இந்தப்பதிவுத்தொடர் Sir John Woodrouf ஆங்கிலத்தின் எழுதிய Serpent Power நூலின் தமிழ் மொழியாக்கமாகும். இதனை எழுதத்தூண்டிய யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் சீடர் செல்லத்துரை சுவாமிகளுக்கும், எனது குருநாதருக்கும் முதற்கண் வணக்கத்தினைக்கூறி இந்த மொழியாக்கத்திற்கான காரண காரிய தொடர்பு முதற்பதிவாக வெளியிடப்படுகிறது.இதன் தூணடல் என்னை அறியாமல் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டிருந்தது, தற்போது தளிர் விடுகிறது. இனி விடத்திற்குள் வருவோம்!
இலங்கையில் வாழ்ந்த சித்தர்களில் உலகம் அறிந்த சித்தராக வலம்வந்தவர் யோகர் சுவாமிகள், சுவாமிகளால் இலங்கை மக்கள் பலரும் இன பேதமின்றி பயன்பெற்றார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. சுவாமிகளது வரலாற்றினை அவரது சீடர்கள், பக்தர்கள் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்தப்பதிவின் நோக்கம் சுவாமிகளின் வரலாற்றினை பற்றியதல்ல. சுவாமிகளின் சீடர்கள் பலர், ஹவாய் சுப்பிரமணிய சுவாமிகள், சோல்பரிப்பிரவுவின் மகன் சாந்தாசுவாமிகள், மார்க்கண்டு சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் எனப்பலர். எந்த ஒரு சித்தரும் தமது ஆத்ம சித்திக்கு என்ன சாதனைகள் செய்தார்கள் என்பதனை வெளிப்படையாக எடுத்துரைப்பதில்லை. அந்தவகையில் யோகர் சுவாமிகள் இந்த வகையினர் என அடக்கமுடியாத சித்தர் கணத்திற்குள் வருகிறார் என்பதனை எமது சுய அனுபவத்தில் அறிந்த விடயங்களை பதிவிப்பதே இந்தப்பதிவின் நோக்கம்.
சிறுவயது முதலே யோகர் சுவாமிகள் மேல் எமக்கு ஈர்ப்பு இருந்து வந்தது, பலதடவைகள் சுவாமிகள் கனவில் தியானத்தில் இருப்பது போல் காட்சி வரும், சிறுவயதில் ஒரு சில தடவைகள் நடைபெற்றிருக்கிறது. அதன் பின்னர் எமது குரு நாதரிடம் சுவாமிகளைப்பற்றி பேசும் போது அவரும் பயமும் பெருமரியாதையும் கொண்டே பேசுவார், யோகர் சுவாமிகளிடம் நீங்கள் பேசியதுண்டா? எனக்கேட்டபோது "அவர் எங்கே நாம் எங்கே, அவரது ஆற்றலுக்கு முன்னால் நாம் எல்லாம் என்னப்பா?" என்பார், அந்தக்காலத்தில் நாமும் சிறுபிள்ளை, சிறுபிள்ளைகளுக்கு தமது அப்பாதான் உலகிலேயே எல்லாம் வல்லவர் என எண்ணம் உண்டு, அந்தக்காலத்தில் நாமும் எமது குரு நாதரை விட்டால் உலகில் ஆற்றலுள்ள சித்தர்கள் எவரும் இல்லை என்ற நினைப்பிலேயே இருந்தோம், ஆனால் எமது குரு நாதர் மற்றைய சித்தர்கள் மேல்வைத்திருந்த மரியாதை இந்த எண்ணத்தினை விரைவில் அகற்றியது, அனுபவம் அது ஒரு அறியாமையின் விளைவு என்பதினை வெகுவிரைவில் புரியவைத்தது.
