பொதுவாக புராணக் கதைகள் அனைவராலும் விரும்பப்படுபவையல்ல, அவற்றில் அறிவுக்கொவ்வாத விடயங்கள் பலது காணப்படுகின்றது சிலரது வாதம், இன்னும் சிலர் புராணக்கதைகள் ஆபாசம் நிறைந்த கூறுகள் உள்ளன என்றும் அவற்றை மறுப்பவரும் உள்ளனர், எமது பதிவுகளில் புராணக்கதைகள் (அதாவது அடுத்து வரும் சில காலத்திற்கு பார்க்கவுள்ள சனி மாஹத்மியம் என்ற புராணக்கதையிற்கு அடிப்படையாக) எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பது பற்றி விளக்கவே இந்த பதிவு.
அடுத்து எந்த ஒருவிடயத்தினை அணுகுவதற்கு ஒரு முறை காணப்படுகிறது, அதன் மூலம் அணுகும்போது மட்டுமே அவற்றின் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள முடியும், ஆகவே அவற்றையும் இந்தப்பதிவில் சுருக்கமாக விளக்கப்படும்.
சென்ற பதிவில் கதைகள் எனப்படுபவை நேரமற்ற ஒரு பகுதியில் (Domine) சேமிக்கப்பட்டு பின்னர் வாய்மொழி மூலமோ, எழுத்து மூலமோ கடத்தப்படுகின்றது என்பதையும் அவை நிகழ்காலத்தை மனதில் உருவாக்கி ஒருவரது அகப்பிரபஞ்சத்தில் மாற்றத்தினை உருவாக்குகின்றது என்பதனையும் பார்த்தோம். சரியாக புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு பல அரிய விடயங்களை விளக்கக்கூடியவை.
பொதுவாக புராணக்கதைகள் பிரபஞ்சவியல் தரவுகளையோ, மனிதனது அகப்பிரபஞ்சத்தின் இயக்கத்தினையோ(தேவாசுர யுத்தங்கள்), கலாச்சார சமூக மறைவுகள் (காமம் போன்ற விடயங்கள்), மருத்துவ தரவுகள் என்பவற்றை மறைபொருளில் விளக்கப்பட்ட கதைகளை கொண்டிருக்கும்.
அவற்றை விளங்கும் தன்மை ஒவ்வொரு நபரிற்கும் ஏற்ப மாறுபடும், பொதுவான வரைவிலக்கணம் என ஒரேதன்மையில் விளக்கம் அளிக்க முடியாதவை.
அடுத்து இந்தக் கதைகள் மனிதனது ஆழ்மனதையும், மறை மனதிற்குமான செய்திகளை கொண்டிருக்கும். அவற்றை தர்க்க மனது கொண்டு ஆராயமுயலும் போது அவற்றின் பொருள் விளங்கும் தன்மைகள் புரியமுடியாத நிலை ஏற்படும், அதாவது ஒரு விடயத்தை ரசிப்பதற்கும் ஆராய்வதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. ஒரு விடயத்தினை ரசிப்பதால் மனதிற்கு இன்பத்தினையும் அமைதியையும் பெறுகிறோம், ஆராய்வதால் அறிவினையும், பல சமயங்களில் பயவுணர்ச்சியுனையும் அடைகிறோம். புராணக்கதைகள் படித்து ரசிப்பதற்குரியவை, ஆராய முற்பட்டால் அதனால் உள்மனம் பெறக்கூடிய தகவல்கள் இழக்கப்படும்.
புராணக்கதைகள் படிக்கும் போது மனம் திறந்த நிலையில் இருத்தல் வேண்டும். ஜென் கதைகளில் வரும் காலி தேனீர் கோப்பை பொன்ற நிலை வேண்டும். இது வேறெந்த ஆழ்மனத்துடன் தொடர்புடைய பயிற்சிகளுக்கும் பொருந்தும். தர்க்கபுத்தியுடன் எதையும் அணுகவிரும்புபவர்கள் புராணக்கதைகள் படிப்பதனால் எதுவித பலனும் பெறப்போவதில்லை, ஏனெனில் புராணக்கதைகளுல் எதுவித உண்மைகளையும் நேரடியாக வாதித்து பெறமுடியாது, ஆனால் அவற்றின் உருவகங்கள் ஆழ்மனத்தின் இயக்கத்தினை சீரமைக்கும் தன்மை உடையவை.
இப்படியான திறந்த மனமடையும் நிலையையே பக்தி என்ற வழிமுறையாக்கப்பட்டது. இப்படியான மன நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் குருவாகி வழிகாட்டும்.
