கர்மச்சக்கரம் என்றால் என்ன என்று சிலர் கேட்டிருந்தார்கள்.
எம்முடைய ஒவ்வொரு எண்ணமும் எமது ஆழ் மனதில் - சித்தத்தில் பதிவினை ஏற்படுத்துகிறது. இந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும் செயற்பட இரண்டு காரணிகள் இருக்கிறது.
முதலாவது எமது இச்சை; இச்சையினூடாக எமது சித்தத்திலுள்ள பதிவுகள் தட்டி எழுப்பப்படுகிறது. இச்சையின் வடிவங்கள் பல
விருப்பு - வெறுப்பு
பற்று - எரிசல்
அன்பு - வெறுப்பு
குரோதம் - அதிபற்று
அகங்கரம் - ஆணவம்
இப்படி எல்லா வித உணர்ச்சிகளும் எமது சித்தப் பதிவுகளைத் தூண்டி எம்மை மீண்டும் செயலில் தள்ளிக் கொண்டிருக்கும்.
இரண்டாவது காரணி சூழல்; எமக்கு குறித்த ஒரு அனுபவம் ஏற்பட்ட சூழலிற்குள் நாம் மீண்டும் போகும் போது எவ்வளவு தான் எம்மைக்கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் சித்தப் பதிவுகள் தூண்டப்பட்டு நாம் அந்தச் செயலைச் செய்து விடுவோம். போதைக்கு அடிமையானவன் எவ்வளவு தான் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் குடிக்கும் சூழல் உருவாகியவுடன் சித்தம் தூண்டப்பட்டு மீண்டும் குடிகாரனாகிவிடுவான்.
ஆக எமது சித்தப் பதிவுகள் தூண்டப்படுவது;
முதலாவது இச்சையும் அதனூடாக எழும் உணர்ச்சிகளும்,
இரண்டாவது எமக்கு ஆழமான அனுபவத்தைத் தந்த அதே சூழல் மீண்டும் எம்மைச் சூழ உருவாகினால் அது எமது சித்தத்தை தூண்டி எண்ணங்கள் எழுந்து அதற்குள் சிக்கிக் கொள்வோம்.
இப்படி மீண்டும் மீண்டும் அவை நடக்கும் போது மிக நுண்மையாக இருந்த பதிவு வலுப் பெற்று வலிமையான பதிவாக மாறி எம்மை ஆட்டிவைக்கத் தொடங்குகிறது. எமது பழக்கவழக்கங்கள் ஆகிறது.
எமது தொடர்ச்சியான செயல்கள், பழக்கவழக்கங்கள் ஆக மாறுகிறது. எமது பழக்கவழக்கங்கள் எமது நடத்தையைத் தீர்மானிக்கிறது. இந்த நடத்தை எமது ஆளுமையாகிறது. இப்படி தொடர்ச்சியாக வலிமை பெற்ற பதிவுகளை யோக மொழியில் சம்ஸ்காரங்கள் என்று கூறுவோம்.
இப்படி எமது அனுபவம் - சித்தப்பதிவு - மீண்டும் மீண்டும் ஒரே அனுபவம் - வலிமையான சித்தப்பதிவு - பழக்க வழக்கம் - நடத்தை - ஆளுமை என்று எமது அக உலகம் கட்டியமைக்கப்படுகிறது.
அடுத்த பதிவில் சம்ஸ்காரம் என்பதைப் பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்! அதன் பிறகு கர்மச்சக்கரம் எப்படி நடைபெறுகிறது என்பது புரியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.