அந்த வகையில் யோகர் சுவாமிகளின் உன்னத சீடர் ஒருவருடன் சில மாதங்கள் அன்னியோன்யமாக பழகும் வாய்ப்பு கிட்டியது, அவர் யோகர் சுவாமிகளால் குண்டலினி யோக தீட்சை கொடுக்கப்பட்டு தாந்திரீக வழிபயிற்றுவிக்கப்பட்ட யோகி, அவரை வெறுமனே சிவதொண்டன் நிலைய பொறுப்பாளராக மட்டுமே பலர் கருதி வந்தனர், அவர் ஒரு சித்திபெற்ற குண்டலினி யோகி, தன்னை அப்படி வெளிக்காட்டிக்கொள்ளவில்லை, அந்த அரிய யோகியிடம் குண்டலினி யோகம் தொடர்பாக சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ளும் பாக்கியத்தினை குரு நாதர் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
2003 காலப்பகுதி அளவில் சிறிது காலம் யாழ்ப்பாணத்தில் தங்கவேண்டியிருந்தது. சுமார் நான்கு மாதம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது இயல்பாக எமது குருநாதர் கூறித்தந்ததைப்போல் சித்தர்களது ஜீவசமாதிக்கு சென்று தியானிப்பது வழக்கம். அந்த வகையில் கோண்டாவில் குடைச்சாமி சமாதி, வண்ணார்பண்ணை கடையிற் சுவாமி சமாதி எனத்தரிசனம் செய்யும் அதேவேளை மாலைவேளைகளில் சிவதொண்டன் நிலையம் சென்று யோகர் சுவாமிகளது பாதுகை உள்ள தியான மண்டபத்தில் சில நேரம் தியானித்து வருவது வழக்கம். அப்படிச் செல்லும் வேளைகளில் சிவதொண்டன் நிலையத்தின் வெளி விறாந்தை மூலையில் ஒரு தெய்வீககளை பொருந்திய முனிவரை போன்ற வெண்தாடி, ஒளிபொருந்திய உடல் உடைய பெரியவர் அர்த்த பத்மாசனத்தில் சிறு பாய் ஒன்று போட்டு அமர்ந்திருப்பார். மேலே தியான மண்டபத்திற்கு சென்று தியானித்து விட்டு கீழே அந்த பெரியவரை வந்து வணங்கிவிட்டு சற்று நேரம் அவர் முன் அமர்ந்து விட்டு வருவது வழக்கம், ஒவ்வொரு முறை வணங்கும் போதும் ஒரு தெய்வீக புன்னகையுடன் எமது கண்களை ஆழமாகப் பார்ப்பார், வாய்திறந்து எதுவும் பேசுவதில்லை. சிறிது நாட்களின் பின்னர் வணங்கி முடிந்தவுடன் "சற்று இருங்கள்" எனக்கூறிவிட்டு கோபி எனும் இளைஞரை அழைத்து 'இவருக்கு தேத்தண்ணி கொடுங்கள்" என்றார், சிறிது நேரத்தில் தேத்தண்ணி வந்தபின்னர் வாழைப்பழம் ஒன்றினையும் சாப்பிடத்தருவார். அன்று என்னைப்பற்றி விசாரித்தார், எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என என்னைப்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார். அதற்கு நானும் என்னைப் பற்றிய சுயவிபரங்களை கூறியபின்னர், எனது குருநாதர் பெயரையும் கூறி, அவரிடம் தீட்சை பெற்று காயத்ரி சாதனை புரிவதாக கூறிக்கொண்டேன். அதற்கு அவர் மிக்க மகிழ்ச்சி எனக்கூறிக்கொண்டு, தான் எனது குரு நாதர் வாழும் பகுதியில் (நுவரெலியாவில்) ஆரம்பகாலத்தில் ஆசிரியராக பணியாற்றினார் எனவும், தனது ஆன்மீக பயணத்தினைப்பற்றியும் அளவளாவினார், அக்காலத்தில் அவர் ஒவ்வொரு சிவராத்திரியிற்கும் திருவண்ணாமலை செல்வாரெனவும், ரமணமகரிஷியுடன் சிலகாலம் தங்கி திருவண்ணாமலையில் தியானிப்பதும் தமது வழக்கம் எனவும் கூறினார். இப்படி எமது உரையாடல் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஒருமணி நேரம் தொடரும், வேறு நபர்கள் இருந்தால் நாட்டுப்பிரச்சனை, அரசியல் பற்றியும் சாமி பேசுவார்.
