நண்பர் Kandasamy Jeyandran அவர்கள் நாம் புத்தி என்ற சொல்லிற்கு கூறிய விளக்கத்தை கேள்விக்குட்படுத்தினார். அவரது கேள்விக்கணைகளுக்கான பதிலே நீண்ட பதிவாகிவிட்டதால் இங்கு தொகுத்துள்ளோம்.
*************************
தமிழும் சமஸ்க்ருதமும் நாத்திகம் கதைப்பவர்களுக்கும், குழப்ப வாதிகளுக்கும் வேறாகவும் பிரித்துப் பார்த்து வீண்வியாக்கியானம் செய்து குழப்பம் தரும் ஒன்றாக இருக்கலாம்; ஆனால் யோக மரபில் இத்தகைய சிந்தையுடன் அணுகுபவர் யோக சாத்திரம் பற்றிய உண்மையான அறிவினைப் பெற முடியாது,
ஆகவே இந்தப்பதிவு தமிழும் சமஸ்க்ருதமும் யோக சாஸ்திர அடிப்படையில் அதிமுக்கியமானவை என்பதைப் பற்றிக் கூறும். அரசியல், சமூகவியல் பார்வையைப் பற்றி உரையாடுவது இதன் நோக்கம் இல்லை.
குறிப்பாக நூறாண்டுகளுக்கு முந்தைய யாழ்ப்பாண சைவ மரபும், தமிழ் அறிஞர்களும் இதைத் தெளிவாகப் புரிந்து வந்திருந்தனர்; பழைய சைவப் பண்டிதர்கள் தமிழும் சமஸ்க்ருதமும் இரு கண்ணென்றே கொண்டு அறிவைப் பெற்றிருக்கிறார்கள். இதற்கு கந்தபுராணத்திலேயே சான்றிருக்கிறது.
இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பும்
இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ
அவரது விவாதம் புக்தி என்று சமஸ்க்ருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லுக்கான விளக்கம் புத்தி என்ற சொல்லிற்கு எப்படி சரி என்பதாகும்.
தொல்காப்பியச் சூத்திரத்தில், எச்சவியலில்
குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல் (453)
குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல (454)
ஒரு சொல்லுக்குத் தலை, இடை, கடை என மூன்று இடம் உண்டு. அம்மூன்றினுள் ஒன்றை எவ்விடத்துக் குறைக்க வேண்டுமோ, அவ்விடத்தை அறிந்து குறைத்துச் சொல்லிப் பாவிக்கலாம்.
சமஸ்க்ருதத்தில் புக்தி என்ற உச்சரிப்பில் வரும் சொல் தமிழில் புத்தி என்று பயன்படுத்தலாம்; ஏன் புந்தி என்றும் பயன்படுத்தலாம் (புந்தியில் வைத்தடி போற்றுக்கின்றேன் - திருமந்திரம் காப்புச் செய்யுள்) முக்தி என்று வரும் சொல் முத்தி என்று பயன்படுத்தலாம், பக்தி என்று வரும் சொல் பத்தி என்று பயன்படுத்தலாம்.
இதை மொழியில் உழற்சி (free variation) என்று கூறுவார்கள். இரண்டு சொற்களும் உச்சரிப்பில் வேறுபாட்டைத் தந்தாலும் பொருள் ஒன்றாகவே இருக்கும்.
ஆகவே உழற்சிக்குரிய இலக்கணம் தெரிந்த ஒருவரால் சமஸ்க்ருதத்தில் புக்தி என்று உச்சரிக்கப்பட்ட சொல்லின் உண்மை விளக்கமான விழிப்படைந்த அறிவு என்பதை புத்தி என்ற தமிழ்ச் சொல்லிற்கும் பொருள் சொல்ல முடியும். புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல் புத்தியாகியிருக்கலாம்; புத்தி என்ற தமிழ்ச் சொல் புக்தி என்ற சமஸ்க்ருதச் சொல்லாயிருக்கலாம்.
இங்கு புத்தி தமிழ்ச் சொல்லா சமஸ்க்ருதச் சொல்லா என்று ஆராய்ந்து கொண்டிருப்பது மாமரத் தோட்டத்திற்கு போய் சுவையான பழத்தை சுவைக்காமல் இலை எத்தனை, வேர் எங்கு போகிறது என்று வீண் ஆராய்ச்சி செய்யும் அறிவாளியின் வேலை;
புத்தி என்ற சொல்லின் விளக்கம் ஒரு யோகசாதகனுக்குப் பயன்படும் விதத்தில் இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி உரையாடுவதை விட்டு விட்டு சொல்பிறப்பியல் ஆராய்ச்சி இங்கு கனியிருக்க இலை எண்ணும் வேலை!
தமிழைப் போற்றுகிறோம் என்று சமஸ்க்ருதத்தை தூற்றுவதும், உணர்ச்சிவசப்படுவதையும் விட தமிழ் இலக்கண மூல நூற்களை முறையாக கற்றால் சொல் எப்படி உருவாகிறது என்ற தெளிவு உண்டாகும்.
தமிழ் மேல் பற்று என்பது தமிழை ஆழமாகக் கற்பது; உணர்ச்சிவசப்பட்டு போற்றுவதும் சமஸ்க்ருதத்தை எதிர்ப்பதும் அல்ல! எல்லா மொழிகளும் அழகானவை! அந்த அழகை இரசித்து எமது அகத்தை செம்மைப்படுத்த வேண்டும்!
பற்று, கடும் பற்று, உணர்ச்சிகள் இவை உள்ளதை உள்ளபடி பார்க்கவிடாது! மனதை குழப்பி அறிவைத் தடுக்கும்; அறிவை வேண்டுபவர் தெளிந்த, திறந்த மனதுடன் இருக்க வேண்டும்; எந்தப் பற்றுக்களிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது! எமது அறிவிற்கு விருந்து தமிழிலும் உண்டு, சமஸ்க்ருதத்திலும் உண்டு, ஆங்கிலத்திலும் உண்டு! மொழி அறிவைக் காவும் ஊடகம்! மொழியைப் பயன்படுத்தி நாம் எமக்குள் அறிவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; ஓடத்தில் பயணிப்பதை இரசிக்காமல் ஓடத்தை தலையில் ஏற்றினால் வீண் சுமை தான்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.