நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்
-----------------------
நாள் -03
----------------------------------------
Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு!
***************************************************************
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
Translation:
Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.
முதற் குறளில் ஒரு தலைமை நிர்வாகி – அரசன் கவனிக்க வேண்டிய ஆறு காரணிகளை கூறியவர் அடுத்த குறளில் அவனுக்கு இருக்க வேண்டிய நிர்வாக இயல்புக்குரிய நான்கு அத்தியாவசிய குணங்களை கூறினார். பின்னர் ஒருவன் சிறந்த முடிவெடுக்கும் திறனுடையவனாக இருக்க வேண்டிய தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகிய மூன்று ஆற்றல்களைப் பற்றி கூறி அடுத்த குறளில் ஒரு நிர்வாகத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படை நெறிமுறை பற்றி கூறுகிறார். ஒரு தலைமை நிர்வாகி தனது வியாபாரத்திற்கும், சேவைக்கும் உரிய மூலப் பொருட்களைப் பெறுவதிலிருந்து, தனது சேவையை வாடிக்கையாளருக்கு வழங்கும் வரை உள்ள பொறிமுறையில் அறத்துடன் இருத்தல் அவசியம்.
அறம் என்பது இது சரியானது என்று உய்த்துணரும் அறிவு. இன்றைய காலகட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கும் முகாமைத்துவத்தையே (sustainability management) சரியான வியாபார தத்துவமாக கருதப்படுகிறது. நீடித்து நிலைத்திருக்கும் நிலை வேண்டுமென்றால் சூழலிருந்து பெறப்படும் வளங்கள், அதை உபயோகிப்பதால் வரும் கழிவுகள் சரியாக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.
இந்த வளத்திலிருந்து பெறப்படும் உற்பத்தி செய்யும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சரியான பலனைப் பெறவேண்டும்.
விற்பனை மூலம் உருவாகும் இலாபம் சரியான பொருளாதாரக் கொள்கைகள் மூலமும், நிதி முகாமைத்துவம் மூலமும் பராமரிக்கப்பட வேண்டும்.
இத்தகைய நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தியை விரும்பும் தலைமை நிர்வாகி தனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்களும் அறத்துடன் நடத்தல் அவசியமாகும்.
தனது படைகளையும், அமைச்சினையும் சிறந்த அற விழுமியங்களை போதித்து கடைப்பிடிக்கச் செய்வது தலைமை நிர்வாகியின் முதன்மை கடமைகளில் ஒன்றாகும்.
வளங்களைப் பயன்படுத்தும் போது அதீதமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு அற்றுப்போய் விடாமல் கவனமாக பாவித்தலில் தலைமை நிர்வாகியின் திட்டங்கள், ஏற்பாடுகள் இருத்தல் அவசியமாகும்.
வியாபார உறவுகளை உருவாக்கும் போது நம்பகத் தன்மையுடன் உறவுகளை உண்டாக்குதல் அவசியம். ஏன் அற நெறிமுறைகளில் தலைமை நிர்வாகி கவனம் செலுத்த வேண்டும்? குடிகளாகிய வாடிக்கையாளர்கள் தாம் பெறும் சேவைகள், பொருட்கள் அறநெறிக்கு உட்பட்டவையா என்பதை அவதானத்துடன் கவனித்து, அத்தகைய மரியாதை உள்ளவற்றையே தமது முதன்மை தேர்வாக எடுத்துக் கொள்வார்கள்.
இதனை இன்றைய காலகட்டத்தில் corporate reputation/Image என்று சொல்லுவார்கள். இன்றைய காலகட்டத்தில் சமூகத்திற்கு, சூழலிற்கு, வளங்களை பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுக்கும் நிர்வாகிகளை மக்கள்/வாடிக்கையாளர்கள் மதிப்பதில்லை. ஆகவே சிறந்த நிர்வாகமாக இருக்க வேண்டுமானால் சூழலிற்கும், சமூகத்திற்கு தீமை தரக் கூடிய அறநெறி முறைகள் அல்லாதவற்றை நீக்கி மறம் என்ற தைரியத்துடன் தமது மரியாதைக்கு குறைவேற்படாத வகையில் தமது முடிவுகளை எடுக்கும் திறனுடையவராக தலைமை நிர்வாகி இருத்தல் அவசியம்.
இத்தகைய தலைமை நிர்வாகியை கொண்ட நிர்வாகமே நல்ல நிர்வாகம். இந்தக் குறளில் நல்ல நிர்வாகம்/அரசு என்பது நெறிமுறைகளுக்கு உட்பட்டு தனது நிர்வாகத்தை செய்ய வேண்டும் என்பதனை தெளிவாக உரைத்துள்ளார்.
ஸ்ரீ ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.