முதல் நாள் அறிமுகத்தின் பின்னர் சிவதொண்டன் நிலையத்தில் இருந்த, எனக்கு தேனீர் தந்த கோபி என்னும் இளைஞருடன் உரையாடியபோதே அந்தப்பெரியவர் யோகர் சுவாகளது சீடரான செல்லத்துரை சுவாமிகள் என அறிந்து கொண்டேன். அவரைப்பார்க்கும் போது ஒருவித காந்தசக்தியும், உடல் பொலிவும், சலனமற்ற கண்களும், புன்சிரிப்பும் எனது குரு நாதரை ஒத்தவராக இருக்கிறார் என உள்மனம் கூறியது. எனது குரு நாதர் என்னை எப்படி அன்புடன் அழைத்து உணவு கொடுத்து உபசரித்து பேசுவாரோ அதேபோல் இவரும் என்னை நடத்த அவருடனான அன்பு பிணைப்பு உருவானது. நாம் வழமையாக காங்கேசன் துறை வீதியில் உள்ள சிவதொண்டன் நிலையத்திற்கு சென்றே தியானிப்பது வழக்கம்! சில நாட்களின் பின்னர் சுவாமிகள் யோகர் சுவாமியின் அஸ்தியுள்ள சமாது கொழும்புத்துறையில் உள்ளதாகவும் ஒரு நாள் அங்கு சென்று தியானித்து வருமாறும் கூறினார், அவரது அறிவுரையின் படி ஒரு நாள் காலை கொழும்புத்துறை ஆசிரமம் சென்று தியானித்து வந்தோம்.
சுவாமிகள் திருமந்திரத்தில் மிக்க புலமைவாய்ந்தவர். திருமந்திரத்திற்கான விளக்கத்தினை வகுப்புகளாகவும் நடாத்தி வந்தார். நாம் சுவாமிகளை சந்திதபோது 2003 பொங்கல் முடிந்து தை மாதமளவில் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்த் மூன்று மாதங்களில் சந்தித்த நாட்கொண்டு ஒவ்வொரு நாளும் மாலைவேளைகளில் சுவாமிகளை சந்திக்க சிவதொண்டன் நிலையம் செல்வதினை வழமையாக்கிக்கொண்டேன். சில நாட்களில் தான் ரமண மகரிஷியுடன் இருந்தது, பின்னர் யோகர் சுவாமி தம்மை ஆட்கொண்டு சிவதொண்டன் நிலையத்தினை பொறுப்பேற்றுக்கொள்ளச் சொன்னது எனக்கூறுவார்கள். தனியாக இருக்கும் போது ஆன்மீக பேச்சுப்போகும், யாராவது இடையில் வந்துவிட்டால் அவரவர் மன நிலைக்குத்தக்க அரசியலோ, அவர்களது குடும்பபிரச்சனையோ வரும். அந்த வேளைகளில் நாம் அமைதியாகி கொள்வோம்.
இப்படியான சந்தர்ப்பத்தில்தான் ஒரு நாள் சுவாமிகளிடன் "சுவாமி, யோகர் சுவாமிகள் தமது சீடர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்குத்தக்க வேறு வேறு சாதனை மார்க்கம் அருளியுள்ளதாக படித்துள்ளேன், நீங்கள் கைக்கொண்ட மார்க்கம் என்ன? " என வினாவினேன். அதற்கு புன்சிரிப்புடன் 'குண்டலினி யோகம்" எனப்பதிலளித்தார். நாம் ஏற்கனவே காயத்ரி தீட்சை பெற்று சாதனை செய்து வரும் காலத்தில் எமது குரு நாதரும் காயத்ரி மந்திரத்தின் மூலம் குண்டலினி விழிப்படையச் செய்யும் சாதனை பற்றி கற்பித்திருந்தார், எனினும் கண்டிப்பாக பல்லாண்டுகால (குறைந்தது தீவிரமாக எனின் மூன்று ஆண்டுகள்) தொடர்ச்சியான காயத்ரி சாதனையின் பின்னரே அவற்றை பயிற்சிக்க வேண்டும் என உபதேசித்திருந்தார். அதனால் நாம் அதைப்பற்றி விரிவாக எதையும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அடுத்து காயத்ரியினை உபாசிப்பவர்களுக்கு குண்டலினி யோகம் தனியாக பயிலவேண்டிய அவசியமில்லை, பக்குவம் பெற்றவுடன் தேவி தனது இச்சையினாலேயே குண்டலியினை விழிப்பிப்பாள் என்பதினை எனது குருநாதர் உபதேசித்திருந்தார். செல்லத்துரை சுவாமிகள் தான் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலில் குண்டலினி யோகம் பயின்று சித்திபெற்றார் என்று கூறியவுடன் எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. செல்லத்துரை சுவாமிகளை கண்ட நாள்முதல் அவரது ஒளிபொருந்திய தேகமும், கண்களும் அவரது யோக நிலையினை உணர்த்திக்கொண்டிருந்தது. இப்படி எனது மனது எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் சுவாமிகள் தான் குண்டலினி யோகம் பயில எப்படி யோகர் சுவாமிகள் ஈர்த்தெடுத்தார் எனக்கூறினார்.
