சூரிய ஒளியை ஒளித்தொகுப்பு மூலம் தாவரத்தின் பச்சையம் கவர்ந்து உணவாக – குளுக்கோசாக மாற்றுகிறது. அதாவது போட்டோனில் சக்தியாக இருந்த ஒன்றை திணிவாக மாற்றி பூமிக்குள் சூரியனின் ஆற்றலை உருமாற்றும் செய்கை. இந்த செய்கையின் அடிப்படையில்தான் பூமியின் ஒட்டுமொத்த உணவுச் சங்கலியும் ஆரம்பமாகிறது.
சூரிய ஆற்றல் இப்படி கவரப்பட்டு உணவாகியதை மனிதன் தனது இச்சைப்படி திருடிக்கொள்வதுதான் விவசாயம் அல்லது உற்பத்தி! ஆக மனிதனால் சக்தியைக் கவர முடியாது; உணவினை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் இயற்கை செய்து வைத்துள்ள ஏற்பாடுகள் எல்லாவற்றையும் குழப்பவும், திருடவும் மனிதனால் முடியும் என்பதுதான் மனிதனின் சிறப்பியல்பு.
மனிதனின் இந்த திருட்டு இயல்பில்தான் விவசாயத்தின் மொத்தப் பிரச்சனையும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் மனிதனிற்கு இயற்கையிடமிருந்து அதிகமாக, அதேவேளை சுலபமாகத் திருடக்கூடிய விவசாய உற்பத்தி முறைகள் வேண்டும்! இன்னொரு இடத்தை, சூழலை நாசமாக்கி தனக்கும், தனது குழுவிற்கும், நாட்டிற்கும் உணவு வேண்டும்.
இரசாயன உரம் பாவிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு கூறும் காரணங்களில் ஒன்று;
உரம் பாவித்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்; அதிக விளைச்சல் கிடைத்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி உரம் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் Supply & Demand பொருளியல் தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஒன்று அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் சந்தையில் அதன் விலை குறையும் என்று.
நுவரெலியா மாவட்ட மரக்கறிச் செய்கையில் இதை அவதானிக்கலாம். அனைவரும் கோவா பயிரிட்டிருக்கும்போது கந்தசாமி அண்ணன் மாத்திரம் கரட்டைப் பயிரிடுவர். அந்த போகத்திற்கு கரட்டிற்கு அமோக விலை கிடைத்து கந்தசாமி அண்ணன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவார். இதை உரம் விற்பவர் தனது சந்தைப்படுத்தலுக்கு பாவித்து மூளைச் சலவை செய்வார் “பாருங்கள் கந்தசாமி, அண்ணேயோட தோட்டத்தில் இந்த உரம் போட்டு அமோக விளைச்சல்; இந்த உரத்தைப் பாவியுங்கள், இந்தமுறை கரட்டையும் போடுங்கள் என்று உரக்கடைக்கார ஊரில் உள்ள தோட்டக்காரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துவார். உடனே அனைவரும் கரட்டும், உரமும் வாங்கிப் பயிரிடுவர். அடுத்த போகத்திற்கு கரட் கிலோ 30 ரூபாய் என்று வந்துவிடும். கரட் பயிரிட்டவர்கள் அனைவரும் நஷ்டமடைவார்கள்.
அதிக விளைச்சல் அதிக இலாபம் என்று கருதி தமது பணத்தை உரத்திற்காக வீணடித்து இறுதியில் நஷ்டமடையும் விவசாயி! இலாபமடையும் நபர் உரத்தை உற்பத்தி செய்தவரும், கமிஷனுக்கு விற்றவரும்!
ஆனால் இந்த விவசாயமுறையில் ஒரு நுட்பம் இருக்கிறது; அதிக விளைச்சல் வந்தால் அதை உயர்விலை பெறக்கூடிய சந்தை வாய்ப்பு கொண்டு செல்லும் உட்கட்டமைப்பைக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த பயனைத் தரும். (ஆனால் மண்ணைக் கொல்லும் என்பதை மறக்கக்கூடாது) இந்த முறையைப் பயன்படுத்தித்தான் லத்தீன் அமெரிக்காவில் வாழையும், அன்னாசியும், மரக்கறியும் உற்பத்தி செய்து அமெரிக்கா, கனடாவின் நுகர்விற்கு செல்கிறது. ஆபிரிக்காவில் உற்பத்தி செய்து ஐரோப்பாவிற்கு நுகர்வாகிறது. இதைச் செய்யும் நிறுவனங்களின் மொத்த வருமானம் இலங்கை போன்ற நாடுகளின் வருமானத்தை விட பலமடங்கு பில்லியன் டொலர் வர்த்தகங்கள். ஒவ்வொரு நிறுவனமும் அறுவடை செய்து ஐந்து நாட்களில் ஐயாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சந்தைக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படாமல் மரக்கறியையும் பழத்தையும் கொண்டு செல்லும் சொந்தக் கப்பல், துறைமுக வசதி அவர்களுக்கு உண்டு!
