கர்ம விதியின் இயக்கம் மனதின் இயக்கத்துடன் தொடர்புடையது. நாம் செய்த கர்மங்களின் ஞாபகங்கள் பதிவுகள் சித்தம் என்ற ஆழ்மனத்தில் பதிவாக அழியாமல் எப்போதும் இருக்கின்றது.
இந்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே நாம் எமது அகவுலகத்தை அமைத்துக் கொள்கிறோம். இந்தப் பதிவுகள் எம்மை மீண்டும் மீண்டும் அதே செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். எமது பழக்கவழக்கங்கள் என்பது சித்தத்தில் பதிவுற்ற ஆழமான பதிவினை நாம் மீண்டும் மீண்டும் எம்மால் கட்டுப்படுத்த முடியாமல் செய்து கொண்டிருக்கும் நிலை! இதனாலேயே பலர் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
உள்ளொளியை உணராத மனம் இந்த ஆழமான சித்தப் பதிவுகளில் சிக்கிக் கொண்டு அடிமையாக வாழ்ந்து வருவதில் சந்தோஷம் கொள்ளும்.
ஒரு எண்ணம் தோன்றி அது எம்மைச் செயலில் தள்ளுக்கிறது; முடிவுற்ற செயல் பதிவாக சித்தத்தில் பதிகிறது, இதை யோக மொழியில் சம்ஸ்காரம் என்போம். அடுத்த முறை இந்தப் பதிவு எம்மை குறித்த செயலில் தள்ளும்!
இதை உதாரணம் மூலம் விளக்குவதானால் சாராயம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவனை அவனது நண்பன் வலிந்து குடி என்று எண்ணத்தைப் புகுத்துகிறான். அதை ஏற்றுக் குடித்தவன் மனதில் இப்போது அது நல்லது என்ற சம்ஸ்காரம் ஆழமாகப் பதிந்தால் அடுத்த முறை நண்பன் அழைக்காமல் தானே சென்று ஊத்திக் கொள்வான்!
இப்படி எண்ணம் தோன்றுதல், பின்னர் ஆழமாகப் பதிதல், அந்த ஆழமாகப் பதிந்த பதிவு மீண்டும் எமது மனத்தைத் தூண்டி செயலில் ஈடுபடுத்தல், அது இன்னும் ஆழமாக பதிவினை ஏற்படுத்தல், மீண்டும் எண்ணம் தோன்றுதல் என்று வட்டமாகச் சென்று கொண்டிருப்பதை யோக மொழியில் வ்ருத்தி சம்ஸ்கார சக்ரம் என்பார்கள்.
இந்த வ்ருத்தி சமஸ்கார சக்கரமே கர்மவிதியின் அடிப்படைக் கோட்பாடும் ஆகும்.
இதை தடைப்படுத்தி செயல் முறையாக உள் நோக்கிச் சென்று உள்ளொளியை அடைவதையே யோக மார்க்கமும், தெய்வ உபாசனை மார்க்கங்களும் கூறுகின்றன.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.