இன்று காலையில் அம்மா செய்தியைப் பார்த்துவிட்டு "அமைச்சர் இரண்டு வேளை சாப்பிடப் பழகச் சொல்லுகிறார், நீ ஏற்கனவே இப்படித்தானே சாப்பிடுகிறாய்" என்றார்.
சிலகாலத்திற்கு முன்னரே யோக ஸாதனைக்காக காலையும், மாலையும் இரண்டு வேளை உணவு மிதாகாரமாக உண்பது என்று முடிவெடுத்து பின்பற்றிக்கொண்டு இருப்பது உடலுக்கும், மனத்திற்கும் ஆனந்தமாக இருப்பதால் "அமைச்சர், நல்ல விஷயத்தைத் தானே சொல்லுகிறார்; வீட்டிற்குள் முடங்கி உடலுழைப்பு இல்லை என்றால் அதிகமாக உண்டால் வியாதிதானே" என்று ஆமோதித்தேன்.
இப்படி ஒரு நிலை வந்தால் நான் ஏற்கனவே தயார் என்று எனது தீர்க்க தரிசன ஆற்றலையும் உள்ளுக்குள் மெச்சிக்கொண்டேன்!
எப்படியிருந்தாலும் மனிதன் வாழ்வதற்கு அரைவயிறு உணவும், கால்வயிறு நீரும், கால்வயிறு வெற்றுவயிறாக இருக்க உணவு உண்ணப் பழகினால் இதை ஆரோக்கியமான மிதாகாரம் என்று சித்தர்கள் சொல்லுகிறார்கள். இப்படிச் சாப்பிட்ட அப்புவும், ஆச்சியும் தொண்ணூறு, நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
வீணாக பதட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு எமது ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் கிடைப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வாக வாழப்பழகுவோம்!
என்னைப் பொறுத்தவரையில் கொரோனா என்பது ஆணவம் பிடித்தவர்களுக்கு பாடம் புகட்டும் ஒரு ஞான அஸ்திரம். வெற்றி மமதையிலிருந்தவர்களின் மமதை எல்லாம் கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்கிருமியிடம் தோற்றுப்போகிறது.
இயற்கையின் விதியில் உச்சத்திற்கு செல்லும் எதுவும் மீண்டும் விழ வேண்டும் என்பது நியதி! இதை தாவோ வெற்றியின் அபாயம் என்று சொல்லும்! எவரையும் வெற்றி கொண்டு விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அடுத்து தோல்வியை நோக்கி விழுகிறோம் என்பது மறைமுக அர்த்தம்! ஆகவே மமதை இல்லாமல் ஒத்திசைவுடன், ஒற்றுமையுடன் வாழ்வதே இன்பத்திற்கு வழி!
அதுபோல் இதுவும் கடந்து போகும் என்பது இன்னொரு தத்துவம்! இப்போது உள்ள நிலையில் இந்த தத்துவங்கள் தானே எமக்கு அருமருந்து!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.