குண்டலினி சக்தி 02: ஆர்தர் ஆவலோன் (Arthur Avalon) முன்னுரைமுன்னுரை

எனது "சக்தியும் சாக்தமும்" நூல் முதன்முறையாக குண்டலினி யோகத்தின் தத்துவம் பற்றி விவரித்திருந்தது. சில பகுதிகளில் அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அது பற்றிய தெரிதல் மிகக்குறைவே.

இந்தப்புத்தகம் குண்டலினி யோகம் பற்றிய முழுமையான விளக்கங்களையும் விபரிப்புகளையும் கொண்டிருக்கின்றது, இந்த யோகத்தினூடாக பேசப்படும் விடயங்கள் தந்திராவின் அதிமுக்கியமான கோட்பாடுகளாகும். சிலவருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு நூற்களினதும் சமஸ்க்ருத மூலம் எனது தந்திர நூற்களை வெளியிடும் தொகுதியில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் மொழிபெயர்க்கப்படவில்லை. முதலாவது நூலான "ஷட்சக்ர நிருபணம்" (உடலில் உள்ள ஆறு சக்கரங்களின் விளக்கமும் ஆதாரமும்) தாந்திரீகரான பூர்ணாணந்த ஸ்வாமி அவர்களால் எழுதப்பட்டது. அவரைப்பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும். இந்த நூலானது அவரது வெளியிடப்படாத "ஸ்ரீ தத்துவசிந்தாமணீ" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். இந்த நூல் தாந்திரீக நூற்தொகுதி வெளியீடு பகுதி - 02 இல் சங்கரா மற்றும் விஸ்வ நாதா ஆகியவர்களால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. அந்த பதிப்பே இந்த மொழிபெயர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உரைக்கான மொழிபெயர்ப்பு காளிசரண் என்பவர் எழுதிய உரையின் மொழிபெயர்ப்பாகும்.

இரண்டாவது நூலான "பாதுகா பஞ்சகம்" மேலே ஷட்சக்ர நிருபணத்தில் விபரிக்கப்பட்ட சக்கரதாமரைகளில் ஒன்றினைப்பற்றி விபரமாக விபரிக்கின்றது. இதற்குரிய உரையும் காளிசரணினால் வகுக்கப்பட்டதே. இரண்டு மொழிபெயர்ப்புத்தொகுதிகளுக்கும் நான் எனது சொந்த கருத்துரைக் குறிப்புகளையும் எழுதியுள்ளேன். இங்கு எழுதப்பட்டுள்ள உரையும் மொழிபெயர்ப்பும் மறைபொருள் சார்ந்த விளக்கத்தில் இருப்பதால் அவை சாதாரண (ஆங்கில) வாசகனுக்கு கஷ்டமானதாகும். இதனால் மொழிபெயர்ப்பிற்கு (எனது அறிவுக்கும் இத்துறை சார்ந்த அனுபவத்திற்கும் உட்பட்டு) இந்த யோகம் சார்ந்த எனது அறிமுக உரையினை வழங்கியுள்ளேன். அத்துடன் சில படவிவரணங்களையும் இந்த நூலில் விபரிக்கப்பட்டதற்கமைய வரைந்து இணைத்துள்ளேன்.

இந்த யோகத்தினைப்பற்றி சுருக்கமான பொதுவான விளக்கமுடைய அறிமுகம் எழுதுவது என்பது முடியாத காரியம், இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் எனது மற்றைய தந்திரசாஸ்திர நூற்களை படிக்குமாறு வேண்டுகிறேன். அதற்கு தந்திர தத்துவம் பொருந்தமானது, இந்த நூலுடன் தொடர்புடைய விடயத்தினை கொண்டது. எனது அண்மைக்கால பதிப்புகளின் ஒன்றான சக்தியும் சாக்தமும் நூலில் சாக்த தந்திரம் தொடர்பான விடயங்களையும் அதன் சடங்கு முறைகளையும் விபரித்துள்ளேன். வேதாந்த கேசரி எனும் நூலில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்ட முதல் மூன்று பகுதிகள் எனது மந்திர சாஸ்திரம் தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன, அவை இந்ததுறையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களான தத்துவம், சக்தி, கலா, நாத, பிந்து போன்ற சொற்களுக்கான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை புரிந்துகொள்வது இந்த நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை விளங்கிக்கொள்ள அவசியமான ஒன்றாகும்.

வங்காளத்தின் மிகச்சிறந்த தாந்திரிகர்களில் ஒருவரான பூர்ணானந்தருடைய "ஷட்சக்ர நிருபணம்" என்ற இந்த நூல் அவருடைய வழித்தோன்றல்களில் ஒருவரின் மூத்த புதல்வர்களிருவரிடமிருந்து பெறப்பட்டது. அவர்களில் இருவர் ராஜ்சாஹி வரேந்திரா ஆராய்ச்சி நிலையத்துடன் தொடர்புபட்டவர்கள். ஸ்ரீ அக்ஷய குமார மைத்ரயா (இயக்குனர்), ஸ்ரீ ரதா கோவிந்த பைசக் (செயலாளர்), இவர்கள் இருவரிடமிருந்தும் பூர்ணானந்தருடைய விபரங்கள் பெறப்பட்டன, அவை வருமாறு;

