1800 களில் விஞ்ஞானிகள் தாவர வளர்ச்சிக்குத் தேவையான மண்ணில் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் எவை என்ற ஆய்வினை ஆரம்பிக்கின்றனர். 1822 களில் Carl Sprengel இனால் முன்வைக்கப்பட்ட Law of minimum விதி 1840 களில் Justus von Liebig க்கின் ஆய்வுத் தர்க்கங்கள் மூலம் இரசாயன உரத்தின் மூலம் பயிர்களின் விளைச்சலைக் கூட்டலாம் என்ற நவீன விவசாயம் உருவாகிறது.
Law of minimum விதி என்ன சொல்கிறது ஒரு தாவரத்தின் உச்சபட்ச வளர்ச்சிக்கு, விளைச்சலுக்கு அத்தியாவசிய மூலகங்கள் என்ற இரசாயனப் பதார்த்தங்கள் அவசியம்; அவற்றுள் மிகச்சிறிய அளவு, தேவையான இரசாயனம் தேவைப்படும் அளவை விடக் குறைவாக இருந்தால் அந்த தாவரத்தின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படும்.
இந்த அடிப்படையில் Liebig அதற்கு முன்னர் இருந்த உக்கல் கோட்பாடு – humus theory – இனை Liebig கேள்விக்கு உட்படுத்தி விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற இரசாயன உரம் அவசியம் என்று வாதத்தினை முன்வைக்கிறார்.
இன்று சேதன விவசாயம் ஏதோ புதிதாக உருவாக்கப்பட்டதுபோல் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களாக மனிதகுலம் மக்கி, உக்கிய உக்கலைக் கொண்டே பயிர் செய்துகொண்டிருந்தனர். 1800 களில் இதைத் தொகுத்து தாவரவளர்ச்சிக்கும் மண்ணில் உள்ள உக்கிய சேதனப் பதார்த்தங்கள்தான் அவசியமானவை என்ற humus theory ஐ முன்வைக்க 1840 அளவில் Liebig Law of minimum கோட்பாட்டினை வைத்துக்கொண்டு ஒரு வாதத்தினை முன்வைக்கிறார்.
தாவர வளர்ச்சிக்குத் தேவையான நைதரசனை வளிமண்டலத்திலிருந்துதான் பெறவேண்டும். இவற்றை லேகுமினேஸ் தாவரங்களைத் தவிர மற்றவற்றால் பெறமுடியாது. ஆகவே விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெற நாம் அதிகமாக நைதரசனை செயற்கையாக இட வேண்டும் என்று!
இந்தப் பெரும் பொய்யனின் – அதுதான் Lie Big இன் மொழிபெயர்ப்பு – இந்தக்கோட்பாடு அதிக விளைச்சலைக் கூட்டும் நவீன இரசாயன உர விவசாயப் புரட்சிக்கு வித்திட்டது.
Lie big ஒரு அசேதன இரசாயனவியலாளர்; அவருக்கு முன்னர் உலகம் உக்கல் கோட்பாடுதான் தாவரத்திற்குப் போசணைப் பதார்த்தத்தினைத் தருகிறது என்ற அறிவியலில் இயங்கிக்கொண்டிருந்தது. 1840 களில் British Association for the Advancement of Science இன் இரசாயனவியல் பகுதி அவரை அசேதன இரசாயனவியலில் பயன்பாட்டினைப் பற்றி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கிறது. அவர் சமர்ப்பித்த அறிக்கையின் பெயர் “Organic Chemistry in its Application to Agriculture and Physiology”
இந்த அறிக்கை தாவர வளர்ச்சியில் இரசாயனவியல் எத்தகைய பங்களிப்பை நல்கலாம் என்று ஆராயப்பட்ட ஒரு Monograph ஆகும். இதன் ஆரம்பப் பந்தி இப்படி ஆரம்பிக்கிறது;
“The object of organic chemistry is to discover the chemical conditions essential to the life and perfect development of animals and vegetables, and generally to investigate all those processes of organic nature which are due to the operations of chemical laws” (Bradfield, 1942).
இவருடைய ஆய்வின் நோக்கத்தில் தெளிவாக வரையறுக்கிறார்; தான் தாவரம், உயிர்களின் வாழ்க்கைக்கு அவசியமான இரசாயனவியல் நிபந்தனைகளை இரசாயனவியல் விதிகளின் அடிப்படையில் ஆராயப்போகிறேன் என்று!
