்றைவிட நிரந்தரமானவையும் உறுதியானவையுமாகும்.
எமது அகப்பிரபஞ்சத்தில் ஏற்படும் உணர்ச்சிகளும், எண்ணங்களுமே தொடர்ச்சியாக வலுப்பெறும் காலத்தில் புறப்பிரபஞ்சத்தில் எமது அன்றாட நிகழ்வுகளாகின்றன என்பது யோக, தாந்திரீக தத்துவங்களின் அடிப்படையாகும். அதாவது எமது அகப்பிரபஞ்சத்தினை மாற்றுவதன் மூலம் எமது புறப்பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்வுகளை மாற்றலாம்.
இதுபோல் இந்த நீதிக்கதைகளை வாசித்தோ கேட்டோ தமது அனுபவமாக்கிக் கொள்பவர்களுக்கு அந்த நீதி அவர்களது அகப்பிரபஞ்சத்தின் ஒரு அமிசமாகிறது. இதன் மூலம் அவரின் அகப்பிரபஞ்சம் மாற்றப்படுகிறது. அது வலுப்பெறும் போது எமது புறஉலகில் நடக்கும் நிகழ்வுகளும் மாற்றமடைய ஆரம்பிக்கிறது. இந்த தத்துவமே பிரார்த்தனை, பக்தி, தியானம் என்பவற்றின் அடிப்படை, அவை உண்மையில் எமது அகப்பிரபஞ்சத்தினை மாற்றமடைய வைக்கிறது, அதன் மூலம் படிப்படியாக எமது புறப்பிரபஞ்சத்தில் நிகழ்வுகளை எமக்கு சாதகமாக நிகழவைக்கும் செயல் முறையே இவை.
இந்த அடிப்படையினை வைத்துத்தான் இன்றைய அரசியல், வணிக தந்திரங்கள் கூட நடைபெறுகின்றன. தேவையானவர்கள் சிந்தித்து உய்த்தறிந்துகொள்ளுங்கள்! துரதிஷ்டவசமாக இது சமுகத்தினை சீரழிக்கும் உத்தியாகிவிட்டது என்பதும், மதம், ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கதைகளும் இதே செயல் முறையில்தான் அடங்குகின்றது என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்ட ஒன்றாகவே இருக்கிறது.
ஆக நாம் கூற வருவது சனி பகவானின் அருள் பெற, அவரது தோஷங்கள் நீங்க, தீய பலன்கள் குறைய நாம் எமது அகப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தியுள்ள தீய எண்ணப் பதிவுகளை குறைப்பது ஒன்றுதான் உண்மையான பரிகார வழி, ஏனெனில் சனிபகவான் கர்மகாரகர், அதாவது எமது அகப்பிரபஞ்சத்தில் பதிவுற்ற எண்ணப்பதிவுகளை இராசிச் சக்கரத்தில் சரியான இடத்திற்கு வரும் போது புறப்பிரபஞ்சத்தில் நிகழ்வாக ஆக்கித்தருவார், யாரும் தப்பமுடியாது, ஆக அகப்பிரபஞ்சத்தில் நல்ல எண்ண உணர்ச்சிப்பதிவுகள் உள்ளவர்கள் நன்மையும், தீய பதிவுகள் உள்ளவர்கள் தீமையும் பலனாக அடைவார்கள். ஆகவே யாரும் சனிபெயர்ச்சி பலன்களை பார்த்துவிட்டு தீயதை நினைத்துக்கொண்டு இருப்பார்களேயானால் அவர்களுக்கு அந்தப்பலனை தவறாமல் வழங்கும் வள்ளல் அவர்.
நாம் மேலே விளக்கிய யோக தந்திரிக அடிப்படையில் சனி பகவானினால் நன்மையினைப் பெறும் வழி அவர் எப்படி நன்மை அளித்தார் என்ற கதைகளை கேட்டறிவதும் ஒன்றாகும். அக்கதைகளை கேட்கும் போது உங்கள் அகப்பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களினால் சனிபகவான் எப்போதும் நமையே செய்யும் நிலை எமக்கு உண்டாகும்.
அடுத்த பதிவிலிருந்து "சனி மஹத்மியமாக" உங்களுடன் நானும் அந்த சனீஸ்வர பெருமானின் செயல்களை எனது அகப்பிரபஞ்சத்தில் பதியவைக்கும் முயற்சியுடன் உங்களுக்கும் பகிர்ந்தளிக்க உள்ளேன்.
அனைவரும் சனீஸ்வர பெருமானின் அருள் பெற பிரார்த்திபோமாக!
நல்ல முயற்சி.. என்னதான் நல்ல சிந்தனைகளோடு இருந்தாலும் சனி போட்டுப் பாத்துடுறார்... இதுதான் நிதர்சனம்.. பார்க்கலாம்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/