எனது வாழ்க்கையின் முக்கியமான அகத் தூண்டலை ஏற்படுத்திய ஒரு புத்தகம் பற்றிய பதிவு இது!
இந்தப் புத்தகம் சிறுவயதில் நான் ஒரு விவாதப் போட்டியில் பங்குபற்றி வென்றதற்காக கிடைத்த பரிசு! பலக்காலமாக எனது புத்தக அலுமாரிக்குள் தேடிக் கொண்டிருந்தேன், நேற்றுத் தான் கிடைத்தது!
கல்வி - ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? என்பதற்கான உறுதியான வழிகாட்டல் சுவாமி விவேகானந்தரிடமிருந்து தான் கிடைத்தது.
இந்த உபதேசம் எனக்கான அகத்தேடலிற்குரிய பாதையைத் திறந்தது. சுவாமி விவேகானந்தர் கூறிய கல்வி என்பது மனதைப் பற்றி அறிதல், மனதைப் பண்படுத்துதல், மனதின் ஆற்றலை ஒழுங்குபடுத்தல் என்பதைத் தவிர எதுவுமில்லை.
மனம் என்றால் என்ன? மனதை எப்படிப் பயன்படுத்துவது? மனதின் ஆற்றல் எவை? இவையே எனது கற்றலின் ஆர்வமானது. இந்த தேடலுக்குரிய சரியான பதிலை வழங்கியவர்களே எனக்கு குருவாகவும் வாய்த்தனர்! அல்லது என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்!
மனதைச் செம்மையாக்கி ஞானம் அடையும் வழி ஸ்ரீ அகத்திய மகரிஷியின் குருபரம்பரைக்குரியது. மற்றைய சித்தர்கள் பலர் வாசி, பிராண தத்துவங்களைக் கொண்டு முன்னேறும் வழிகளைக் கூற அகத்திய மகரிஷியின் வழி ஞானத்தில் முன்னேற மனமதை செம்மையாக்க வேண்டும் என்பது.
இதற்கு ஏற்றால் போல் எனது பெயரையும் தந்தை இட்டிருந்தார்.
சுமனேந்திரன் - சு+ மன+ இந்திரன்
இந்திரன் என்றால் ஒளியும் சக்தியும் மிகுந்தவன் என்று பொருள்!
சுமன - என்றால் மேன்மையான மனம் என்று பொருள் கொள்ளலாம்.
ஆக, எனது பெயரின் பொருள்
ஒளியும் சக்தியும் மிகுந்த நல்ல மனமுடைய இந்திரன் - சுமனஇந்திரன் என்றாகிறது.
எனது குருநாதர் இதைச் சுருக்கி சுமனன் என்று மற்றவர்களுடன் உரையாடும் போது பயன்படுத்துவார்! அதையே எனது எழுத்துக்கான பெயராக வைத்துக்கொண்டேன். திருமணமான பின்னர் ஸ்ரீயும் ஸக்தியும் சேர்ந்துகொண்டது. ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆனேன்!
எனது குருநாதர் கூறுவார் தீக்ஷா நாமம் என்பது ஒருவர் தமது ஆன்ம சாதனையின் இலக்கினைக் ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக தரப்படுவது என்று!
எனக்கு எனது பெற்றோர் இட்ட பெயரே எனது அகத்தேடலுக்குரிய வழியாக ஆகிவிட்டது.
மனம் பற்றிய தேடல்! மனதை எப்படி மேன்மைப்படுத்துவது! மனதை எப்படி ஒளிமிகுந்ததாக்குவது! இது ஒருவன் கற்கவேண்டிய கல்வியின் இலட்சியம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.