இன்று காலையிலிருந்து மூன்று இலங்கைத் தமிழ் அரசியல் பற்றிய பதிவுகள் பார்க்க நேரிட்டது;
மைந்தன் சிவாவின் மனோகணேசன் - ஜனகன் தொடர்பானது!
இரண்டாவது கலாநிதி குருபரனுடையது!
மூன்றாவது சோபிசனுடையது!
இந்த மூன்று பதிவுகளும் தமிழர்களின் கூட்டு மன நிலையைப் பிரதிபலிக்கும் ஒரு பதிவாகத்தான் எனது உணர்வில் தெரிகிறது!
நாம் என்ன செய்கிறோம், சிந்திக்கிறோம் என்ற விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி ஆழமாக உரையாட வேண்டி இருக்கிறது.
அரசியல் எதற்காக?
ஸ்ரீ அரவிந்தர் வந்தேமாதிரம் பத்திரிகையில் அரசியல் விடுதலை பற்றி எழுதியது ஞாபகத்தில் தோன்றியது.
அரசியல் விடுதலை (Political freedom) என்பது தேசத்தின் மூச்சு!
அது
1) சமூக சீர்த்திருத்தம்,
2) கல்விச் சீர்திருத்தம்,
3) தொழில் மேம்பாடு,
4) விழுமிய மேம்பாடு
ஆகிய அடிப்படையாக இல்லாமல் அரசியல் சுதந்திரத்தை நாடும் சமூகம் அறியாமையின் உச்சத்திலும், பயனற்ற தன்மையிலுமே இருக்கும்;
இத்தகைய முயற்சிகள் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் தான் தரும். இப்படி (விழுமியமும், தூர நோக்குச் சிந்தனையும் இல்லாமல்) தோல்விகளும் ஏமாற்றங்களும் வரும் போது நாம் அந்தத்தோல்விக்கான காரணம் தேசமும் அதன் கொள்கைகளும் பிழையானது என்ற சண்டைக்குள் செல்கிறோம்.
ஒரு மனிதன் வெற்றிக்கான அடிப்படை நிபந்தனை எதுவென்பதை அறிந்துகொள்ளாமல், தேசியத்தை வளர்ப்பதோ, தேசியத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதோ, பலமானவர்களின் அடிமைத்தனத்திலிருந்து மீளுவதோ சாத்தியமில்லை!
(Bande Mataram, Pg 266)
நாம் யாருடன் போட்டி போடுகிறோம்?
எது இலக்கு?
அதை அடைவதற்கு நாம் எமது சமூகத்தை தயார் செய்கிறோமா?
மனிதனின் பலம் என்பது பலரது மனம் ஒன்றுபட்டு ஒரு இலக்கினை அடைய முயற்சிப்பதுதான் என்பதை உணர்ந்திருக்கிறோமா?
எம்மை ஒருவன் வீழ்த்திவிடுவான் என்ற பயம் பற்றிக்கொள்ளும் போது அந்தப்பயத்தில் நாம் முழுச் சமூகத்தையும் குழப்பி இலக்கினை மறக்கச் செய்கிறோமா?
வேற்றுக்கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்த்துக்கொண்டு அதைக் கூறுபவனும் நம்மில் ஒரு சகோதரன் என்ற மன நிலையுடன் பிரச்சனைகளை அணுகி வெற்றிபெறுகிறோமா?
சமூகம் அதை அடைவதற்குரிய சீர்திருத்ததிற்கு, சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறோமா?
நாம் சிந்திக்கவேண்டிய கேள்விகள்!
அரசியல் சமூகத்திற்கானது! விழுமியத்துடன் இருக்க வேண்டும்.