எத்தனை பேருக்கு இப்படியான நட்பாக இருக்க ஆர்வம் இருக்கிறது?
எத்தனை பேருக்கு இப்படியான நட்புக் கிடைத்திருக்கிறது?
உரையாடுவோம்!
புத்தபெருமான் ஒரு தியான சாதகனுக்கு, பிக்குவிற்கு, வாழ்க்கையில் முன்னேற வேண்டியவனுக்கு இருக்க வேண்டிய நட்பினை கல்யாண மித்திரன் என்கிறார். இதன் அர்த்தம் போற்றத்தக்க நண்பன் என்று மொழிப் பெயர்க்கப்பட்டாலும் தமிழில் ஆத்ம நண்பன் என்பது சரியான சொல்லாக இருக்கும். இத்தகைய போற்றத்தக்க/ஆத்ம நண்பன் வாய்த்தால் அவனுடைய ஆன்ம முன்னேற்றம் சிறக்கும் என்கிறார்.
திருவள்ளுவர் நட்பினைப் பற்றி மொத்தம் 17 அதிகாரத்தில் 170 குறள்களில் விரிவாக விரித்துரைத்திருக்கிறார்.
புத்தர் குறிப்பிடும் போற்றத்தக்க நண்பன் ஒருவனின் மனதை தூயவழியில் செலுத்தக் கூடிய ஆற்றல் உள்ள நண்பன் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார்:
எவன் ஒருவன் முழுமையாக ஸ்திர புத்தியை பின்பற்றுகிறானோ, எவன் ஒருவன் சீலத்தில் நிலைபெற்று சீலத்தில் முழுமையாக நிலைக்கிறானோ, எவன் ஒருவன் விவேகத்தில் நிலை பெற்று விவேகத்தில் நிலைக்கிறானோ, எவன் ஒருவன் நம்பிக்கையில் நிலை பெற்று நம்பிக்கையில் நிலைக்கிறானோ, கருணையில் நிலைபெற்று கருணையில் நிலைக்கிறானோ, அத்தகைய ஒருவனின் நட்பினைப் பெற்று ஒருவன் அவன் மூலம் இந்தப் பண்புகளை வளர்த்தெடுப்பதே கல்யாண மித்ரம் - போற்றத்தக்க நட்பு என்கிறார்!
இத்தகைய நட்பிற்கு ஏழு பண்புகளை பௌத்த தியான மூல நூலான விசுத்தி மார்க்கம் அட்டவணைப்படுத்துகிறது:
1) அன்புடமை - நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்பார் வள்ளுவர். நண்பனிடம் உண்மையான அன்பிருக்க வேண்டும்! இந்த அன்பு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவன்/அவள் நல்ல நிலை பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மாத்திரம் இருக்க வேண்டும்.
2) மதிப்புடன் இருத்தல் - ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புடன் அணுகுதல்.
3) வணங்குவதற்குரிய தெய்வீகப் பண்புகளைக் கொண்டிருத்தல்.
4) எந்தத்துன்பத்திலும் தகுந்த சரியான ஆலோசனையைப் பெறக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்.
5) ஒருவரின் பிரச்சனையை நன்கு செவிமடுக்கக்கூடிய பொறுமை உடையவனாக இருத்தல்.
6) எந்தச் சந்தேகம் வந்தாலும் அதை முழுமையாக விளக்கி மனதை உறுதி நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் உடையவர்.
7) தேவையற்ற, பயனற்ற விடயங்களை உரையாடி மனதினைக் குழப்பாதவராக இருக்க வேண்டும்.
இந்த ஏழு பண்புகள் உடைய ஒருவரை நட்பாகப் பெற்றால் அத்தகையவன் தனது மனதினை அறிந்து, உண்மையைப் புரிந்து துன்பங்களிலிருந்து விரைவில் வெளிவருவான்.
நாம் ஒவ்வொருவரும் மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆத்ம நண்பர்களாக கல்யாண மித்ரர்களாக மாற 2021 ஆண்டில் சங்கல்பித்துக் கொள்வோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.