எம்மில் பலர் மேல்மனதாகிய தர்க்க மனத்தினை நம்பியே வாழ்கிறோம், அனேகமாக தர்க்க மனதிற்கு சரியெனப்பட்ட விடயங்களே சரியென நம்புகிறோம், மற்றைய விடயங்களை ஒருவித பயத்துடனே அணுகுகிறோம். உண்மையில் மனிதனது மேல்மனதாகிய தர்க்க புத்தி ஆழ்மனதிற்கு இட்ட பாதுகாப்பு கவசமே, அதாவது ஒரு வாயில் காப்போன் போல், உள்ளே வரும் எண்ணங்கள் சரியானவையா, பிழையானவையா என்று சோதித்து உள்ளேயுள்ள "மந்திரியாகிய" ஆழ்மனதிடமும் "அரசனான" மறைமனத்திடமும் அனுப்பும் வாயில் காப்போனே மேல்மனம். நம்மில் பலர் அந்த வாயில் காப்போனாகிய மேல்மனத்திடம் மட்டுமே சிக்கிக்கொண்டு எப்போதும் தர்க்கித்து ஆழ்மனத்தின் செய்கையினை தடை செய்தவண்ணம் உள்ளோம். மேல்மனதின் செய்கை நிச்சயமாய் அவசியமானது, எமக்கு எது சரி, எது பிழை என ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கும் வரை, முடிவெடுத்தபின் அதனை செயல்படுத்துவதற்கு சக்திவாய்ந்த மற்றைய இருவரது செயற்பாட்டினை மேல்மனம் கட்டுப்படுத்தாத நிலைக்கு எம்மை பயிற்றுவிக்க வேண்டும். ஆனால் பொதுவில் நம்மில் பலர் ஒன்று எப்போதும் தர்க்கித்து மேல்மனமாகிய காவலாளியிற்கு அடிமையாக இருப்போம் அல்லது மேல்மனதை இழந்துவிட்டும் மந்திரியிற்கும், அரசனிற்கும் அடிமையாக இருப்போம். முன்னையவர்கள் எப்போதும் வாதித்து குதர்க்கம் செய்பவர்கள், பின்னையவர்கள் பக்தி, சாமியார், கோயில், குளம் என தமது கடமைகளை விட்டுவிட்டு அலைபவர்கள், ஆக எந்த யோக முறையும் கூறும் சமநிலை என்பது சரியான விகிதத்தில் இந்த மூன்று மனதையும் பயன்படுத்தும் முறையினை அடைவதே. அடுத்து வரப்போகும் சனீஸ்வர மஹத்மியத்தினை படிப்பதற்கும், வேறு எந்த புராண இதிகாசங்களையும் அணுகுவதற்கு இந்த சமநிலை அவசியம் என்பதற்காகவே இங்கு விளக்கப்படுகிறது.
இனிவரப்போகும் சனீஸ்வர மஹாத்மியம் மூட நம்பிக்கைகளை கொண்டதாகவோ, பயமுறுத்தும் பாணியிலோ அமையாது, உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் நவகோள்களில் உயர்ந்தவர் தாழந்தவர் என்று பாகுபாடு காட்டாமல் தன்கடமையை சரியாக செய்யும் சனீஸ்வரப்பெருமான் மனிதனிலும் எப்படி செயற்படுகிறார் என்றும்,பிரபஞ்ச அமைப்பில் எவ்வாறு செயற்படுகிறார் என்ற தகவல்களை கதை வடிவில் பார்க்கப்போகிறோம்.
இந்தக்கதைகள் நீங்கள் வாசிக்கும் போது உங்கள் உணர்வில், ஆழ்மனதில் சனீஸ்வர பகவானின் ஆற்றல் செய்கைகளை தெளிவுற உணர்வீர்கள், அந்த உணர்வு உங்கள் அகப்பிரபஞ்சத்தில் பதிவதால் எந்தெந்தெந்த விடயங்களில் சனீஸ்வரர் உங்களுக்கு தாக்கங்களை தருவார், உயர்வினை தருவார் என்ற ஞானம் மனதில் பதியும், அதன் பயனாக எமது அகப்பிரபஞ்சம் மாறுதலடைவதால் அவரது செய்கைகள் எல்லாம் எமக்கு நன்மையினைப் பயக்கும் அருள் நிலையை பெறலாம்.
நல்ல விளக்கம்.. புராண இதிகாசங்களை தர்க்கத்திற்கு உட்படுத்த வேண்டாம் என்பதை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
ReplyDeleteவாழ்த்துக்களுடன்