இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த எப்போதும் நிறைவானது, முழுமையான அறிவானதும், ஆனந்தமயமுமான சத் சித் ஆனந்த சிவ பரம்பொருள் உயிர்கள் மேல் வைத்த கருணையால் தன்னை சதாசிவம் என்ற ஐந்து முகங்களுடைய மூர்த்தியாய் சகளீகரித்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.
இதுவே தோற்றத்தின் முதல் நிலை;
இந்த சதாசிவ ரூபத்தின் ஐந்து முகங்களும் உயிர்களுக்குத் தேவையான அறிவினை வெளிப்படுத்தியது.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று நான் கு திசைகளை நோக்கிய முகங்கள் முறையே வாமதேவம், தத்புருடம், அகோரம், சத்தியோஜாதம் என்ற நான்கு பெயர்களால் அழைக்கப்படும்.
ஐந்தாவது முகம் ஊர்த்துவமாக மேல் நோக்கி இருக்கும்.
இந்த ஐந்து முகங்களூடாக சக்திநிபாதம் பெற்ற ரிஷிகளூடாக உருவாகிய சிவத்தை அடையக்கூடிய அறிவுகள் ஆகமங்கள் எனப்படும்.
இந்த ஐந்து முகங்களிலிருந்து சக்தி நிபாத தீக்ஷை பெற்ற ரிஷிகள் ஐவர்
வாமதேவம் - காசிபர்
த்புருடம் - கௌதமர்
அகோரம் - பரத்வாஜர்
சத்தியோஜாதம் - கௌசிகர்
ஈசானம் - அகத்தியர்
ஆகமம் என்பது சதாசிவ மூர்த்தத்திலிருந்து சக்தி பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் சக்திநிபாத மரபு!
சக்தி நிபாதம் என்பது ஆன்மாக்களைச் சூழ உள்ள மும்மலங்கள் அழிந்து அங்கு சிவத்தை உணரும் தன்மையினை ஏற்படுத்தி சக்தியை நன்கு பதித்தல் என்று அர்த்தம்.
ஆகமங்களின் அறிவு உடலில் செயற்படும் தன்மையை உடலில் உள்ள ஆதாரங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
சத்தியோஜாதம் - சுவாதிஷ்டானம்
வாமதேவம் - மணிப்பூரகம்
அகோரம் - அநாகதம்
விசுத்தி -தத்புருஷம்
ஆக்னை - ஈசானம்
மூலாதாரம் என்பது ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் என்ற நான் கினையும் கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் உழலுபவர்களுக்கு ஆகம வழி இல்லை என்பதை அறியலாம்.
மூலாதார அடிப்படை வாழ்க்கையை மனிதனின் பொது வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இவற்றை சரிபடுத்தும் அறிவினை வேதங்கள் தருகிறது. வேதங்களின் பல துதிகள் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இவற்றினை எப்படி சரி செய்வது, பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது பற்றியும் உரையாடும், அதேவேளை மிகவும் சூக்ஷ்மமாக ஆகமத்திற்குரிய கூறுகளையும் கொண்டிருக்கிறது. அதாவது வேதங்களின் பெரும்பகுதி மூலாதார வாழ்க்கையை சீர்படுத்தும் அதே வேளை உயர் ஞான வாழ்க்கை அடைவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
வேதங்கள் காலத்தால் முந்தியதாகவும் மனிதனின் ஆரம்ப பரிணாமத்தினை வழி நடாத்துவதாகவும் இருக்க ஆகங்கள் அவற்றின் உயர் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிரபஞ்ச தோற்ற மூலமாகிய சதாசிவ தத்துவத்துடன் நேரடி சக்தி பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு உயிர்களுக்கு வழிகாட்டும் முறையைக் கூறுகிறது. இதனால் ஆகமத்தில் குருவும், தீக்ஷை மரபும் முக்கியமாகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.