நண்பர்களே, படித்து விட்டு உரையாடலை comment இனூடாக ஆரம்பியுங்கள்!
***********************************
தாவரம் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் எப்படிப் பெறுகிறது என்பது பற்றி Liebig இற்கு முன்னராக இருந்த கோட்பாடுகளை humus theory எனப்படும். அதாவது மண்ணில் விழுந்து இறந்துபோன, தாவரங்கள், விலங்குகளின் அழுகிய பாகங்களே தாவத்திற்கு உக்கலாகி உணவாகிறது என்று நம்பப்பட்டது.
இந்தக்கோட்பாட்டினை மேற்கத்தேய தத்துவஞானிகளும், கீழைத்தேய தத்துவவாதிகளும் விவசாயத்தில் நம்பியிருக்கிறார்கள்.
பாரதத்தின் பழம்பெரும் விவசாய நூலாகிய பாராசர மகரிஷியின் க்ருஷி சாஸ்திரம் விலங்குகள், தாவரங்களை பயிர்ச் செய்கைக்கு எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி உரையாடுகிறது.
கிரேக்க தத்துவியலாளர் Democritus of Abdera (460- 360 BC) கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பூமித்தாய் மழையினால் செழிப்படைகிறாள்; மழை பயிர்களை உயிர்ப்பிக்கிறது; பயிர்கள் மனிதனையும் விலங்குகளையும் போசிக்கிறது; எவை பூமியிலிருந்து எடுக்கப்பட்டதோ அவை அனைத்தும் பூமிக்கு மீளச் செல்லவேண்டும். வாயு மண்டலத்தில் இருந்து எடுக்கப்பட்டது வாயுக்களாக மீண்டும் வாயு மண்டலத்திற்கு செல்ல வேண்டும். ஒரு உயிரின் இறப்பு என்பது அதன் அழிவு அல்ல; இந்த மூலகங்கள் எங்கிருந்து வந்ததோ அதற்கு மீளச் செல்லும் செய்கை”
இந்த தத்துவத்தை அரிஸ்டோட்டில் நிலம், நீர், அக்னி, வாயு ஆகிய நான்கு பூதங்களில் இருந்து ஒன்றிலிருந்து ஒன்றாக மாறி தாவரத்தினது, விலங்குகளது உடல் உருவாகுவதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் மேற்கத்தேய விவசாயம் தாவரத்திற்கு தேவையான போசணைப்பதார்த்தங்களை இந்த சேதன உக்கல் மூலம் கிடைப்பதாக 2000 ஆண்டுகளாக 1840 இல் Liebig தனது இரசாயனவியல் அடிப்படையில் தாவரம் இயங்குகிறது என்று கூறும் வரை மேற்கூறிய தத்துவ அடிப்படையில் மேற்கத்தேயம் Humus theory இனையே 2000 வருடங்களாக தாவரத்தின் போஷாக்கிற்கு அடிப்படையாக கொண்டிருந்தது.
இதேபோல் கீழைத்தேயத்தில் பாரத தேசமும் இதே கொள்கையைக் கொண்டிருந்து என்பது பராசர மகரிஷியின் க்ருஷி சாஸ்திரம், அதர்வண வேத சுலோகங்கள் உறுதிப்படுத்துகிறது.
இதையே தமிழர்களும் சங்ககாலத்தில் கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகிறது; கலித்தொகை,108-60 கூறுகிறது;
“காஞ்சித் தாது உக்கன்ன தாது எருமன்றத்துத்”
என்றும்,
ஏரினும் நன்றால் எருவிடுதல்” (1038) என்று திருவள்ளுவரும்
மேலும் நற்றிணை, அகநானூறு என்பவையும் மாட்டின் எருவும், உக்கிய இலை குழைகளும் மண்ணிற்கு எருவாக இடப்பட்டது என்ற தகவலைத் தருகிறது.
மருத நிலக்குடிகளான வேளாண் சமூகத்தவர்கள் இப்படி உக்கலை மண்ணிற்கு இட்டு மண்ணை வளப்படுத்தும் அறிவைப் பெற்றிருந்தார்கள்.
இப்படி 2000 வருடமாக இந்தப் பூமியில் வாழ்ந்த மனித சமூகங்கள் மண்ணில் இருக்கும் இந்த உக்கல் – humus – இனை நம்பியே விவசாயம் செய்துகொண்டிருந்தனர்.
இந்த நம்பிக்கை 1840 இல் Lie Big தனது விவசாய இரசாயனவியல் கோட்பாடுகளை நிறுவும் வரை தொடர்ந்தது.
