இல்லறம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஆன்ம முன்னேற்றத்தை அடைவதற்கான
வாய்ப்பு. அது புனிதமானது, அர்த்தமுள்ளதும் முக்கியமானதுமாகும். பூரணமற்ற இரு ஆன்மாக்கள்
கணவன் மனைவியாக ஒற்றுமையாக இணைந்து பூரண வாழ்க்கையை மேற்கொள்ளும் நிகழ்வு அது. இரண்டு
இறக்கைகள் கொண்ட பறவைகள் போல அல்லது சக்கரங்கள் கொண்ட தேர் போல ஆணும் பெண்ணும் இணைந்து
வலிமையான உறுதியான ஒரு தொகுதியை உருவாக்கும் நிகழ்வு இல்லறம். உளவியல் நிபுணர்களுக்குத்
தெரியும் ஆண்களதும் பெண்களதும் பலமும், பலவீனங்களும் என்னவென்று. ஒருவர் மற்றொருவரது
பலவீனத்தை நிரப்பும் பலமாக செயற்படுவதே. ஆணும் பெண்ணும் கவர்ச்சியுறுவது மற்றவரின்
ஆற்றலைப் பெற்று தன்னை பலப்படுத்திக்கொள்ளவே. எப்பொழுதும் எமது ஆழ்மனம் எமது பலவீனத்தை
பூர்த்தி செய்து வலிமையடைவதற்குரிய மார்க்கத்தைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. இதுவே
ஒவ்வொருவருக்கும் இருக்கும் நட்பிற்கும் உறவினைத் தேடுவதற்குமான காரணமாகும். ஒரு குருடன் மற்றவர்களின் உதவியுடன் தான் நடமாடுவதுபோல்
தம்பதியினர் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் வேண்டும்.
அடிப்படையில் ஆண்கள் கூடாதவர்கள், பெண்கள் கூடாதவர்கள் என்ற
பொதுமைப்பாட்டுக்கருத்துடன் ஒருவர் மற்றொருவரது ஆன்மீக வாழ்க்கைக்கு தடையானவர்கள் என்ற
கருத்து தவறானது. எல்லோரும் இறைவனின் படைப்பே. அனைவருக்குள்ளும் அந்த இறைவனின் ஒளி
மறைந்து இருக்கத்தான் செய்கிறது. ஆண் வீட்டிற்கு வெளியே அதிகம் புழங்குவதால் அவனது
வெளிப்புற ஆளுமை விருத்தியடைகிறது. வலிமையான, மற்றவர்கள் மேல் செல்வாக்குச் செலுத்தும்
புத்திசாலித்தனம் விருத்தியடைகிறது. ஆனால் தொடர்ச்சியான இந்தப்போராட்டத்தால் அவன் தனது
அகத்தில் ஆன்மாவின் நல்ல பண்புகளை இழந்து விடுகிறான். அதனால் எளிமை, உயிர்ப்புடன் செயலாற்றுதல், நேர்மை,
தியாகம், கருணை, அன்பு ஆகிய நல்லுணர்ச்சிகள் ஆணைவிட பெண்ணிலேயே அதிகம் காணப்படுகிறது.
பெண்கள் குணத்தில் ஆணைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பலரும் கூறுவதுபோல் பெண்
மாயையின் உரு, பெண்ணுடன் இருந்தால் ஆன்மீக நிலை தவறிவிடும் என்பது தவறான கருத்து. பெண்ணுடன்
இருக்கும் ஒரு ஆண் தனது அரக்க இயல்பினை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவளது அன்பும்
அருளும் அழகிய நதிபோன்றது, அது அவனது மனதைச் சுத்தி செய்து, மனதைப் பாவங்களிலிருந்து
விடுத்து துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யக்கூடியது.
பாவங்களும் புண்ணியங்களும் வெளிப்படையாகச் செய்யும் செயல்களில்
மட்டும் இல்லை. நாம் எமக்குள் எண்ணும் எண்ணமும் செயலிற்கான நோக்கமும் காரணமாகும். தன்னலமும்
தன்னலமின்மையும், நற் செயல்களும், தீய செயல்களும் வெளியே செய்யப்படும் செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை,
அந்தச் செயலைச் செய்வதற்கு தூண்டிய மனப்பாங்கு எது என்பதைப் பொறுத்தே அமைகிறது. இறைவனின்
நீதிமன்றத்தில் வெளிப்புறச் செயல்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. செயலிற்குப் பின்னால்
இருக்கும் நோக்கமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
இல்லறம் இல்லாவிட்டால் எப்படி நல்ல பழக்கவழக்கங்களுடைய குழந்தைகள்
உருவாகுவார்கள்? எப்படி உயர்ந்த யோகிகள் உருவாகுவார்கள்? இல்லற யோகம் எல்லாவிதமான ஆன்மீக
சாதனைகளையும் பயிற்சித்து சித்தி செய்யக்கூடிய புனிதமான ஆன்ம முன்னேற்றம் தரக்கூடிய
ஒரு அரிய வாழ்க்கை முறையாகும். எந்தவொரு குடும்பஸ்தனும் தனது குடும்ப வாழ்க்கையால்
தனது ஆன்மீகம் இல்லாமல் போகிறது என்று எக்காலத்திலும் எண்ணக்கூடாது. அடிப்படையில் திருமண
வாழ்க்கைக்கும் திருமணமற்ற வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒவ்வொருவருடைய
தேர்வும் அவரவர் வசதி, ஆர்வம், வாழ்க்கைமுறையில் தங்கியுள்ளது. யாருடைய வாழ்க்கை முறை
மனைவி பிள்ளைகள் என்று அதிக பொறுப்புகளைச் சுமக்க முடியாதபடி இருக்கிறதோ அவர்கள் திருமணமற்ற
வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். யாருக்கு உறுதியான வாழத் தேவையாவான வசதிகளும்
மனப்பண்பும் இருக்கிறதோ அவர்கள் திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த வாழ்க்கையத்
தேர்ந்தெடுத்தாலும் தூய, தன்னலமற்ற, ஆன்ம முன்னேற்றம் விளையும் நோக்கம் இருந்தாலும்
அங்கு துரித முன்னேற்றம் நடைபெறும்.
