முற்காலத்தில் உயர்ந்த அறிவினைப் (மேதாசக்தியைப்) பெறுவதற்காக குருவிடம் செல்லும் மாணவர்கள் தமது மனதினை அமைதிப்படுத்தி சாதனையில் முன்னேற சாந்தி மந்திரம் உபதேசிக்கப்படுகிறது.
இது மேதா சகதியைப் பற்றி உரையாடும் மகா நாராயண் உபநிஷதம், சுவேதாசுவர உபநிடதம் ஆகிய இரண்டினது சாந்தி மந்திரமாக வருகிறது.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் கற்பித்தலும், கற்றலும் நிகழவேண்டும் என்றால் நிகழவேண்டிய அமைதிக்கான நிபந்தனைகளைக் கூறுகிறது.
ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இதன் பொருள்;
ஆசிரியர் மாணவர்கள் இருவரையும் இறைவன் காப்பாராக!
நாம் இருவரும் அறிவின் ஆற்றலை அனுபவிப்போமாக!
நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக!
நாம் இருவரும் கற்றது எமக்கு பயனுள்ளதாகட்டும்!
எதற்காகவும் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷம் கொள்ளாமல் இருப்போமாக!
இந்த மந்திரம் ஆசிரியர் மாணவர் இருவருக்குமிடையிலான ஒப்பந்தம். இருவருக்கும் தமக்கு மேல் ஒருவர் - இறைவன் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். குரு தன்னை எல்லையற்ற கடவுளாக சிஷ்யனுக்குக் காட்டி ஏமாற்றி அறியாமையில் தள்ளக்கூடாது. சிஷ்யன் குரு தனது இச்சைகளை எல்லாம் பூர்த்தி செய்யக் கிடைத்த ATM என்று நினைக்கக்கூடாது என்பது இந்த வரியின் பொருள்!
அடுத்த "ஸஹ" என்ற சொற்கள் மூன்று தடவை பாவிக்கப்பட்டுள்ளது. இது இருவரும் சேர்ந்தே பொறுப்புக் கூறல் வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கிறது.
சரியான விஷயத்தை ஆசிரியன் கற்பிக்க வேண்டும், கற்பித்தல் ஆசிரியர் கடமை என்றால் அதை கற்றல் மாணவனின் கடமை! இதற்கு இருவரும் சேர்ந்து ஆற்றலுடன் உழைக்க வேண்டும். அந்த உழைப்பில் வரும் கல்வியின் பலன் இருவருக்கும் பலனுள்ளதாக இருக்க வேண்டும். அந்தப்பலனை இருவரும் அனுபவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
இறுதியாக மிக முக்கியமான விஷயம் "எக்காரணம் கொண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் துவேஷித்துக் கோபம் கொள்ளக்கூடாது" என்பதாகும்.
பலர் தாம் நினைத்தது சாதனையில் நடக்கவில்லை என்றவுடன் குருவின் தகுதியை சந்தேகிப்பதும், குருவைக் கேள்வி கேட்பதும் என்றவாறு தமக்குள் விரோத பாவம் வளர்த்து சிக்கலாக்கிக் கொள்வார்கள். குரு தகுதியற்றவர் என்றோ, அவரிடம் நமக்கு பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால் எந்தவித விரோத பாவத்தையும் மனதில் தோற்றுவிக்காமல் விலகிவிடும் மாணவன் மனதில் சாந்தியுடன் கற்கும் ஆற்றலைப் பெறுவான்.
மேலேயுள்ள மந்திரம் கற்றலுக்குரிய முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகிறது;
1) இருவரும் தமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இருக்கக் கூடாது; தமக்கு மேலே அல்லது அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற பணிவும் எண்ணமும் இருவருக்கும் இருக்க வேண்டும்.
2) கற்றலில் ஆசிரியனுக்கும், மாணவனுக்கும் புரிந்துணர்வும், ஒருவரை ஒருவர் போஷிக்கும் தன்மை இருக்க வேண்டும்.
3) இருவரும் இணைந்து ஆற்றலுடன் சிரத்தையுடன் முயற்சிக்க வேண்டும்.
4) இருவருடைய முயற்சியும் இருவருக்கும் பயன் தரவேண்டும்.
5) எக்காரணம் கொண்டும் ஒருவருக்கு ஒருவர் துவேஷம் கொண்டு தமது மனதை அழுக்காக்கிக் கொள்ளக்கூடாது. இது கற்றலை நிறுத்தி விடும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.