அரசியல், வியாபாரம், சமூக முன்னேற்றங்களில் தலைமைத்துவம் தேவை என்பதை அனைவரும் அறிவார்கள். தலைமைத்துவத்தின் நோக்கம் குழுவை இலக்கினை நோக்கிச் செலுத்துவது. ஆனால் சரியான மனச்சுத்தி இல்லாமல் தலைமைப் பண்பு வாய்க்காது.
எனது தொழில் நிபுணத்துவ ஆசான் சொல்லித்தந்தது, எப்போதும் உனது குழுவைத் தேர்ந்தெடுக்கும்போது உனக்கு உதவியானவர்களைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு அவசியமோ அதைப்போல் உனக்கு சவால் விடும் ஒருவனையாவது தேர்ந்தெடு என்பது! குறிப்பாக ஆமாச்சாமி போடும் நபரைத் தூர வை என்பார்! கேள்வி கேட்கும் புத்திசாலியை வைத்து வேலை வாங்க வேண்டும் என்றால் நீ அதை விடப் புத்திசாலியாக இருக்க வேண்டும்!
அனேக மனிதர்கள் தலைமைத்துவத்தை ஏற்க முன்னர் தமது அக உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதில்லை; யானை மாலை போட்டு பட்டத்திற்கு வந்ததைப் போல் சந்தர்ப்ப வசத்தில் தலைமைப்பதவி கிடைத்திருக்கும்! தமது உணர்ச்சிகளிற்கு அடிமைப்பட்ட மனதுடன் மக்களைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள்.
பயம் - மனதில் பயம் உள்ளவன் தலைவனாகினால் எப்போதும் எவரையாவது எதிரியாக்கி மக்களுக்கு அவனால் ஆபத்து என்று மனமாயை உருவாக்கி மக்களை ஒருவித உணர்ச்சிக்கு அடிமையாக்கி தனது அதிகாரத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பான்! இத்தகையவனது இலக்கு எப்படியாவது சாகும்வரை நான் அதிகாரத்தில் கதிரையில் இருக்க வேண்டும் என்பது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயம் காட்டியே வீணடிப்பான்.
பெருமை - பெருமை பிடித்தவன் எப்போதும் தன்னைப்பற்றி ஹீரோவாக பீற்றிக்கொண்டிருப்பதும், மற்றவர்கள் எல்லாரும் தனக்கு வாய்த்த அடிமை என்று நினைப்பதும், தனக்கு அடிமையாக இருக்கத் தகுதியாக எவனாவது இருந்தால் அவர்களை உடன் வைத்துக்கொள்வதும் இவனது பண்பு.
தாழ்வு மனப்பான்மை - சிலருக்கு தாம் எப்படித் தலைவனானோம் என்பதையே நம்பமுடியாமல் ஆழ்மனக்குழப்பத்தில் இருப்பார்கள்; கிட்டத்தட்ட 23ம் புலிகேசி போன்றவர்கள்; தாம் தலைவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி தமது தொண்டர்களுக்கு குடைச்சல் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தன்னை விட தகுதிவாய்ந்தவர்கள் எவராவது குழுவில் இருக்கிறார்களா என்பதை அவதானித்து அவர்களை கவனமாக கவனித்து வெளியேற்றுவதில் சிறப்பாகச் செயற்படுவார்கள்.
கபடம் - தான் அதிகாரத்தில் இருக்க ஒருவரை ஒருவன் ஒத்திசைந்து வேலை செய்ய முடியாமல் குழுவிற்குள் விரோதம் விதைத்து நச்சினைப் பாய்ச்சிக்கொண்டிருப்பவன்.
உண்மைத் தலைவன் - ஒவ்வொரு நொடியும் தனது மக்களுக்கு என்ன தேவை? அதை எப்படி அடைவது? என்ற இலக்கு உடையவன்! தன்னை விட தனது மக்கள் சரியான திசையில் சென்று இலக்கினை அடையவேண்டும் என்ற உறுதி உடையவன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.