பலர் ஒரு செயலைச் செய்வதற்கு தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும், அதனால் ஏதாவது பயன் கிடைக்க வேண்டும் என்று காட்டும் ஆர்வம் செயலினை சிரத்தையாக செம்மையாகப் பூர்த்தி செய்வதில் காட்டுவதில்லை!
ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டால் தமது மனதையும் மூளையையும் அந்தப் பொறுப்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு எந்த சிந்தனையும் செலவு செய்யாமல் சொன்னபடி செய்யும் சுப்பன் போன்று செயலாற்றுபவர்கள் தமது ஆற்றலையும் வீணாக்கி, மற்றவர் ஆற்றலையும் வீணாக்குபவர்கள்.
இன்னும் சிலர் செயலுக்கு முன்னர் கூறும் வாய்ஜாலமும், ஆலாபனைகளும் செயலை செம்மையாகச் செய்து சரியான விளைவினை முடிவில் பெறுவதில் காட்டுவதில்லை!
இன்னும் சிலர் நுட்பமாக மரியாதை செலுத்துவதாக நடித்து செயலைச் செய்யாமல் ஏமாற்றுபவர்கள்!
இன்னும் சிலர் குருவையும், தெய்வத்தையும் மதித்து பக்தி காட்டுவதால் குருவும் தெய்வமும் தமது மனத்தவிப்பினை நிறைவேற்ற வந்த வேலைக்காரர்கள் என்ற நினைப்பில் தமது கடமைச் செய்யாமல் தம்மை ஏமாற்றும் முட்டாள்கள்.
இன்னும் சிலர் தமது சொந்தச் செயலிற்கும் மற்றவர்கள் உதவி என்று கேட்பதற்கு செய்வதற்கும் பாரபட்சம் காட்டி, இலாப நட்டம் பார்க்கும் கணக்கர்கள்!
இவர்கள் அனைவரும் தம்மைத் தாமே ஏமாற்றுபவர்கள்!
செயலாற்றுவது என்பது ஒரு யோகம், யோகம் என்றால் இணைப்பு, ஒரு செயலைச் செய்ய அந்தச் செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஏகாக்கிரமாக சிந்திக்க வேண்டும், இப்படிச் சீராக சிந்தித்து பின்னர் அந்தச் செயலை செய்யும் போது மனம் சீராகும்! மனம் சீராகினால் திருப்தி உண்டாகும், திருப்தி உண்டானால் மனம் மகிழ்வடையும்! மனம் மகிழ்ச்சியாக இருந்தால் மனச் சலனம் குறையும், மனச் சலனம் குறைந்தால் யோகம் சித்திக்கும்.
இப்படி எடுத்த செயல்கள் அனைத்தையும் ஒரே மனப் பண்புடன் முடிக்கும் பண்பு பெற்றவனே உண்மையான மனிதன்! மற்றவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றும் ஏமாளிகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.