நான் எழுதுவது வித்தகச் செருக்கில் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் இல்லை! அனைவரையும் ரட்சிக்க வந்த மேய்ப்பர் என்ற நினைப்பும் இல்லை! எல்லையற்ற ஆர்வத்துடனும் (curiosity) பேரார்வத்துடனும் (passion) உலகில் பயணிக்கும் பயணி அவ்வளவு தான்!
எழுதுவது மனதிற்கு மிகுந்த இன்பம் தரும் செயல், சிந்தனையை ஒழுங்குபடுத்தி, எண்ணங்களைச் சொற்களாக்கி, சொற்களை கோர்த்து, எழுத்தில் கொண்டு வரும் போது மனம் ஒருவித சந்தத்தில் ஒருமைப்படும். இப்படி ஒருமைப்படும் மனம் எப்போதும் இன்பமாக இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் எழுத்து ஒரு இன்பத்திற்கான வழி!
தனி நபர்களைப் பற்றிய விமர்சனமோ, கருத்தோ, நன்மை தீமைகளைப் பற்றி எப்போதும் விலகியே இருக்கிறேன். ஏனென்றால் இவை தேவையற்ற உணர்ச்சிகளை எம்மில் உருவாக்கி எமது மூளையின் சம நிலையைக் குலைக்கும்!
நான் மனிதர்களை எண்ணங்களாகவே பார்க்கிறேன், எண்ணங்கள் கணத்துக்கு கணம் மாறும், ஆகவே இப்போது இருக்கும் நபர் அடுத்த கணத்தில் இருப்பதில்லை, ஆகவே ஒருவரைப் பற்றி ஏதாவது முத்திரை குத்தினால் அடுத்த கணம் அவர் அந்த முத்திரையிலிருந்து மாறியிருப்பார். ஆகவே மாறிக்கொண்டு இருக்கும் எண்ணங்களை வைத்து ஒருவரை அடையாளப்படுத்தி அவர் மீது விருப்பு, வெறுப்பு ஏற்படுத்தும் செயலை நான் எப்போதும் செய்ய விரும்புவதில்லை!
அதைப் போல் எவரையும் அறிவாளி என்று மெச்சுவதோ எவரையும் அறிவிலி என்று பரிகாசிப்பது கிடையாது! அறிவு என்பது அனுபவத்தினால் வருவது! அனுபவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு அறிவு வாய்ப்பதில்லை!
அடிப்படையில் அனைத்தும் அன்பு என்ற தங்க இழையினால் பிணைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தும் அன்பினைப் பகிர்வதற்கான ஒரு வழியும் கூட....
ஆகவே என் வழி கணியன் பூங்குன்றனார் வழி;
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமையில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால், பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
(புறநானூறு: 192)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.