சில நாட்களாக ஒரு பிரபல அரசியல்வாதியின் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு பொங்கும் இளைஞர்களைப் பார்க்கிறோம்!
ஆத்திரம் ஒரு அரிய ஆற்றல்! அதை பால் சட்டியில் பொங்கி வழிந்து அடங்கி கருகுவது போல் பாவிக்கக்கூடாது! எமது சமூகத்தில் ஒரு சிறுமிக்கு அப்படியொரு நிலை ஏன் ஏற்பட்டது என்று சிந்திக்க வேண்டும்!
மேலும் கிளப் ஹவுஸில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று அரட்டை அடிப்பதில் பயன் எதுவுமில்லை. செயல் வேண்டும்!
எதிர்காலத்தில் எமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்க வேண்டும்.
நாம் பெருந்தோட்டத்தில் வாழும் எமது உறவுகள் மேம்பட எமது தகுதிக்குள் என்ன உதவி செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்!
எங்கள் மனம் எப்படி இயங்குகிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்! தோட்டத்திலிருந்து படித்து வந்தபின்னர் மீண்டும் எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தினை முன்னேற்ற நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
சிறு மாத வருமானத்தை ஈட்டக்கூடிய சிறிய தொழில்கள் உருவாக்கப்படவேண்டும். பணமுள்ள பணக்காரர்கள் முதலிட வேண்டும்.
ஆலயங்களில் சேரும் பெருந்தொகையான பணத்தினை வீண் ஆடம்பரத்திற்கு சேர்க்காமல் சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பாவிக்க வேண்டும்!
தனது தேவையற்ற தேவைகளை அகற்றி பணத்தை சமூக முன்னேற்றத்திற்குப் செலவிட வேண்டும்.
கற்றறிந்தவர்கள் தமது நேரத்தை சமூகம் முன்னேறத் தரவேண்டும்.
1) கல்வி முன்னேற்றம்
2) பொருளாதார முன்னேற்றம்
3) அடிப்படை உட்கட்டமைப்பு வசதி
இந்த மூன்று தளங்களிலும் எல்லா வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டம் வகுக்க வேண்டும்!
இவற்றை மேம்பட அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு பிச்சைக்கார அரசியல் செய்யாமல் எம்மிடம் இருக்கும் தொழிலதிபர்கள், பணவசதி படைத்தவர்களின் ஆற்றல் ஒன்றிணைக்கப்பட்டு சமூகத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்.
internet coverage இல்லை, மாணவர்கள் படிக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்று facebook இல் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதைத் தீர்க்க டயலோக், SLT இன் சிரேஷ்ட பொறியலாளருடன் ஆலோசனை செய்து பிரச்சனையைத் தீர்வு செய்யவேண்டும்! coverage இல்லாத ஊரிற்கு coverage கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்குரிய மாற்று யோசனை என்னெவென்று செயற்பட வேண்டும்!
தலைவன் வருவான், எம்மைக் காப்பாற்றுவான் என்று பொன்னியின்செல்வன் மனப்பாங்கில் இருக்காமல் பிரச்சனைக்குத் தீர்வு தர ஒவ்வொரு இளைஞனாலும் முடியும்; அதற்குரிய அடிப்படை அறிவும் திறனும் என்னவென்று பயிற்றுவிக்கப்பட வேண்டும்!
நாம் ஒவ்வொரு முறை அநீதி நடக்கும் போதும், அழிவு நடக்கும் போதும் அதை இட்டுப் புலம்புவதையே வாடிக்கையாக்குகிறோம்! தூர நோக்குடன் அந்த சந்தர்ப்பம் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையானதை செய்யாமலிருக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.