ஒரு நாள் தமக்கு "இது உனக்கு நான் தரும் பொக்கிசம், கவனமாக பேணிவா" என ஒரு பொதியினை தந்ததாகவும் அதனுள் ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்" (Serpent Power) எனும் ஆங்கிலப்புத்தகம் இருந்ததாகவும் சாதனைக்கும் முன்னர் அதனை பலமுறை படித்து விளங்கி கொண்டதாகவும் கூறினார், சுவாமிகள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மூன்றிலும் திறமை பெற்றவர். சிவதொண்டன் ஆசிரியர் குழாம் ஒன்றினை அமைத்து அந்த நூலின் முகவுரையினை தமிழில் மொழிபெயர்த்து சிவதொண்டன் இதழில் வெளியிட்டதாகவும், பின்னர் அவற்றை தொகுத்து நூலாக வெளியிட ஸேர் ஜோன் வ்ட்ரூப் இன் மூல நூற்களை வெளியிட்ட சென்னை கணேஷ் அண்ட் கோவிடம் அணுகிய போது அவர்கள் ஏற்கனவே விற்காமல் இருந்த புத்தகங்களை காட்டி இந்த நூற்களுக்கு தற்போது கிராக்கி இல்லை (இது 1945 - 50 களில் ஆக இருக்கலாம்) எனக்கூறி நிராகரித்து விட்டனர் எனவும் கூறினார். அதன் பின்னர் அவற்றை தாம் தமது அச்சுக்கூடத்தில் சிறிய அளவில் பதிப்பித்து புத்தகமாக கட்டி வைத்திருப்பதாக கூறினார். தம்மிடம் ஒரு சில பிரதிகள் இருப்பதாகவும் எமக்கு ஒன்று தருவதாகவும் கூறினார். எமக்கோ மிக்க மகிழ்ச்சி! சுவாமிகள் கேட்காமல் தருகிறேன் என்கிறாரே! அவற்றை உடனடியாக தேடித்தரமுடியாமல் இருப்பதாகவும், சில நாட்களில் சிவராத்திரி வர இருப்பதால் ஆயுத்த வேலைகள் இருப்பதாகவும் கூறினார், அதன் பின்னர் அன்றைய நாள் விடைபெறும் போது அந்த வருட சிவராத்திரியினை சிவதொண்டன் நிலையத்தில் வந்து அனுஷ்டிக்கும் படியும் கூறினார்.
சுவாமிகள் கூறிய படி அந்த வருட சிவராத்திரி சிவதொண்டன் நிலையத்தில் சாதனையுடன் கழிந்தது. சிவராத்திரி கழிந்து ஒரிரு நாட்களில் சுவாமிகளை காணச் சென்ற போது அவர் மொழிபெயர்த்த தமிழ் பிரதியினை தந்து அவற்றை நன்கு கற்று விளங்கிக்கொள்ளும் படியும் அந்த கோட்பாட்டறிவு சாதனைக்கு அவசியம் ஆனால் அவற்றை பயிற்சிப்பதுதான் உண்மையான சாதனை, புத்தகத்தினை படிப்பதால் மட்டும் எதையும் அடைந்து விட முடியாது எனக்கூறி தந்தார், அந்த வேளையில் யோகர் சுவாமிகள் தமக்கு இந்த புத்தகத்தினை (ஆங்கில மூல நூலான Serpent Power) இனை தரும் போது கண்டிப்புடன் "குண்டலினி சக்தி நூலினை கவனமாக படி" எனக்கூறி பின்னர் "நூலில் ஒன்றுமில்லை, எல்லாம் இங்கே உள்ளது" என உடம்பை சுட்டிக்காட்டினார் என தமது குரு நாதன் தமக்கு கூறியதையும் ஞாபகப்படுத்தினார். நாமும் அந்த நூலினை பெற்றுக்கொண்டு சென்று வாசிக்கத்தொடங்கினோம், அதன் தமிழ் நடை கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பழைய நடையில் இருந்தது, வழக்குச் சொற்கள் தற்போதையதாக இருக்கவில்லை. அதன் பின்னர் சுவாமிகளிடன் சென்ற