பூர்ணானந்தர் காஸ்யப கோத்திரத்தினை சேர்ந்த ராஹிரி பிராமணர். இவர்களுடைய முன்னோர்கள் பக்ராசி எனும் கிராமத்தினை சேர்ந்தவர்கள். இது எங்கு உள்ளது என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது ஏழாவது தலைமுறை முன்னோர்களில் ஒருவரான அனந்தாச்சார்யா முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பரா நகரா என்ற இடத்திலிருந்து மைமென்சிங்க் மாவட்டத்தில் உள்ள கைதாலி என்ற கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார் என அறியக்கிடைக்கிறது. இவர்களின் குடும்பத்திலிருந்து இரண்டு பெரும் தாந்திரீகர்கள் உருவாகியுள்ளார்கள். ஒருவர் ஸர்வானந்தா மற்றையவர் பூர்ணானந்தா. ஸர்வானந்தரின் வம்சாவழியினர் மேஹாரில் வசிக்கின்றனர். பூர்ணானந்தரின் வம்சாவழியினர் மைமென்சிங்க் மாவட்டத்தில் வசிக்கின்றனர். பூர்ணானந்தரின் உலகவாழ்க்கை பற்றி அதிகம் அறியக்கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய ஒரேயொரு தகவல் மாத்திரமே அறியக்கிடைக்கிறது. சாக வருடம் 1448 (கி.பி 1526) அளவில் ஜெகதானந்தா என்பவர் விஷ்ணு புராணத்தினை பிரதிசெய்து படி எடுத்துள்ளார். அந்த பிரதி  இன்றும் ரயிதாலியை சேர்ந்தஅவரது வழித்தோன்றல்களில் ஒருவரான பண்டிட் ஹரிகிஷோர் பட்டாச்சார்யாவிடம் பாதுகாக்கப்பட்ட வடிவில் உள்ளது. அது வரேந்திரா ஆராய்ச்சி கழகத்தினை சேர்ந்த சதீஷ் சந்திர சித்தாந்தபூஷணவினால் படிக்கப்பட்டுள்ளது. அந்த ஏட்டுப்பிரதியில் சாகவருடம் 1448 இல ஜகதானந்த சர்மா அதனை எழுதியதாக குறிப்பு இருக்கின்றது.

இந்த ஜகதானந்த சர்மாவே பூர்ணானந்தர் என நம்பப்படுகிறது, ஜகதானந்தர் தனது குருவான பிரம்ம நாதரிடம் தீட்சை பெற்று அஸாமில் உள்ள காமரூபம் சென்று சாதனையில் சித்தி பெற்றதாகவும், அவர் தங்க்கியிருந்த ஆசிரமம் கௌஹதி (அஸாம்) நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள கிராமம் எனவும் நம்மப்படுகிறது. அதன் பின்னர் பூர்ணானந்தர் வீடு திரும்பாமல் பரமஹம்ஸ நிலையினை எட்டி பல தாந்திரீக நூற்களை எழுதியதாகவும் அறியப்பட்டுள்ளது, அவர் எழுதியதாக அறியப்பட்ட நூற்கள் சில ஸ்ரீதத்துவசிந்தாமணீ, சியாமாரகஸிய, சாக்தக்ரம, தத்துவ நந்ததரங்கினி, யோகசார என்பவை. அவருடைய உரையில் காளிகாகரகுட பாடல்களுக்கான உரை மிகபிரசித்தமானது. இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஷட்சக்ர நிருபணம் ஒரு தனியான நூல் அல்ல, அது ஸ்ரீதத்துவ சிந்தாமணியின் ஆறாவது படலமாகும். இவருடைய வம்சாவழிகளில் ஒருவர் தந்த வம்சாவழிப்படத்தினை பார்க்கும் போது இவர்கள் தாந்திரீகத்தில் வீராச்சார மரபினை சேர்ந்தவர்கள் எனதெரியவந்துள்ளது, தற்போது உள்ள குடும்ப வம்சக்கொடியில் பத்து தலைமுறைக்கு முன்னர் பூர்ணானந்தர் விலகி தாந்திரீக வழியில் சென்றுள்ளார் என அறியக்கிடைக்கிறது.

இந்தவேலை கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நூலின் பொருள் கடினமாதலால் ஆவற்றை கையாளும் நிலைகளில் ஏற்பட்ட தடங்கலால் ஏற்பட்டதே இது. இன்னும் சில படவிளக்கங்களை இணைக்கலாம் என எண்ணியிருந்தேன், எனினும் காலதாமதம் கருதி தற்போது உள்ளவடிவிலேயே வெளியிட விரும்புகிறேன்.
  
செப்டெம்பர், 20, 1918                                             ஆர்தர் ஆவலோன்
ராஞ்சி

******************************************************************************************************************************************
மூலம்: THE SERPENT POWER by Arthur Avalon
தமிழில் மொழிபெயர்ப்பு: சுமனன்

*******************************************************************************************************************************************

Comments

  1. sumanan,
    great work. keep going.
    I have read the serpanat power(10 yrs back) and I have a copy of the same still with me.
    -Surya

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு