கடையிற் கிடைக்ககூடிய சித்தர்களின் அரிய காயகற்பமுறை - 02


பொதுவாக காயகற்பம் என்றவுடம் மலைகள் பல ஏறி மூலிகை சேகரித்து அவற்றை சித்தர்கள் முறைப்படி சுத்தி செய்து செய்யும் மருந்துகள் என எண்ணப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை என்றாலும் இந்த மாயையினால் பலர் தமது கையில் கிடைக்கும் எளிய பொருட்களையே பயன்படுத்துவதில்லை. தம்மிடம் தான் சித்தர்கள் கூறிய இரகசியங்கள் இருப்பதாக மக்கள் மனதினை நம்பச்செய்வதற்காக, இப்படியான தோற்றத்தினை பல சித்தமருத்துவர்கள் உருவாக்கி விடுகிறார்கள், 

அந்த வகையில் எல்லோருக்கும் ஆயுர்வேத/சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கக்கூடிய சூரணம்தான் திரிபலா சூரணம், பெரிய விலைவராது, ஆனால் குணம் பெரியது. இந்தப்பதிவில் திரிபலா சூரணத்தினை பற்றிய முழுமையான அலசலினை பார்ப்போம். அதில் கீழ்வரும் தகவல்களை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
 • திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகள் பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்?
 • திரிபலா சூரணத்தில் உள்ள மூலிகைகளினைப்பற்றி நவீன அறிவியல் என்ன சொல்கிறது?
 • திரிபலா சூரணம் எப்படி உடல் செயற்படுகிறது? காயகற்பமாகிறது?
 • திரிபலா சூரணத்தினை எப்படி எல்லோரும் பயன்படுத்துவது?
 • அவ்வாறு பயன்படுத்தும் போது ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? அவற்றினை எப்படி சமாளிப்பது? எடுக்கவேண்டிய அளவுகள் எவை?

இவ்வளவு விபரங்களையும் நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டு, தினசரி திரிபலா சூரணத்தினை பயன்படுத்தி உடலினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிமுறையினை இந்த கட்டுரைத்தொடர் உங்களுக்கு போதிக்கும். 

திரிபலா என்பது திரிதோஷங்களையும் சமப்படுத்தி உடலை பலப்படுத்தக்கூடிய மூன்று மூலிகைகள் எனக் கண்டோம், அந்த மூன்று மூலிகைகளூம்
 • கடுக்காய் -Terminalia Chebula
 • தான்றிக்காய் - Terminalia Belerica
 • நெல்லிக்காய் - Emblica officinalis

இந்த மூன்று மூலிகைகளும் கற்பமூலிககள் எனப்படும், அதாவது உடலை நீண்டகாலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மூலிகைகள். முதலில் இவைபற்றி சித்தர் நூற்கள் என்ன சொல்கிறது என்று பார்த்து விட்டு வருவோம். 

முதலில் கடுக்காய் பற்றி பதார்த்தகுண விளக்கம் கீழ்வருமாறு பாடலாக கூறுகிறது;

கடுக்காய் -Terminalia Chebula

கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலுங்
கடுக்காய் தாய்க்கதிகங் காணீ - கடுக்காய்நோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னை யோசுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து

இதன் பொருள் கடுக்காயும் தாயும் ஒன்றேனவே நினைத்தாலும் தாயைப்பார்க்கிலும் கடுக்காய் அதிகமாம், ஏனென்றால் கடுகாய் உடலிலுள்ள பிணிகளை நீக்கி உடலை வலைமைப்படுத்தும், ஆனால் தாயோ தன் அன்பு மிகுதியால் அறுசுவை உண்டிகளை பிள்ளைக்கு கொடுத்தாலும் பிணிகள் அற்ற உடல்தான் உணவை கிரகித்து தன்னை போசிக்கும் தன்மையுடையது. ஆகவே உணவு எப்படி பயனுடையதாகும் என்ற வகையறியாமல் உணவூட்டும் தாயினை விட கடுக்காய் சிறந்தது என்கிறார். 

இதனுடைய செயல்கள் 
 • மலகாரி - பேதியுண்டாக்கும்
 • சங்கோசகாரி, - சரீர தாதுக்களில் நுண்ணியிர் தொற்றினால் அழுகிவிடாமல் இருக்கும் பண்புடையது
 • தாதுஷீணரோதி - சதை நரம்புகளை சுருங்க்கச் செய்யும்
 • ரக்தஸ்தம்பனகாரி - ரத்த நாளங்களை சுருங்கச் செய்து இரத்தத்தினை வெளியாக்காமல் தடுக்கும் மருந்து
 • உதரவாதஹரகாரி - வயிற்றில் உஷ்ணத்தினை உண்டாக்கி வாயுவை கண்டிக்கும் மருந்து. 

போகர் ஏழாயிரம் கடுக்காயின் வகைகளையும் அதன் மூலம் செய்யக்கூடிய கற்பங்களையும் பற்றி விரிவாக கூறும். கடுகாயினை தனியாகவே கற்பமாக கொள்ளலாம். அதுபற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம். இங்கு கடுக்காய் திரிபலா சூரணத்தில் சேர்வதால் அதுபற்றிய விபரங்களை சிறிதாக பார்ப்போம். 

இரண்டாவது தான்றிக்காய்
தான்றிக்காய் - Terminalia Belerica

ஆணிப்பொன் மேனிக்கழகு மொளிவுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் - தாணிக்காய் 
கொண்டவர்க்கு மேகனறுங் கூறா வனற்றணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண்

இதன் பொருள் தான்றிக்காயினை உண்பதால் உடல் ஆணிப்பொன்னை போல் உடல் மின்னும், வாத பித்த தோஷங்கள் சமப்படும், உடற்சூடு, வாதகோபம் பித்த நீர், ஆண்குறிக்கிரந்தி என்பன போகும், உடலில் அழகும் ஒளியும் உண்டாகும். 

இதனுடைய செயல்கள்;
 • சங்க்கோசகாரி - சரீர தாதுக்களில் நுண்ணியிர் தொற்றினால் அழுகிவிடாமல் இருக்கும் பண்புடையது
 • சுரகாரி - சுரம் நீக்கும் மருந்து


மூன்றாவது நெல்லிகாய்
நெல்லிக்காய் - Emblica officinalis

நெல்லிக்காய் 

வற்றல் (காயந்தது)பித்த மனலையம் பீநசம்வாய் நீர்வாந்தி
மத்தமலக் கட்டு மயக்கமுமி - லொத்தவுரு
வில்லிக்கா யம்மௌங்க்கா மென்னாட்கா லந்தேர்ந்தே
நெல்லிக்கா யம்மருந்து ணீ

நெல்லிக்காய்க் குப்பித்த நீங்க்கு மதன்புளிப்பாற்
செல்லுமே வாதமதிற் சேர்துவர்ப்பாற் - சொல்லுமைய
மோடுமிதைச் சித்தத்தி லுன்ன வனலுடனே
கூடுபிர மேகமும்போங் கூறு

இதன் குணம் கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகலில் உண்ணும்போது பைத்தியம் (திரிதோஷ குழப்பத்தால் வரும் மனக்கோளாறு), கப நோய், பீநிசம், வாந்தி, மலபந்தம், பிரமேகம் இவைகள் இல்லாமல் போகும். அதன் புளிப்புச் சுவையால் வாயுவும், துவரால் கபமும் நீங்க்கும். 

இதன் செயல்கள்
 • சீதளகாரி - உஷ்ணத்தினை தணீத்து அதிக தாகத்தினை உண்டாக்காமல் செய்வது
 • மூத்திரவர்த்தனகாரி - சிறு நீரினை அதிகமாக்கும் மருந்து
 • இலகுமலகாரி- உபவத்திரம் இல்லாமல் மலத்தினை வெளியேற்றும் மருந்து
 • உதரவாதஹரகாரி - வயிற்றில் உஷ்ணத்தினை உண்டாக்கி வாயுவை கண்டிக்கும் மருந்து. 

இந்த மூன்று கற்பமூலிகைகளையும் சேர்த்த மருந்துதான் திரிபலா சூரணம் எனப்படும். 

இது பற்றிய மேலும் பல விபரங்களை அடுத்துவரும் பதிவுகளில் காண்போம்!


Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு