இன்று கால பைரவ - வைரவ அஷ்டமி
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வீட்டிற்கொரு வைரவர் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு!
வேள்வி எனும் ஆட்டுப் பலி வைரவருக்கு படையலிடும் கலாச்சாரமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது!
வைரவர் அகச் சத்துருக்களையும், புறச் சத்துருக்களையும் அழிக்கும் சிவமாகிய அறிவின் -விழிப்புணர்வின் அமிசம்!
வைரவரை தியானிக்கும் முறையை திருமூலர் 1291 - 1295ம் பாடல் வரை கூறுகிறார்.
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அச் சத்தமி மேலிவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து, வலம்அது வாக நடவே.
இந்தப் பாடல் வைரவரை ஆன்ம, வித்யா, சிவ தத்துவங்களான முப்பத்தாறு தத்துவங்களில் எப்படி யந்திரமாக்கி - வைரவச் சக்கரமாக்கி தியானிக்கும் முறையைக் கூறுகிறது. இது குருமுகமாகப் பயில வேண்டிய சாதனை என்பதால் விளக்கம் தரப்படவில்லை! அவரவர் குருவை அண்டித் தெளிவு பெறுக.!
நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கி
தொடர்ந்த வுயிரது உண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாடலாமே.
மேற் குறித்த முறையில் வைரவச் சக்கரம் அமைத்து எமக்குள்ளேயுள்ள தத்துவங்களில் வைரவரை நிறுத்தி தியானிக்கும் போது அந்த வைரவர் சூல கபாலியாக தோற்றம் பெறுவார்.
திரிசூலம் எமக்குள் இருக்கும் மும்மைகளை (இடகலை, பிங்கலை, சுழுமுனை, சூரியகலை, அக்னி கலை, சந்திரகலை, தாமசம், ராஜசம், சத்துவம்) ஒடுக்கி உயிரை சிவத்தை நோக்கிச் செலுத்தும் ஆயுதம், சிவத்தை அடையவிடாமல் எம்மைத் தடைப்படுத்துவது அகங்காரம் என்ற ஆணவம் - இது கபாலத்தில் இருக்கும் வரை சிவயோகம் சித்தியுறாது! ஆகவே வைரவரின் சூலத்தின் துணையுடன் கபாலத்தில் உள்ள ஆணவத்தை பிளக்க வேண்டும். அகப்பகைவர்களில் முதன்மையானது ஆணவம் - இது கபாலத்தால் குறிக்கப்படுகிறது. இது வைரவரால் கொய்யப்படும்.
இப்படி ஆணவம் கொய்யப்பட்டால் இந்த ஆணவமலம் ஏற்படுவதற்கு மூல காரணம் தவறான பார்வை! மயக்கமான பார்வை! அடுத்து வைரவர் அகப் பகைவர்கள் உருவாக முதன்மையாக இருக்கும் தவறான பார்வையை நீக்குவார்!
இப்படி வைரவரை தியானிக்க அவர் ஆணவத்தை நீக்கி, சிவத்தை அடையவெண்ணாமல் செய்யும் மனதின் தவறான பார்வையை நீக்கி, அகப் பகைவர்களை எல்லாம் அழித்து உயிரை சிவமாகிய ஒளியை உண்ணச் செய்விப்பார்.
கடைசி வரியை பலரும் எதிரியின் உடலைப் பந்தாடுவார் என்று பொருள் கொள்வார்கள். திருமந்திரம் சிவயோக நூல் என்ற பிரமாணத்தில் கீழ்வருமாறு சொற்பிரித்தால்,
படர்ந்த - சிவ ஒளி படர்ந்த
உடல் - உடலை
கொடு - கலப்பை (பிங்கல நிகண்டு)
பந்தாடலாமே - உழமுடியும்
இந்தக் கடைசி வரி வைரவர் சிவயோக சாதனையில் என்ன சித்தியினைத் தருவார் என்பதை விளக்குகிறது. சிவ ஒளி படர்ந்த இந்த உடலை சிவயோக சாதனை எனும் கலப்பையால் (கொடு) உழ வைரவர் அருள் வேண்டும்.
ஆக ஒருவன் தனது ஆணவ மலத்தை அழித்து, சிவயோகத்தில் சித்தி பெற வைரவர் அருள் பெற வேண்டும் என்பது இந்தப் பாடலால் கூறப்பட்டது.
அடுத்த பாடலில் ஷட்புஜ பைரவர் எனும் அறுகர வைரவரின் உருவ விளக்கம் வருகிறது.
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.
கபாலம், சூலம், உடுக்கை, பாசம், கொய்யப்பட்ட தலை, வாள் ஆகிய ஆறு ஆயுதங்களை ஏந்தியபடி இருக்கும் வைரவரை தியானிக்கும் படி கூறப்படுகிறது!
மிகுதி நாளை!