இப்படி கிளியைப் பார்த்து நரி, சூடுபோட்டுக்கொண்டதைப் போல் உள்ளூர் விவசாயிக்கு அதிகம் உற்பத்தி செய்தால் இலாபம் என்று மாயை காட்டி ஏமாற்றும் வித்தையைத் தான் அனேக உரம் விற்பவர்கள் நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் உலகின் வாழை, அன்னாசி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு. இந்த நாடு 50 வருடங்களுக்கு முன்னர் நவீன இரசாயனத்துடன் மேற்கூறிய பயிர்களை பயிரிட்டு ஏற்றுமதி வருமானம் பெறுவது என்ற கொள்கையுடன் ஆரம்பித்தது. இன்று ஏறாத்தாழ பயிர் செய்யப்பட்ட இடங்களின் உயிர்பல்வகைமை அழிந்து, நீர் மாசாகி, மீன்வளம் குன்றி சூழலியல் பிரச்சனையுடைய நாடாக மாறியுள்ளது. எவ்வளவு உரப்பாவனை அதிகமாகிறதோ அந்தளவிற்கு நோய்த்தாக்கமும் அதிகரிக்கிறது. புதுப்புது நோய்கள், பீடைகள்!
எப்படி இருப்பினும் இப்படி உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் இருபது வருடங்களில் மலடாகும்! அதற்குப் பிறகு அந்த நிலங்கள் உவர் நிலங்களாகி பாலைவனமாகும்போது அங்கு எந்த விவசாயமும் செய்ய முடியாது.
இப்படி நிலத்தை உரப்பாவனையால் மலடாக்காமல் உயிர்த்தன்மையுடன் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையுடன் விவசாயம் செய்யலாம் என்பதைத்தான் இயற்கை விவசாயம் சொல்லுகிறது.
சூழலியல் விதியின்படி ஒரு தொகுதியினுள் அதிக சக்திவாய்ந்த ஒரு உயிரினம் இருந்தால் அந்தத் தொகுதி விரைவாக நோய்த்தாக்கம் அடைந்து அழிவடையும். ஆனால் பல்வகைமைத் தன்மை இருந்தால் ஒன்றை ஒன்று பாதுகாத்து நீண்டகாலம் நிலைத்திருக்கும். உதாரணமாக புல் மாத்திரம் இருக்கும் நிலம் சூரிய ஒளியில் கருகி நெருப்பு பிடித்து அழிந்து விடும். ஆனால் ஐந்தடுக்கு, ஆறு அடுக்கு உள்ள காடுகளில் மேலேயுள்ள உயர்ந்த விதானம் உடைய மரங்கள் சூரிய ஒளியைத் தாங்கி கீழே உள்ளவை தாங்கக்கூடிய அளவில் குறைத்துக் கொடுக்க அதன் நிழலில் மற்ற அடுக்கில் உள்ளது செழிப்புறும். இப்படி ஒவ்வொன்றும் சூரிய ஒளியை கவ்விப் பிடித்து உணவை உருவாக்கும். இப்படி பல்வேறு பயிர்கள் குறித்த ஒழுங்கில் ஒன்றுக்கு ஒன்று உதவும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட காட்டுத்தொகுதி அதிக உற்பத்தித் திறனுடையதாக இருக்கும்.
இதேபோல் ஒரு பயிரை மாத்திரம் பயிரிட்டு, அதிக உரம் போடப்படும் பயிரிற்கு நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும். அதேவேளை எங்காவது ஒரு தடவை நோய் தாக்கினால் முழுப்பயிரும் நாசமாகிவிடும். மிகக் கவனமாக, அவதானத்துடன் பாவிக்கப்பட வேண்டியவை.
ஆனால் பல பயிர்களை உள்ளடக்கிய இயற்கை வேளாண்மையில் நிச்சயம் 10% இழப்பு பீடைகளால் இருக்கும். ஆனால் அவை வெகுவிரைவில் இயற்கை உணவுச் சங்கலி பீடைகளை கட்டுப்படுத்தும்.
தொடரும்…
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.