அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் வெள்ளம் என்று ஒரு பகுதியில் உரையாடிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரம்மியமான இயற்கைச் சூழல் என்ற விதத்தில் பலரும் கீழ்வரும் சரசாலை வாய்க்காலின் படத்தைப் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்! இன்னும் ஒரு படி மேலே சென்று சுற்றுலாத் துறைக்கு உகந்த இடம் என்றும் இப்போது பிரபலப்படுத்தத் தொடங்கிருக்கிறார்கள்!
இனி இந்தச் சூழல் மாசடைதலை நோக்கிச் செல்லும்! வார இறுதியில் வாடா மச்சான் சரசாலை வாய்க்காலில் பார்ட்டி போடுவோம், புரியாணி சமைப்போம் என்று ஒரு கூட்டம் கிளம்பும்!
வீட்டுக்குள்ள இருக்கிறது ஒரே stress என்று கொழும்பில் இருப்பவர் வார இறுதிக்கு இந்த வாய்க்கால் கரையோரம் குடும்பத்துடன் இன்பமாக இருக்க வெளிக்கிட்டு வருவார்!
இப்படி வருபவர்கள் மென்பானமும் வன்பானமும் குடித்துவிட்டு வாய்க்காலில் எறுவார்கள்! புரியாணி பக்கட் வீசப்படும்!
வாய்க்கால் அடைபடும்!
அடுத்த வருடம் சரசாலையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு என்று முகநூல் போராளிகள் புலம்புவார்கள்!
வெள்ளம் வடிந்தவுடன் சரசாலை பிரதேசபை (??) பிளாட்ஸ்டிக் போத்தல்களை அள்ளும்! நாம் எல்லோரும் வெள்ளத்திற்கு முதல் பிரதேச சபை என்ன செய்துக் கொண்டிருந்தது? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்போம்!
நண்பர்களே, இயற்கை உங்களை மகிழ்விக்க, மனக் களிப்பிற்குரிய இடம் என்றால் அதைப் பக்குவமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் உங்களுடையது! எங்கோ இயல்பாக இருக்கும் இயற்கையில் சென்று குப்பை கொட்டி அதை அழுக்காக்கி நிம்மதி பெறுவதை விட உங்களிடம் ஒரு சிறுதுண்டு காணி இருந்தால் அதில் ஒரு உணவுக்காட்டினை உருவாக்குங்கள்! நீரோட்டம், சிறுகுட்டை உருவாக்கி நீர் சேமியுங்கள்! மீன் வளருங்கள்! பறவைகள் உங்களைத் தேடிவரும்! நீங்கள் உங்கள் ஆற்றலுக்குள் இயற்கையை உருவாக்கி அதைப் பேணி இன்புறுங்கள்!
எங்கோ இயற்கை அன்னை இயல்பாக உருவாக்கி இருக்கும் இடத்திற்குச் சென்று சுற்றுலா என்ற பெயரில் அதை அசுத்தப்படுத்தி இன்பம் காணாதீர்கள்!
இயற்கை போகப் பொருள் அல்ல!! எம் மனம் போன போக்கில் அனுபவிப்பதற்கு! இயற்கை எம்மை வலிமைப்படுத்தும் எமது ஆதார சக்தி, எமது அறியாமையால் அதை அழித்தோம் என்றால் எமது எதிர்காலச் சந்ததிக்குரிய முதுசங்களை அழித்தவர்களாவோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.