நாட்களில் சுவாமிகள் தனது அனுபவத்தினையும் கூறினார். தாம் சாதனை செய்யும் போது குண்டலினி முடிச்சுக்களை பிளந்து (பிரம்ம கிரந்தி, விஷ்ணூ கிரந்தி, ருத்திர கிரந்தி எனப்படும் முடிச்சுக்கள்) கடப்பது கடினமானது எனவும், தமக்கு முதல் முறையாக பிரம்ம கிரந்தியினை குண்டலினி கடக்க முயலும் போது பெரும் அவஸ்தைப்பட்டதாகவும், அதற்காக தாம் குரு நாதரை அணுகிய போது கோபத்துடன் காலால் ஒரு உதை கொடுத்து "உனக்கு பிடிக்கு பிடி நெய்விடவேண்டுமோ?" என ஏசி அனுப்பிவிட்டாராம், அன்றைய தினத்திலிருந்து குண்டலினி பிரம்ம கிரந்தியினை பிளந்து நாசி நுனி வரை ஏறிவிட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் தமது சாதனையினால் தாம் குண்டலினி சக்தியினை எப்படி கையாள்வது என்பதனை சுய அனுபவத்தில் கற்றுக்கொண்டதாகவும், தம் குரு நாதர் "பிடிக்கு பிடி நெய் விடவேண்டுமோ என்று கேட்டதன் அர்த்தம் "பயிற்சியினை ஒழுங்காக இடையில் நிறுத்தி விடாமல், தொடர்ச்சியாக செய்து அனுபவ அறிவு பெறாமல் தொட்டதிற்கெல்லாம் குருவை நாடாதே" என்பதனையும் விளக்கினார். சுவாமிகள் வேறுபல குண்டலினி யோகம் சார்ந்த நுணுக்கங்களையும் உரையாடினார். அதன் பின்னர் அன்றைய தின முடிவில் "உமக்கு விருப்பம் இருந்தால் பங்குனி ஆயில்யம் அன்று குருபூசை, அதில் பங்கு பெற்றும், இந்த யோகத்தினை உபதேசிக்கிறோம்" என்றார். நாம் மறு பேச்சுப்பேசாமல் "சரி சுவாமி" என்றவாறு வந்து விட்டோம்.
இப்போது எமது மனம் இரண்டும் கெட்டான் நிலை குழப்பமாகிவிட்டது, ஏற்கனவே குரு நாதரிடம் காயத்ரி தீட்சை பெற்று சாதனை பயின்று வருகிறோம், எமது குரு நாதர் குண்டலினி யோகம் என்றாலே வாய் திறக்கமாட்டார், அதெல்லாம் என்னத்திற்கு இப்போ, பக்குவம் வரும்போது தானாக எல்லாம் தேடிவரும் அப்பா" என்பார். அப்படியென்றால் எனக்கு இப்போது பக்குவம் வந்துவிட்டதா? செல்லத்துரை சுவாமிகள் நாம் கேட்காமலே குண்டலினி யோகம் உபதேசிக்கிறேன் என்கிறாரே? அடுத்து குண்டலினி யோகம் பற்றி எமது குரு நாதர் கூறும் கருத்து தற்காலத்து யோகிகள் எனக்கூறும் கருத்தில் அல்ல, "குண்டலினி யோகம் செய்ய விரும்புபவன் தனது மண்ணுலக பரிணாமத்தினை முழுமையாக முடிக்க விரும்புபவன், குண்டலினி விழித்த நபர் மண்ணுலக பற்றினை அறவே விட்டிருப்பார், இப்படி விழிப்பிப்பதற்கு சித்தத்தினை முழுமையாக சுத்தி செய்து அதில் தெய்வீக சம்ஸ்காரங்களை பதிப்பித்து வைக்கவேண்டும், இல்லாவிடில் குண்டலினி விழித்தவுடன் சித்ததில் உள்ள சம்ஸ்காரங்கள் உடனடியாக செயல் நிலைக்கு வரும், உதாரணமாக யாரையாவது கொல்லவேண்டும் என்று மனதில் நீண்ட நாள் நினைத்து மறந்து விட்டிருப்போம், ஆனால் அந்த எண்ணம் சித்தத்தில் பதித்திருக்கும், இந்த நிலையில் குண்டலினி விழித்தால் அந்த மனிதன் கட்டாயம் அந்த நபரை கொன்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான், இப்படி தகுந்த சித்த சுத்தி இல்லாமல் குண்டலினி விழிப்பிப்பவர்களது வாழ்வு பரிணாம உயர்ச்சிக்குப்பதில் தாழ்வு அடைவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது எனக்கூறுவார். எனது சித்தத்தின் நிலை என்ன? எனது வாழ்வு எப்படி மாறும்? இப்படி பலவாறான குழப்பத்திற்கு மத்தியில் நான் தள்ளப்பட்டேன். இறுதியாக எனது சுய ஆராய்ச்சியின் பெயரில் எனதுவிருப்பங்களை எல்லாம் பட்டியலிட்டேன், நிறைய விருப்பங்கள் இருந்தது,
ஏனெனில் அடிப்படையில் நான் ஆன்மாவினை அறிவதற்காக ஆன்மீகத்திற்குள் வரவில்லை! வெறும் ஆர்வமும், ஆராய்ச்சி புத்தியும்தான் என்னை இதற்குள் கொண்டு வந்தது, சிறுவயதில் முருக உபாசகரும் சித்த வைத்தியருமான தந்தையும் எனது இளைய சகோதரரும் கந்தர் சஷ்டிகவசம் படிக்கும் போது அதனை கட்டிலில் இருந்து கொண்டு கேலி செய்யும் பாங்கிலேயே அவதானித்து சில சமயம் நையாண்டியும் செய்வது உண்டு, அத்துடன் கோயிலிற்கு செல்வதில்லை, குரு நாதருடன் இருக்கும் காலத்திலும் கோயிலிற்கு சென்று வழிபட சுத்தமாக விரும்புவதில்லை, இன்றுவரை குடும்பத்தவர்களுக்காக மட்டுமே கோயில் செல்வதை செய்கிறோமோ அன்றி சுய விருப்பில் இல்லை, இந்த நிலையில் தற்செயலாக (இல்லை யாரோ ஒருவரின் பெருந்திட்டத்தின் காரணமாக என்பதே சரி) சரியாக 16 வயதில் எனது குரு நாதரினை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும், அவரும் எனக்கு ஆன்மீகத்தினை உபதேசிக்கவில்லை, நிபந்தனை அற்ற அன்பினை மட்டுமே தந்தார், அவரை பார்க்கச்செல்லும் போதெல்லாம் உணவருந்தாமல் திருப்பி அனுப்பமாட்டர், சென்றால் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டுத்தான் அனுப்புவார், சிலவேளை மாதக்கணக்கில், அனுப்பும் போது கையில் வேண்டாம் என்றாலும் காசினை பொக்கடில் திணித்து தந்து அனுப்புவார், ரொம்ப மரியாதையாகத்தான் நடத்துவார். திருவிழாக்கள் வந்தால் எனக்கும் சேர்த்து கட்டாயம் புத்தாடை இருக்கும். காசு வேண்டாம் என்றாலும் "நீங்கள் உழைக்கவில்லையே, செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்" என தருவார், பல முறை மறுத்தபோதும் தனது திருப்திக்காக தருவதாகவும் அதனால் இனிமேல் மறுக்காமல் வாங்கொள்ளும் படியும் கூறுவார். இப்படி அவரது நிபந்தனையற்ற அன்பு மூலமே எனக்கு இந்த துறையில் ஆர்வமும் சாதனை செய்யும் உத்வேகமும் ஏற்பட்டது. அவரே உபாசனை, தெய்வம் என்பதன் உண்மை அர்த்தங்களை படிப்படியாக உணரவைத்தார். அவரது பண்பினையும், அன்பினையும் எழுதுவது என்றால் தனியா ஒரு ப்ளாக்கீல் வருடக்கணக்கில் எழுதலாம்.