அடுத்து
இல்லறயோகத்தின் அடிப்படைகளைப் பற்றிப்பார்ப்போம். வாழ்வின் அடிப்படை இந்த ஜீவான்மா
இறுதியாக பரமான்மாவை அடைதாலாகும். எமது சுய நல எண்ணங்ககளைத் துறந்து அனைத்து உயிர்களும்
நலமாக வாழச் செய்யக்கூடிய ஆன்மீகச் செயல்கள் சாதனை எனப்படுகிறது. இந்த சாதனாவை வாழ்வில்
செய்வதற்கு பலவிதமான முறைகள் இருக்கிறது. இல்லற யோகம் ஒரு வழியாகும். ஒரு குழந்தை தனது
திறனகளை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். தனது வாழ்க்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட
திறனை வளர்த்துக்கொள்ளும் இடம் வீடாகும். ஆகவே எமது அகத்தைப் பண்படுத்தும் சாதனையும்
தொடங்கப்பட வேண்டிய இடம் வீடாகும். வாழ்வில்
மேன்மை, சுயகட்டுப்பாட்டுடன் நாகரீகமாகவும், சுய சார்புடையவரகளாகவும் உருவாக மிகச்சிறந்த
இடம் வீடாகும். இதைச் சாதிப்பது வீட்டில் இலகுவாக இருக்கும், ஏனென்றால் வீட்டில் இயல்பாகவே
அன்பு, பொறுப்பு, கடமை, ஒருவரை ஒருவர் தங்கியிருத்தல், ஒற்றுமை என்பன காணப்படுகிறது.
வீடு மற்றவர்களது தாக்கம் இன்றி எம்மை நாமே வளர்த்துக்கொள்ள நல்ல இடம்.
இல்லற யோகத்தினைத் தேர்ந்தெடுக்கும் சாதகன் கீழ்வருமாறு தனது
சிந்தனையில் தியானானிக்க வேண்டும்.
·
குடும்பமே எனது சாதனைக்கான
புனித ஆசிரமம். எனது பூஜை அனுஷ்டானங்கள் என்பது எனது வீட்டினையும் குடும்பத்தினையும்
அழகாகவும், நறுமணமுள்ள, வளமான தோட்டத்தைப் போன்று ஆக்குவதற்கு எனது சக்தி முழுவதையும்
செலவழிப்பேன். கடவுள் மேலுள்ள பக்தி என்பது என்மீது நம்பிக்கை வைத்து எனக்குத் தரப்பட்டுள்ள
எனது பொறுப்புக்களை சரிவரச் செய்வது. மலர்த்தோட்டத்தை நீரூற்றி, பராமரித்து செழிப்படையச்
செய்வது போன்று நானும் எனது குடும்பத்தவர்கள் அனைவரது வாழ்வினையும் செழிப்படையச் செய்வேன்.
எனது குடும்பத்தில் எவரையும் சிறியவர், பயனற்றவர், எனது சேவையினைப் பெறத் தகுதியில்லாதவர்
என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்க மாட்டேன், சுய கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நானே அதிகாரி,
வழிகாட்டி, தலைவர், எல்லாவற்றையும் முடிவெடுப்பவன் என்ற அகங்காரம் கொண்டிருக்கமாட்டேன்.
எப்போதும் சுய கட்டுப்பாட்டுடன் முடிவெடுப்பேன்.
நான் கருணையுடனும், சுய நலமற்று எனது சேவையை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆளுமையினையும்
விருத்தி செய்யப் பாடுபடுவேன்.
·
எனது சரணாகதி என்பது கடமையுடன்
எதையும் எதிர்பார்க்காமல் தூய மனதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்வது.. எனது தவம் என்பது
எனது குடும்பத்தவர்கள் அனைவரும் வசதியாக, மகிழ்வுடன் வாழ்வதற்குரிய வழிமுறைகளைச் செய்வது.
