அண்மையில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக இரண்டு பெருந்தகைகளுடன் உரையாடும் சந்தர்ப்பம் வாய்த்தது!
அவர்கள் செய்யும் பணியும், ஈ-கல்வி திட்ட மாதிரியும் (project model) இலங்கையில் கல்வி வளர்ச்சிக்கு - குறிப்பாக மலையக கல்வி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்ற உத்வேகம் உள்ள இளைஞர்களுக்கு, சமூக குழுக்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்!
அந்த இரண்டு பெரியவர்களும் Muralee Muraledaran & Dr. Kumaravel Ganeshan ஆவார்கள்!
திரு முரளீதரன் ஐயா அவர்களுடைய சிந்தனையைக் கேட்டபோது உண்மையில் சொல்ல முடியாத பூரிப்படைந்தேன்! ஒரு சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவன் கொள்ள வேண்டிய அறம் பற்றி அவர் உரையாடியதை சுருக்கமாக கீழே;
1) அந்த உதவியிலிருந்து எந்தப்பிரதிபலனும் பார்க்கக்கூடாது;
2) உதவி என்பது பணத்தை அள்ளி வெளிப் பகட்டிற்கு கொடுப்பதல்ல; ஒருவன் கல்வி கற்பதற்கு வழி இல்லை எனும்போது நாம் இருக்கிறோம் கரம்கொடுக்க என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலே அந்த நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஏறி வந்துவிடுவார்கள் என்பது!
3) பிள்ளைகள் படித்து முன்னேற என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்; எமக்கு பெயரும் வேண்டாம், புகழும் வேண்டாம், அவர்கள் படித்தாலே போதும்!
இந்த மூன்றும் கல்வியைச் சமூகப் பணியாக முன்னெடுக்க விரும்பும் ஒரு குழு பின்பற்ற வேண்டிய மனப்பண்பு!
கலாநிதி குமாரவேல் கணேசன் தேர்ந்த ஆய்வாளர்; ஒரு விஷயத்தை எப்படி முறைப்படி systemic ஆக அணுக வேண்டும் என்ற நுணுக்கம் தெரிந்த அறிஞர்! செய்யும் செயல் எவ்வளவு விளைவைத்தருகிறது, எப்படி விளைவைத் தருகிறது என்பதை புள்ளிவிபரவியலுடன் விளக்கக் கூடிய ஆழமான மனிதர்!
இன்று உலகமே online digital education என்று வந்து நிற்கும் போது பலவருடங்களுக்கு முன்னர் skype இன் மூலம் வசதியில்லாத மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பொதுவாக சமூக செயல் என்பது சொந்தப் பகட்டிற்காகவும், அரசியல் பிரபலத்திற்காகவும், தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளவும் செய்யும் செயலாகத்தான் சமூக ஆர்வலர்கள் பலராலும் செய்யப்படுகிறது. ஆனால் கல்வித்திட்டங்கள் அப்படி நடைமுறைப்படுத்த முடியாது! அவை உண்மையான விளைவைத் தரமுடியாது!
சமூகத்தில் பணம் உள்ளவர்கள் அதற்குத் தேவையான வசதிகளைக் கொடுக்க வேண்டும்; கற்றறிந்த கல்வியாளர்கள் திட்டத்தை சரியாக முன்னெடுக்க வேண்டும்.
கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சுயநலமற்ற உத்வேகம் (motivation), சரியான விளைவைப் (மாணவர்கள் கல்வியில் ஆர்வம், சிறந்த பெறுபேறு) பெறக் கூடிய சரியான உத்தி எது என்ற ஆய்வும், தெளிவும் இருக்க வேண்டும்.
இதற்கு இத்தகைய கல்வியாளர்களின் சிறந்த சிந்தனை உள்வாங்கப்பட வேண்டும். அவர்கள் செய்யும் செயலை எமக்குப் போட்டியாக எண்ணாமல் அவர்கள் அறிவையும், உதவியையும் எமது சமூகத்திற்கு எப்படிப் பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்!
பணமுடைய வியாபார சமூகம் கல்வியாளர்களை மதிப்புடன் சமூக நன்மைக்கு பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கி உதவவேண்டும்!
அரசியல்வாதிகள் கல்வியாளர்களை போட்டியாளர்களாக எண்ணாமல் எப்படி தனது தொகுதியில் நல்ல கல்வித்தரத்தை வளர்ப்பது என்று சிந்தித்து தம்மை பலப்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் சமூகத்தின் கல்விப் பணி என்று வரும் போது உள்ளகப் போட்டியை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பலமாக எப்படி இயங்குவது என்று பரந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.