இனி விடயத்திற்கு வருவோம், செல்லத்துரை சுவாமி எமக்கு குண்டலினி யோக உபதேசம் தருகிறோம் என்றவுடன் மனதிற்கும் பெருமகிழ்வு ஏற்பட்டாலும் உலகத்துடனான பற்று அறுந்து விடுமோ என்று மனம் பயமுறுத்தியது, ஆகவே மனதின் வழி நான் நடப்பதற்கு முடிவேடுத்தேன்! எனது விருப்பங்களை எல்லாம் பட்டியலிட்டு யோகர் சுவாமிகளுக்கும், எனது குரு நாதரிற்கு மானசீகமாக அவை நிறைவேறும் வரை எனது உலகப்பற்று அறுந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன், ஏனெனில் எனக்கு சிறுவயது முதல் துறவு என்றாலே பிடிக்காத ஒரு விடயமாகவும், மனதால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயமாகவும்தான் இருந்தது, துறவறத்தை வலிந்து தழுவுபவர்கள் ஏதோ ஒருவகையில் தமது ஆசைகளை அடக்கிக் கொண்டு பிற்காலத்தில் மனதினால் ஆட்டிப்படைக்கிறார்கள் என்று மனம் கூறிவந்திருக்கிறது. ஆதலால் எனது ஆசைகளை சரியான முறையில் பூர்த்தி செய்துகொள்ளவே நான் விரும்பினேன், இது எனக்கு தவறாக படவில்லை, தற்போது இதை நினைத்தால் சிரிப்பு வருகின்றது என்றாலும் அந்த நிலையில் எனது முடிவு சரியானதாகவே பட்டது. அதன் படி மானசீகமாக எல்லோரிடமும் பிரார்த்தித்து விட்டு எனது அன்றாட வேலைகளை கவனிக்கதொடங்கிவிட்டேன்.
சரியாக பங்குனி ஆயில்யத்திற்கு, செல்லத்துரை சுவாமிகள் வரச் சொன்ன நாளிற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக சாக்குப்போக்குச் சொல்ல முடியாத அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனது மனம் உள்ளூர சொன்னது, நீ இன்னும் குண்டலினி யோகம் பயிற்சிப்பதற்கு பக்குவப்படவில்லை என்று, எனினும் எனது மனதிற்குள் ஆழமான ஒரு கேள்வி இருந்தது, நான் பக்குவப்படவில்லையானால் ஏன் செல்லத்துரை சுவாமிகள் எனக்கு உபதேசம் செய்வதாகக்கூறினார்? அவரும் யோக ஆற்றல் பொருந்தியவர்தானே, அவருக்கு தெரியாதா? எனினும் எதுவித குழப்பமும் இன்றி கிளம்பி குருநாதரிடம் சென்று விட்டேன். வழமையாக செல்லும் நாள் மட்டும்தான் நான் முடிவு செய்வது திரும்பி வரும் நாள் அவரே முடிவு செய்வார். ஒரு நாள் குருநாதரிடம் மாலைவேளைகளில் நடை செல்லும் போது, யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள போது எமக்கும் செல்லத்துரை சுவாமிகளுக்கும் நடந்த விடயத்தினை கூறினோம்.
அதற்கு அவர் சிரித்துகொண்டு "அவர் உங்களை ஆட்கொள்ளவிரும்புகிறார், உங்களால் ஆகவேண்டிய பணி ஒன்று உள்ளது, ஆனால் உங்களுக்கு தற்போது வேறுவேலை இருக்கின்றது, காலம் வரும்போது நடைபெறும்" என்று சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். அதன் பின்னர் நான் எனது கல்லூரிப்படிப்பு, குரு நாதரை பார்க்கச் செல்லுவது என எனது வேலையாகிவிட்டேன். அவர் தந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் மட்டும் என்னுடன் பக்குவமாக இருந்தது. மீண்டும் இருவருடங்கள் கழித்து யாழ்ப்பாணம் செல்ல நேர்ந்த போது சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அது ஓரு அவசர தரிசனமாகவே இருந்தது, சுவாமிகள் நீண்ட மௌனத்தில் இருந்தார். ஒன்றும் பேசுவதற்கு முடியவில்லை, கால்களில் காயத்திற்கு கட்டுப்போடப்பட்டிருந்தது. அவரை வணங்கும் போது அமைதியான புன்சிரிப்புடன் எமது கண்களைப்பார்த்தார். நானும் உடனடியாக விடைபெற்றுக்கொண்டேன். பின்னர் ஒரு வருடம் கழிந்து சுவாமிகள் சமாதி அடைந்துவிட்டார் என அறிந்துகொண்டேன். சுவாமிகள் சமாதியடையும் போது சுவாமிகளுக்கு வயது 92.
