அண்மையில் Nadesapillai Sivendran சமுகவலைத்தளத்தில் ஒரு மனிதன் இறப்பதற்குள் வாசித்து முடிக்க வேண்டிய 100 நூல்கள் என்று அவருடைய நண்பர் பகிர்ந்த ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்; அவற்றுள் நான் படித்த நூல்களை பதிந்த போது அவற்றை சரியாக குறிப்பிட்டு எனது அனுபவத்தைக் எழுதச் சொல்லியிருந்தார்; இது கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு பணியாக எனக்குப் பட்டது தமிழ் வாசிப்பு இன்று அருகிவிட்டது; ஆகவே இத்தகைய பதிவுகள் ஆர்வத்தைத் தூண்டும். நாம் வாசிப்புக் கலாச்சாரத்தை மெருகேற்றலாம்.
இது கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என்பது பொருத்தமற்றது. அது ஒவ்வொருவொருவருடைய வாழ்க்கையின் அறிவுத் தேடல் சார்ந்த இலட்சியத்தைப் பொறுத்தது; என்னைப் பொறுத்தவரையில் இறப்பதற்குள் தமிழ்ச் சித்தர் பாடல்கள் எல்லாவற்றையும் படித்து அதில் கூறப்பட்ட வாத, வைத்திய, யோக ஞானத்தைப் புரிந்து உணர்ந்து மற்றவர்களுக்கு புரியும் படி சொல்லிவிட்டு போக வேண்டும் என்று சங்கல்பித்திருக்கிறேன்; இதற்கே தற்போது 300 க்கும் மேற்பட்ட சித்தர் நூல்கள் (?10000) பாடல்களாக சேகரித்து வைத்திருக்கிறேன். இந்தப்பணி எப்போது முடிவுறும் என்று தெரியாது!
இதை விட நான்கு வேதங்கள், பதினெட்டுப் புராணங்கள், தேவி உபாசனையுடன் தொடர்புடைய தந்திரங்கள், ஆகமங்கள், ஆயுர்வேதத்தில் சரகர், சுசுருத சம்ஹிதை, தமிழில் பதினெண் கீழ்கணக்கு, சித்தாந்த சாத்திரங்கள், தொல்காப்பியம், நன்னூல், மணிமேகலை, இசை இலக்கண நூல்கள், யோக சாத்திர நூல்கள் என ஏகப்பட்ட கற்கை இலட்சியம் இருக்கிறது.
ஆகவே இந்த 100 நூல்களைப் படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நான் ஏற்கவில்லை. இதற்கு மேல் எவ்வளவோ நல்ல நூல்கள் இருக்கிறது. எனவே வாசகர்கள் எவரும் இந்த நூறு நூல்களையும் வாசிக்க வேண்டும் என்று சிந்தனையில்லாமல் நேரத்தை வீணாக்கக் கூடாது.
உங்கள் வாழ்க்கை இலட்ச்சியத்திற்கு தேவையான 100 நூல்களை எடுத்து ஒவ்வொன்றாக ஆழ்ந்து, அகன்று, நுணுக்கி படித்து முடியுங்கள்.
சைவத்தைப் பற்றி உரையாடி முக நூலில் சண்டை பிடிக்க முதல் சித்தாந்த சாத்திரத்தைப் படித்து முடியுங்கள்.
எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல முதல் அதைப்பற்றிய முக்கிய நூல்களைப் படித்து சிந்தித்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.
இந்தப் பரிந்துரையில் நான் ஒரு வேக வாசிப்பாளன் என்ற அடிப்படையில் ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்புகளூடாக இந்த 100 புத்தகங்களில் 34 புத்தகங்கள் படித்துள்ளேன்; நூறு நூல்களும் மின்பிரதியாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகளாகவும் இருக்கிறன; தமிழ் மொழிபெயர்ப்புகளில் மஞ்சுள் பப்ளிகேஷன் மூலம் வெளிவரும் நாகலக்ஷ்மி சண்முகம், அவர் கணவர் குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மூலத்தின் உயிரோட்டத்தைத் தருபவை.
இவற்றில் பலவற்றின் மொழிபெயர்ப்பை நான் எனது பல்கலைக்கழக மாணவர்களுக்கான career guidance விரிவுரைகளில் பரிந்துரையாகவும் தந்திருக்கிறேன். என்னுடன் தொழில் பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாவிட்டால் இந்த நூல்களில் சிலதை வாசிக்கச் சொல்லி அதன் மூலம் உரையாட மனதைத் திறந்திருக்கிறேன்.
தரப்பட்ட 100 நூல்களில் நான் வாசித்த 34 நூல்கள் வருமாறு:
01, 02, 04, 06, 08, 10, 14, 19, 20, 21, 22, 23, 24, 27, 29, 39, 43, 49, 50, 51, 52, 56, 60, 61, 63, 69, 70, 72, 77, 78, 80, 82, 94, 100
Total 34/100
இந்தப் பதிவின் கீழ் இந்த நூல்களில் சிலதைப் படித்தவர்கள் உரையாடலை ஆரம்பியுங்கள்; நான் படித்த நூல்களில் உள்ள எனது ஞாபகத்திலிருக்கும் சுவாரசியமானவற்றை காலத்திற்கு காலம் ஒவ்வொன்றாக எனது அனுபவத்துடன் பகிர்கிறேன்.