LieBig இடம் உக்கல் கோட்பாட்டின் இரண்டு போசணைப் பதார்த்தங்களின் கருதுகோள்கள் தோல்வியுற்றன. Lie big நவீன விவசாயத்திற்கு செய்த அறிவியல் பங்களிப்பாக மூன்று விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன. (George W. Black, Journal of Chemical Education 1978 55 (1), 33)
1. உக்கல் – ஹுமஸ் ஆனது தாவரத்திற்கான காபன் மூலம் என்று நம்பப்பட்டு வந்ததை மறுத்து தனது ஆய்வுக் கணிப்பீட்டின் மூலம் அவை மண்ணிலிருந்தோ, உக்கலில் இருந்தோ கிடைப்பதில்லை. உக்கல் காபோனிக் அமிலத்தைத் தந்து தாவரங்களுக்குள் இரசாயன மாற்றங்கள் நிகழ்வதை ஆரம்பிப்பதாக கருதினார்.
2. இரண்டாவதாக தனது ஆராய்ச்சி முடிவுகளின்படி நைதரசன் அனைத்து தாவரங்களுக்கும் வளிமண்டலத்திலிருந்தே கிடைப்பதாக முடிவு கட்டினார். ஆனால் நீரில் கரைந்து தாவரம் எடுத்துக்கொள்ளக்கூடிய நைத்திரேற்று, நைத்திரைட்டுக்களைப் பற்றி அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. இது அவரைத் தாவரக் குடும்பங்களுக்குத் தவிர மற்றவை வளிமண்டல நைதரசனை நேரடியாகப் பெறமுடியாது என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. இது தவறான ஒரு முடிவும் கூட.
3. மூன்றாவது விவசாய இரசாயனவியலின் அதிமுக்கிய பங்களிப்பு; இவர் பல்வேறு தாவரங்களை எடுத்து காயவைத்து அவற்றினை எரித்து அதில் அசேதன மூலகங்கள் வெவ்வேறு அளவில் இருக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தாவரத்திற்கும் அந்த மூலகங்கள் வெவ்வேறு அளவில் தேவைப்படுவதாகவும், அந்த தேவையை செயற்கை உரங்கள் மூலம் நிவர்த்தி செய்வதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம் என்றும் முன்மொழிந்தார். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு உருவாகியதுதான் இன்றைய நவீன செயற்கை உரப்பாவனை.
Lie big மண்ணுக்கும் தாவரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை மிக எளிமைப்படுத்தியது அவருடைய ஆய்வுகளில் இருக்கும் வழுவாகப் பார்க்கப்படுகிறது. மண்ணுக்கும் தாவரத்திற்கும் இடையில் இருக்கும் சமநிலை மண்ணில் இருக்கும் உயிரங்கிகளினால் – பற்றீரியா – பங்கசுகளினால் சமநிலைப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கவில்லை. உக்கல் – ஹுமஸ் கோட்பாட்டின் அடிப்படை மண் நுண்ணுயிரியலில் இருந்தது. இரசாயனவியலினை மாத்திரம் வைத்துக்கொண்டு Lie big உருவாக்கிய இந்தக் கொள்கையினை விவசாய வியாபார உலகம் நன்கு பிடித்துக்கொண்டது. உர வியாபாரம் செழிக்கத் தொடங்கியது!
காலங்கடந்து வளர்ந்த மண் நுண்ணுயிரியல் துறையால் அசுர வளர்ச்சி கண்டுவிட்ட இரசாயன உர அரக்கனிடம் போட்டி போட்டு வெல்ல முடியாமல் ஹுமஸ் எனப்படும் உக்கல் தோற்றுப்போனது. பிற்காலத்தில் ஹுமஸ் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை வளர்த்து தாவரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று புரிந்துகொள்ளப்பட்டது.
இங்கு நாம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது 2000 வருடங்களாக சேதன விவசாயம்தான் செய்யப்பட்டு வந்திருக்கிறது. எமது நாட்டில் பராக்கிரமபாகு அரிசி உற்பத்தி செய்து பர்மாவிற்கு ஏற்றுமதி செய்தது எந்தக்கம்பனியிலும் உரம் வாங்கி அல்ல என்பதும், ராஜ ராஜ சோழன் காவேரிப் படுக்கையை விளைநிலம் ஆக்கியதும் செயற்கை உரம் போடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
180 வருடங்களுக்கு முன்னர் உலகை ஆண்டுகொண்டிருந்த ஒரு பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அறிவியல் பிரிவிற்கு (British Association for the Advancement of Science) ஒரு அரைக்குறை அறிவியல் புரிதலுடன் கொடுக்கப்பட்ட அறிக்கை அதிகாரத்தினால் உலகமயமாக்கப்பட்டது என்பதும், ஆயிரமாண்டு காலம் இருந்து வந்த ஹுமஸ் என்ற உக்கல் பற்றிய சுதேச அறிவினை ஆதரிக்காமல் பின் தள்ளியதாலும் வந்ததுதான் இந்த இரசாயன உர விவசாயம்.
தொடரும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.