·
எனது யாகம் என்பது உலகமும்,
எனது குடும்பத்தவர்களும் உண்மையுடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும், அமைதியாகவும்,
மகிழ்வாகவும் வாழ்வதற்குரிய செயல்களைச் செய்வது.
·
எனது மத உறுதிமொழி என்பது
எனது நடத்தையும், செயலும் தூய்மையாகவும், இலட்சியமுடையதாகவும், மற்றவர்களை உத்வேகப்படுத்தும்
படியாகவும், மற்றவர்கள் என்னைப் பார்த்து பின்பற்றும் ஆளுமையுடையதாகவும் புனிதமடையச்
செய்வது.
·
எனது சுய கட்டுப்பாடு என்பது
எனது குடும்பத்தினர் அனைவரையும் சரியான வழியில் பணம் ஈட்டுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது.
·
எனது ஆராதனை என்பது அன்பும்,
கருணையும் நிறைந்த மனத்துடன் மகிழ்ச்சி, ஆனந்தம், ஒற்றுமையினை குடும்பத்திலும், சமூகத்திலும்
உருவாக்கப் பாடுபடுவது.
·
எனது பூஜை என்பது எனது
குடும்பம் எனும் கோயிலில் வாழும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி குடும்பத்தில் நல்லெண்ணங்கள்,
நற்பழக்க வழக்கங்கள், நல்ல நடத்தைகளை உருவாக்க
பாடுபடுவது.
·
தினசரி எனது காயத்ரி சாதனையில்
உண்மையுடன் இருக்கிறேன் என்பதை ஆத்மார்த்தமாக
இருத்தல். நான் பற்றற்ற கர்மயோகி, எனது சந்தோஷமும் திருப்தியும் என்பது உண்மயான அர்ப்பணிப்புடன்
வெற்றி தோல்வி பற்றிய எந்தக்கவலையும் இன்றி தினசரி சாதனையைத் தொடர்தல். நான் உண்மையுடனும், சரியான வழியிலும் எப்போது இருப்பேன்
என்ற உறுதிமொழியுடன் சரியான உண்மையான வழியைப் பின்பற்றுவேன் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுதல்.
·
இந்த உறுதிமொழிகள் அனைத்தையும்
ஒவ்வொரு இல்லறயோகியும் முழுமனதுடன் இதயப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இல்லறத்தவர்களும்
கடைப்பிடிக்கக்கூடிய எளிய உயர்ந்த சாதனை குரு அகத்திய காயத்ரி சாதனா உபதேசமாகும். இதில்
காணப்படும் குருமந்திரம், சங்கல்பம், மந்திர ஜெபம், சித்த சாதனை என்ற அமிசங்கள் ஒருசாதகனின்
அந்தக்கரணத்தில் துரிதமுன்னேற்றத்தினை ஏற்படுத்தும் வழிமுறையாகும்.
எல்லா உன்னத ரிஷிகளும் இல்லற யோகவாழ்க்கை வாழ்ந்த சாதர்களின்
குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்து அரிய சாதனைகளைச் செய்தார்கள். சில புத்திக்குறைவான
நபர்கள் இல்லறம் மாயையால் ஆனது, லௌகீகயமயமானது என்று கூறுவது உண்மையானால் எப்படி இராமர்,
கிருஷ்ணன், புத்தர், நபிகள், காந்தி போன்றோர் வந்திருக்க முடியும். எப்படி பதிவிரதைகளான
சீதை, சாவித்ரி, மதலசா, தமயந்தி, பார்வதி போன்றோர் இருக்க முடியும். துருவன், பிரகலாதன்,
நசிகேதன் போன்ற தெய்வக்குழந்தைகள் உருவாகியிருக்க முடியும். இவர்கள் அனைவரும் ஆன்மீக
உலகின் மாணிக்கம் போன்றவர்கள். மற்றைய அனைத்து ஆசிரமங்களான பிரம்மச்சாரிய, வானப்பிரஸ்த,
சந்நியாச ஆசிரமங்கள் அனைத்தும் கிரகஸ்த ஆசிரமத்திலிருந்தே தோற்றம் பெறுவதால் இந்த இல்லறம்
என்பது அனைத்து ஆசிரமங்களினதும் தந்தை என்று கூறுவது மிகையில்லை. ஆகவே இல்லறத்தைக்
கேவலப்படுத்துவது தந்தையைக் குறைகூறுவது போன்றதும், சமூக முன்னேற்றத்தினைத் தடை செய்வதுமாகும்.
{இந்தக்கட்டுரை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யாவின்
க்ருஹஸ்த யோகம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது}
{இன்று வெள்ளவத்தை கிரியா பாபாஜி யோக ஆரண்யத்தின் 11வது ஆண்டு விழா மலர் "ஆரண்யப் பிரசாதத்திக்" எமது "இல்லற யோகம்" என்ற இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.}
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.