இந்த நோக்கம் உயிரியல் கூறுகளைத் தள்ளி வைக்கிறது; அதாவது மண்ணில் நுண்ணங்கி என்ன செயலைச் செய்கிறது; மண்புழு என்ன செய்கிறது என்ற காரணிகளை எல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறார்.
ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டு அதற்குத் தேவையான இரசாயனத்தை அதற்குக் கொடுத்தால் அது அதிக விளைச்சலைத் தரும்; இதைத் தவிர அதைச் சூழ உள்ள உயிரினங்கள், நுண்ணங்கிகள் என்ன செயலை தாவரத்திற்கு செய்கிறது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை என்ற கருத்துப்பட தனது ஆய்வுகளை இரசாயனவியல் அடிப்படையில் மாத்திரம் ஆராய்ந்து தனது முடிவுகளை வைக்கிறார்.
அதேபோல் இதற்கு மாற்றாக ஏற்கனவே இருந்த உக்கல் கோட்பாடும் எப்படி உக்கலில் இருந்து தாவரத்திற்கு தேவையான போசணைப் பதார்த்தம் கிடைக்கிறது என்பதை தெளிவாக அறிவியல் நோக்கில் வைக்க முடியாமல் தடுமாறுகிறது. அந்தக்காலத்தில் நுண்ணுயிரியல் அதிக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆகவே மண்ணிற்கு பற்றீரியா, பங்கசு செய்யும் சேவைகள் அறியப்படவில்லை. ஆகவே Lie Big இன் கருத்து வலுப்பெறுகிறது.
மேலும் Lie Big வெறுமனே விஞ்ஞானி மட்டுமல்ல! தனது கண்டுபிடிப்பை காசாக்க வேண்டும் என்ற வியாபாரியும் கூட! இவரே உர வியாபாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எந்த அறிவியலும் அதிகமாக காசு பார்க்க வேண்டும் என்றால் உண்மையை மறைத்து ஏமாற்று உத்திகளைப் பாவிக்கும் என்பது உண்மை.
Liebig உருவாக்கிய கோட்பாடு விவசாயத்தில் விளைச்சலைப் பெற அனைத்து இரசாயனம், உயிரியல் கூறு என்று எதுவுமில்லை, அதைப் பற்றி நாம் எதுவும் கவலைப்படத் தேவையில்லை என்ற N-P-K mentality இல் விவசாயத்துறை வளரத்தொடங்கியது. உண்மையில் Liebig தனது அறிவுத்திறனால் தனது காலத்தில் தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறாக, நிபந்தனையுடன் கூடிய உச்ச பலனைத் தரக்கூடிய ஒரு உற்பத்தி முறையை உருவாக்க வித்திட்டார் என்று கூறலாம்.
Liebig கூறிய கோட்பாட்டின்படி ஒவ்வொரு தாவரத்திற்கும் தேவையான அளவு மாமூலகம், நுண்மூலகங்களை (Macro & Micro nutrients) தாவரங்களுக்குக் கொடுக்க விளைச்சல் அபரிதமாக கொடுக்கும் என்பதில் பொய் இல்லை! ஆனால் இந்த முறை தாவரம் இயற்கையாக மண்ணுடன் உறவுகொண்டு, மற்றைய தாவரங்களுடன் ஒன்றி வாழும் இயற்கைத் தன்மைக்கு எதிரானவையாக இருந்தது. இரசாயன உரங்கள் மண்ணில் நுண்ணுயிரிகளைக் கொன்று மண்ணை உப்பாக்கிக்கொண்டிருந்தது.
குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவினர்களுடனும் அளவாக உண்டு மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருந்த மனிதனை அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற போதையைக் காட்டி அவனை அதிக பணம், அதிக மன உளைச்சல் என்ற நிலைக்கு உட்படுத்தி பிறகு மன உளைச்சல் தீர தூக்க மாத்திரை கொடுக்கும் அதே நிலை நவீன விவசாயத்தில் தாவரங்களுக்கு உருவாக்கினார்கள்!
Liebig இன் கோட்பாடுகள் எப்படி Humus Theory இனை வென்றது! அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!
*************************************************************
இதை ஆர்வமாகப் படிப்பவர்கள் கீழே உங்கள் ஆர்வத்தினை comment ஆகத் தெரிவியுங்கள்! எவரும் ஆர்வமாகப் படிக்கவில்லை என்றால் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலைகளில் செலவழிக்கலாம் என்று இருக்கிறேன்! லைக் போடுவதை விட comment அவசியம்! பலரும் படிக்காமல் லைக் போடலாம்; இதைப் படித்தால் இந்தக் கடைசிப் பந்தி வரை வந்து உண்மையாகப் படித்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.