நாளுக்கு 2 திருக்குறட் பா விகிதம் 5 நாட்களுக்கான சவால்
-----------------------
நாள் -02
----------------------------------------
Vimalathithan Vimalanathan இனின் திருக்குறள் சவாலின் ஒருபகுதி, தினசரி 01 குறட் பா எனது முடிவு!
***************************************************************
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
Translation:
A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.
*************************************************************
நிர்வாக அதிகாரி கவனிக்க வேண்டிய ஆறு புறக் காரணிகளை முன்னர் கூறினோம். இந்த ஆறு காரணிகளும் சரியாக இருந்தாலும், குறித்த நிர்வாக அதிகாரி அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டிய அகப் பண்புகள், இந்த அகப் பண்புகளை சரியாக கொண்டிருக்காவிட்டாலும் நிர்வாகம் விழுந்து விடும். மேலே கூறிய குறைவில்லாமல் இருக்க வேண்டிய நான்கு அகப் பண்புகளுடன் ஆளும் நிர்வாகிக்கு நீங்காமல் இருக்க வேண்டிய மேலும் மூன்று பண்புகள் பற்றி இந்தக் குறளில் விதந்துரைக்கிறார்.
ஒருவன் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டுமென்றால் கீழ்வரும் மூன்று பண்புகளை நீங்காமல் பெற்றிருக்க வேண்டும்.
தூங்காமை: இன்றைய நிர்வாக முகாமைத்துவத்தில் இருக்கும் பெரிய பழுது சரியான நேரத்தில், சரியான முடிவு எடுக்காமை. முடிவெடுப்பதில் தாமதம், இந்த தூங்கும் பண்பு உள்ளவன் எப்போதும் சிறந்த நிர்வாகியாக வர முடியாது. ஆகவே சிறந்த நிர்வாகி என்பவன் துரிதமாக முடிவுகளை எடுக்கும் ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். தாமதமான, சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகளே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தூங்காமை என்பதை சோர்ந்து போகாமை என்று பொருள் கொள்ள வேண்டும்.
கல்வி: சரியான, துரிதமான முடிவுகள் எடுப்பதற்கு துறைசார்ந்த புரிதல் அவசியம், அந்த புரிதலின் அடிப்படை கற்கும் கல்வியில் இருந்தே வருகிறது. ஆகவே சிறந்த நிர்வாகியாக இருப்பதற்கு அடிப்படை அந்த துறைசார்ந்த விடயங்களில் தனது அறிவினை பெருக்கி, தெளிந்து இருக்க வேண்டும், இதற்கு கல்வி அவசியம். துரிதமாக முடிவெடுக்கலாம் ஆனால் எடுத்த முடிவு சரியாக இருப்பதற்கு அறிவுத் தெளிவு அவசியம். அந்த அறிவுத்தெளிவை தருவது கல்வி. ஆகவே சிறந்த நிர்வாகி அந்த துறைசார்ந்த அடிப்படைக் கல்வியினை பெற்றிருத்தல் அவசியம்.
துணிவுடைமை: தூங்காமையுடன் துரிதமாக முடிவு எடுக்கும் திறனுக்கு தேவையான முதல் அகப் பண்பு கல்வி என்றால் இரண்டாவது அத்தியாவசிய பண்பு துணிவுடைமை. முடிவுகள் எடுக்கும் போது அதன் விளைவுகள் சாதகமாக இருந்தால் வெற்றி, இல்லாவிட்டால் அதன் விளைவுகளை தலைமை நிர்வாகியே சந்திக்க வேண்டும். பலரும் முடிவு எடுக்காமல் தேங்குவதற்காண முதற்காரணி முடிவுகளின் விளைவு என்னவாக இருக்குமோ என்ற பயம். அந்த பயம் இருபவனால் எதையும் தலைமை தாங்கவோ, குழுவை வழி நடத்தவோ, வெற்றி பெறவோ முடியாதவனாகி விடுவான். ஆகவே கல்வி அடிப்படை புரிதலை தந்தாலும், வெற்றி பெறுபவன் துணிவுடன் சரியான முடிவுகளை எடுப்பவனே.
இந்தக் குறள் என்னைப் பொறுத்த வரையில் அருமையான குறள். முடிவெடுக்கும் போது விரைவாக முடிவெடுக்க வேண்டும், அப்படி விரைவாக முடிவெடுக்கும் போது தவறான முடிவாக இருக்க கூடாது, அதற்கு சிறந்த புரிதல் வேண்டும், அந்தப் புரிதலைத் தரும் கல்வியினை ஒருவன் சரியாக பெற்றிருக்க வேண்டும். அப்படி சரியான கல்வியறிவு பெற்ற அனைவரும் சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வருவதில்லை, ஏனெனில் பலரும் தாம் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவு வருமோ என்ற பயம், அந்த பயத்தை உதறி துணிவுடன் முடிவு எடுப்பவன் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆக இந்தக் குறளில் மூன்று பண்புகளையும் கோர்வையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.