இன்று யோகம் பழகுகிறோம் என்று பலரும் ஆசனம், பிராணாயமத்திற்குள் சென்று சிக்கிக்கொண்டு ஆன்ம முன்னேற்றம் பெறமுடியாமல் தவிப்பதையும், குழப்பமடைவதையும் காண்கிறோம்.
உயர்ந்த வேதாந்தம், சித்தாந்தம் பேசும் பலருக்கு சாதனை அனுபவம் இருப்பதில்லை. இதற்குக் காரணம் சாதகர்கள் தகுந்த இச்சா சக்தியும், பிராண பலமும் விழிப்படையாமையே!
இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் தனது தினக்குறிப்பில் எழுதிவைத்துள்ளதன் சாராம்சம் வருமாறு:
(யோக) சாதனையின் சரியான முறைக்கு எதிரான வழியிலேயே அனேகர் தமது சாதனையைத் தொடங்குகிறார்கள். ஆசனம், பிராணன், சித்தம், மனம், புத்தி இப்படி ஒவ்வொன்றாக சுத்தி செய்து சித்தி செய்து இறுதியாக புத்தி விழிப்பையும், இச்சா சக்தியை அடையலாம் என்று முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மையான சாதனை இதன் மறுதலை வடிவானது; இச்சா சக்தியுடன் (will power) ஆரம்பிக்கப்பட வேண்டியது. ஒருவன் இச்சா சக்தியுடன் சாதனை ஆரம்பித்தால் ஆசனம், பிரணாயாமம், கும்பகம், சித்த சுத்தி, ஏற்பாடுகள், தயாரிப்புகள் நியமங்கள் இவை எதுவும் தேவையில்லை.
இராமகிருஷ்ணர் யோகம் பயிலவேண்டும் என்று எவராவது கேட்டால் "முதலில் ஸக்தி உபாசனை செய்" என்பார், முதலில் ஸக்தியைப் பேறு பிறகு அவள் "சத்" - உண்மையினைக் காட்டுவாள் என்பார்.
ஒரு யோகியின் முதல் நிபந்தனை இச்சா சக்தியும், ஸக்தியும்.
இதற்குத் தேவையானது மூன்று நிபந்தனைகள்
முதல் நிபந்தனை உன்னை நீ நம்புவது
இரண்டாவது நிபந்தனை உனக்கு மேல் இறைவன் இருக்கிறான் என்பது,
மூன்றாவது அனைத்தையும் ஸக்தி - காளி இயக்குகிறாள் என்பது.
உன்னை நம்பி முதலில் உன்னில் இச்சாசக்தியை விழிப்படைய வைக்க வேண்டும்; பிறகு இறைவனை நம்பி ஞானத்தினை செயற்படுத்த வேண்டும்; பிறகு ஞானத்தைக் கொண்டு சித்தம், மனம் என்பவற்றை சுத்தி செய்து பிராணனையும் மனதையும் அமைதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் உடலை அம்ருதத்துவம் செய்ய வேண்டும்.
இதுவே உண்மையான யோகம்; இதுவே மஹாபந்தம், உண்மையான தாந்திரீகம்! வேதாந்தம் புத்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கிறது! தாந்திரீகம் ஸக்தியிலிருந்து யோகத்தை ஆரம்பிக்கும்!
Record of Yoga", pp. 1371-1397
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.