அதன் பின்னர் எனது வாழ்வு எனது குருநாதர் காட்டியவழியில் சாதனை, படிப்பு, வேலை, திருமணம் என சென்றவாறு இருக்கின்றது, இந்தப்பதிவு எழுதுவதற்கான மானசீக தூண்டுதல் எனது கேள்விகளுக்கான விடைகள் ஒரு வாரத்திற்கு முன்னிருந்து கிடைப்பதற்கான அறிகுறி தொடங்கி இன்று காலையில் கிடைத்தமையே!
செல்லத்துரை சுவாமிகள் எமக்கு தந்த ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்" இன் முன்னுரை புத்தகம் இரு ஆண்டுகளுக்கு முன்னதாக செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் உதவி புரியும் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து பெற்று மீள்பதிப்பு செய்வதற்காக கொண்டு சென்றிருந்தார், நாமும் வேலை முடியும்மட்டும் அந்த புத்தகத்தினை கேட்கவில்லை. திடீரென சென்றவாரம் Serpent Power ஆங்கில மூல நூல் படிக்க நேர்ந்தது. அதைப்படிக்கும் போதுதான் எமக்கு மேலே பதிவில் கூறிய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அத்துடன் அந்த மூல நூலை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன எனற எண்ணமும் தோன்றியது. புத்தகத்தினை என்னிடம் வாங்கிச்சென்ற நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது எமது பிரதியினை திருப்பித்தரமுடியும் எனக்கூறி நேற்று கொண்டுவந்து தந்தார்.
இன்று காலை நித்திரை விட்டெழும்போதுதான் செல்லத்துரை சுவாமிகள் எமக்கிட்ட பணி என்னவென்று விளங்கியது. எனது குரு நாதர் கூறிய "அவர் உங்களை ஆட்கொள்ளவிரும்புகிறார், உங்களால் ஆகவேண்டிய பணி ஒன்று உள்ளது, ஆனால் உங்களுக்கு தற்போது வேறுவேலை இருக்கின்றது, காலம் வரும்போது நடைபெறும்" என்ற வார்த்தையின் அர்த்தமும் விளங்கியது. ஆம் அது ஸேர் ஜோன் வ்ட்ரூப் எழுதிய "ஸேர்பண்ட் பவர்" என்பதாகத்தான் இருக்கும் எனபதனை அனுமானித்துக்கொண்டேன், அதற்குரிய முன்னுரைதான் இது! அதன் மொழிபெயர்ப்பினை விரைவில் எதிர்பாருங்கள்! இது சாதகர்களுக்கு அரிய ஒரு பொக்கிஷமாக கிடைக்கப்போகிறது. யோகர் சுவாமிகள் குண்டலினி யோகத்திற்கென முன்மொழிந்த அரிய நூல் தற்காலத்திய எளிய தமிழ் நடையில் தரலாம் என எண்ணுகிறோம்.
இந்தப்புரிதல் மிகச்சரியானது என்பதினை இந்தக்கட்டுரை முடிக்கும் இந்ததருவாயில் சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் செல்லத்துரை சுவாமிகள் பங்குனி ஆயில்ய குருபூஜைத்தானே எம்மை வரச்சொன்னார்? தற்போது பங்குனி மாதம், எப்போது ஆயில்யம் வருகிறது என்று பஞ்சாங்கத்தினை பார்த்தால், நம்பமுடியாத ஆச்சரியம்! ஆம் இன்று தான் யோகர் சுவாமிகளின் குருபூசை தினம்! பங்குனி ஆயில்யம்! சித்தர்களின் ஆட்கொள்ளல்கள் எம்மால் உடனடியாக புரிந்துகொள்ள முடியாதவை! காலத்தினூடாக அனுபவத்தினூடாக ஞானத்தினை தருவதுதான் அவர்கள் கருணை! அந்தக்கருணையினை அனுபவிக்கவும், இந்தப்பணியினை திறம்பட செய்வதற்கு யோகர் சுவாமியாய், செல்லத்துரை சுவாமியாய், எமது குரு நாதனாய் இருக்கும் ஞானசக்தியினை இருத்தி இந்தப்பணியினை தொடங்குவோம்!
*********************************************************************
செல்லத்துரை சுவாமி அவர்களது வாழ்க்கைச் சுருக்கம் இங்கே
*********************************************************************